விவசாயிகளின் வேதனைக் குரல்!
கேரளத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக


வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்
கேரளத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் எரிவாயுக் குழாய் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது.
இந்த எரிவாயுக் குழாய் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும்; இதனால், மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு ஏற்படும் என்பது விவசாயிகளின் கவலையாக உள்ளது.
தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு எடுத்துச் செல்ல 2012-இல் மத்திய அரசு திட்டமிட்டதை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 2014-இல் தடையும் விதிக்கப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத்தால் அந்தத் தடை விலக்கப்பட்டு விவசாயிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
இது ஒரு வேதனையான விஷயம். விவசாயம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டு மக்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையும் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
இத்தீர்ப்பின்படி, கெயில் குழாய்களைப் பதிக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. அதுவும் சந்தை விலையில் 40% நஷ்ட ஈடு விவசாயிகளுக்குக் கொடுத்தால் போதும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது மேலும் விவசாயிகளைப் பாதிக்கும். இது இவ்வட்டார மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மாநில அரசுக்கு இதில் உரிமை கிடையாது என்றும், கெயில் குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில், குழாயில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதற்கு விவசாயிகள் தான் பொறுப்பு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது வேதனையான விஷயம்.
கேரளத்தில் சாலைகளின் ஓரத்தில் பதிக்கப்படும் குழாய்களை இங்கே மட்டும் விளை நிலங்களில் பதிக்க முற்படுவது ஏன்? உதாரணமாக, ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்து கொள்வோம், அந்த நிலத்தின் நடுவில் இந்தக் குழாய்கள் சென்றால், அந்தக் குழாய்களின் மீது அந்த விவசாயி நீர் வாய்க்கால்களைக் கொண்டு செல்ல கூடாது. பிறகு எப்படி விவசாயம் நடத்த முடியும்? அந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் பாதிக்குப் பாதி தரிசாக விட்டுவிடும் அவலம் ஏற்படும்.
எரிவாயுக் குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு "கிரேன்' உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
கேரளத்தில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ. எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.
குழாய்களை விளைநிலங்கள் வழியாகப் பதிக்காமல் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கில் சரியான தீர்வு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதில்தான் விவசாயிகளுக்குப் பாதகமான தீர்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது.
இதற்குமேல் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்யவேண்டியதுதான் முக்கிய கடமை மட்டுமல்லாமல் அடுத்தகட்ட நகர்வும் கூட. எண்ணூர் - மதுரை 615 கி.மீ. எரிவாயு குழாய் திட்டமும் நடைமுறைப்படுத்த பணிகள் துவங்கியுள்ளன.
திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட விவசாய நிலங்களில்தான் குழாய்களைப் பதிக்க ஆரம்பப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ஏரி மாவட்டமான ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயமே அழிந்துவிடும். படிப்படியாக, விளைநிலங்கள் வழியாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மதுரை வரை பாதிப்பை ஏற்படுத்தும் இந்த எரிவாயுக் குழாய் திட்டமும் வர இருக்கிறது.
இம்மாதிரியான எரிவாயுக் குழாய்ப் பிரச்னை ஆந்திரத்தில் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மாமிடிகுடுரு என்ற கிராமத்தில் விஜயவாடா அருகில் உள்ள லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும்போது 4 மீட்டர் ஆழத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த இந்த எரிவாயுக் குழாய்கள் துரு ஏறி தீப்பற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. சிலர் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர்.
2012 ஜூன் 28 அன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தீ ஜுவாலைகளாக எரிந்து அப்பகுதியையே நாசப்படுத்தியது. இப்படியெல்லாம் விபரீதங்கள் விளையக்கூடிய நிலைமையும் எரிவாயுக் குழாய்களில் ஏற்படுவதுண்டு. இந்த விபத்துக்கு முன்பே அந்த கிராம மக்கள் இது குறித்து நிர்வாகத்திற்கு தெரிவித்தபோது நிர்வாகம் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளாததால் இந்த விபத்து ஆந்திரத்தில் நடைபெற்றது.
இந்த விபத்தினால் மக்களே ஆர்ப்பரித்து கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மக்களின் கொந்தளிப்பை மட்டுமே குறைகூறிவிட முடியாது. உயிர் மீதான பயம் கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கத்தானே செய்யும்?
கொங்கு மண்டலத்தில் 5,842 விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ள பி.எம்.பி. சட்டம் 2011-ஐ திருத்த வேண்டும். இதில் மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரி எரிவாயுக் குழாய் இணைப்புகள் சாலையின் ஓரத்தில்தான் மற்ற மாநிலங்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களின் ஊடே செல்லவேண்டிய அவசியம் என்ன?
மகாராஷ்டிர மாநிலத்தில் மஹிம் - தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும், குஜராத்தில் ஆமதாபாத் - பகோதரா மற்றும் காந்திநகர் - சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும், உத்தரப் பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி - கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும், குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
தமிழக உரிமைப் பிரச்னைகளை மட்டும் தொடர்ந்து கவனித்தால், உச்சநீதிமன்ற வழக்குகளில் நியாயங்கள் கிடைப்பதிலும் தாமதம். அப்படியே தீர்ப்பு வந்தாலும் எந்தப் பயனும் தமிழகத்திற்கு இதுவரை கிடைத்ததில்லை.
காவிரியில் தீர்ப்பு வந்தது, முல்லைப் பெரியாறில் தீர்ப்பு வந்தது, தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடக்கவிடாமல் உச்சநீதிமன்றம் தடுத்தது. மீனவர் பிரச்னையும், கச்சத் தீவும் தீர்ப்புகள் வந்தபாடில்லை.
சேது கால்வாய் திட்டமும் தடுக்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் திட்டத்திலும் போராட்டக்காரர்களுக்கு எவ்வித தீர்வும் உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. குமரி மாவட்ட நெய்யாறு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் தொடர்கிறது.
தமிழகத்தில் கூடங்குளம் பிரச்னை, தேனியில் நியூட்ரினோ, தஞ்சை டெல்டாவில் மீத்தேன், சாயம் மற்றும் தோல் கழிவுகள் தேக்கம், பெங்களூர், கேரளக் குப்பைகளை தமிழக எல்லைகளில் வந்து கொட்டுவது போன்று பல சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குப் போராடியும் பயன் இல்லை; பிரச்னைக்கு விடையும் இல்லை.
தமிழகம் ஒரு குப்பைக் கூடை என்று மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நினைக்கின்றன. சேலம் இரும்பாலையிலும் பிரச்னை, நெய்வேலி பிரச்னை, ஊட்டி போட்டோ ஃபிலிம் ஆலை சிக்கல், நீர் ஆதாரங்கள் பிரச்னைகள், அண்டை மாநிலங்களோடு கண்ணகி கோட்ட பிரச்னை, பழவேற்காடு பிரச்னை, ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, நாசமாக்கப்பட்ட காட்டு வளங்களும், கடல் வளங்களும், அன்னிய குளிர்பானங்கள் என ஒரு நீண்ட பட்டியலான தமிழகத்தின் உரிமை ஆதார பிரச்னைகள் நிறைவேற்றாமலும், சிக்கலிலும், நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கிடப்பிலும் உள்ளன.
அரசுகளால் ஏற்படும் அநீதிகளுக்குப் பரிகாரம் காணும் ஜனநாயக வழிபாட்டுத் தலங்கள் நீதிமன்றங்களே. அங்கும் நீதி மறுக்கப்பட்டால் அப்பாவி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வேறு புகலிடம் ஏது? கெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல விவசாயிகள் இனி எங்கு சென்று தங்கள் வேதனைக் குரலை முறையிடுவார்கள்?
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மறு சீராய்வு மனு, விரைவில் விசாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதற்கு, முறையான வாதம் முன்வைக்கப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்தப் பிரச்னை குறித்த சரியான புரிதலை, தமிழக அரசின் சார்பில் வாதிடும் வழக்குரைஞர்கள் எடுத்தியம்ப வேண்டும்.
தமிழக விவசாயிகளின் வருங்காலமும், எதிர்பார்ப்பும் தமிழக அரசின் வழக்குரைஞர்களிடமும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கையிலும்தான் இருக்கின்றன. விவசாயிகளின் வேதனைக் குரலுக்கு சரியான விடை கிடைக்க வேண்டும்!
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.
அரசுகளால் ஏற்படும் அநீதிகளுக்குப் பரிகாரம் காணும் ஜனநாயக வழிபாட்டுத் தலங்கள் நீதிமன்றங்களே. அங்கும் நீதி மறுக்கப்பட்டால் அப்பாவி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வேறு புகலிடம் ஏது? கெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல விவசாயிகள் இனி எங்கு சென்று தங்கள் வேதனைக் குரலை முறையிடுவார்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...