டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அறிவியல் துறையும் பெண்களும்...

நாட்டின் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கு இருந்தாலும், அறிவியல் துறையில் அதை அதிகரிக்கச் செய்வது இத்தருணத்தில் மிகவும் அவசியமாகும்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

எம். அருண்குமார்

நாட்டின் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கு இருந்தாலும், அறிவியல் துறையில் அதை அதிகரிக்கச் செய்வது இத்தருணத்தில் மிகவும் அவசியமாகும். பண்டைய காலத்தில் ஆண்களோடு பெண்களும் சமநிலையில் இருந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு இடைப்பட்ட காலத்தில் பெண்கள் தாழ்வான நிலையிலேயே வைக்கப்பட்டிருந்துள்ளனர். தற்காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
 வேத காலத்திற்கு முன்பு விரல் விட்டு எண்ணக்கூடிய சில பெண்களே சில துறைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். மகிழ்ச்சியான வீடு அமைய வேண்டுமானால் பெண்களுக்குக் கல்வி அவசியம் தேவையென அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டு வரையில் பெண்களுக்கு கல்வி என்பது கிடைத்தற்கரியதாக இருந்துள்ளது.
 பல துறைகளில் உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வந்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் உயர்கல்வி பெறுவது குறைவாகவே இருந்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சிறந்த அறிவியல் விஞ்ஞானி விருதைப் பெறுவதில் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்துள்ளது.
 இளம் விஞ்ஞானி விருது 1987-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரையில் 133 பேர் அவ்விருதை பெற்றுள்ளனர். விருது பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 17.
 2010-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகத்தில் உள்ள கண்டங்களில் அனைத்து நாடுகளிலும் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்று 6 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் பெண்களுக்கு ஆண்களைவிட குறைவான சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 பெண்கள் உயர்கல்வி பயின்றாலும், சமுதாய பிரச்னைகள், குடும்பச் சூழ்நிலை போன்ற காரணங்களால் வேலைக்குச் செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. கிராக்கோ பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு மேரி கியூரி பெண் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 அறிவியலில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணாகிய உயிரி வேதியியல் துறையைச் சேர்ந்த கமலா ஷோனியும் அதே பிரச்னையை சந்தித்துள்ளார். பாம்பே பல்கலைக்கழத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ்-இல் முதுகலைப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
 பல்கலைக்கழக தகுதி பட்டியலில் முதலிடத்தை அவர் பிடித்திருந்த போதிலும், அவர் பெண் என்பதால் அவரது விண்ணப்பத்தை விஞ்ஞானி சி.வி. ராமன் நிராகரித்துள்ளார். பிறகு சி.வி. ராமனை சந்தித்து அவரிடம் போராடி கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
 ஆனாலும், அவர் பகுதி நேர முறையில் தான் ஆராய்ச்சிக்கு சேர அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு கமலாவின் விடாமுயற்சி, உழைப்பினைப் பார்த்த சி.வி. ராமன் அவரை முழு நேர ஆராய்ச்சி படிப்பில் சேர அனுமதித்துள்ளார்.
 சி.வி. ராமனின் மாணவியாக இருந்தவர் இந்திய இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளர் அன்னா மாணி. இவர் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் துணை இயக்குநராகப் பணி புரிந்தவர். இவர் சி.வி. ராமனிடம் ஆராய்ச்சி படிப்பு படித்தபோது ஆராய்ச்சிக் கூடத்தில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 அறிவியல் துறையில் பெண்கள் வாய்ப்புகளைப் பெற பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளனர். என்னதான் பெண்கள் கல்வி கற்று வேலை வாய்ப்பு பெற்றாலும், அவர்கள் தங்களுடைய குடும்பம், குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.
 தங்களுடைய பணியில் தங்களை உயர்த்திக் கொள்ள ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளதாக 1975-ம் ஆண்டுக்கு முன்பு பாபா அணு ஆராய்ச்சி மையம் சார்பாக நடந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதற்குக் காரணம், பெண்களுக்கு உள்ள சமூக பிரச்னைகளும், அவர்களுடைய குழந்தைகளைப் பராமரிக்க போதிய வசதி பணிபுரியும் இடங்களில் இல்லாத நிலையும்தான்.
 இருந்தபோதிலும், பெண் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தான் வருகிறது. ஆனாலும், பெண்களுடைய பெற்றோர்களின் வறுமை, அறியாமை, சமூக பிரச்னைகள், பெண்களுக்கு உள்ள தனிப்பட்ட குடும்பச் சூழ்நிலை போன்ற காரணங்களால் கல்வி பெறுவதில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
 இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் 2004 கணக்கின்படி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் 4,350 விஞ்ஞானிகளை வேலைக்கு அமர்த்தியதில் பெண்கள் 753 பேர் மட்டுமே.
 ஐ. நா. சபை சார்பாக 14 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அறிவியல் சம்பந்தமான படிப்புகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி (பி.எச்டி.) பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பெண்களின் சதவீதம் முறையே 18, 8 மற்றும் 2 ஆகும். இதில், ஆண்களின் சதவீதம் முறையே 37, 18 மற்றும் 6.
 அதனால், அறிவியல் சம்பந்தமான படிப்புகளில் ஆண் மற்றும் பெண்களின் பங்கு சமமாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் பிப்ரவரி 11-ஆம் தேதியை அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. சபை அறிவித்து அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
 அறிவியல் துறையில் பெண்கள் ஈடுபட அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்காக பல்வேறு சலுகைகள், ஆராய்ச்சி உதவித் தொகை வழங்க வேண்டும்.
 மேலும், தங்களுடைய குழந்தைகளைப் பராமரிக்க பெண்களுக்குத் தேவையான வசதிகளை பணி செய்யுமிடத்தில் ஏற்படுத்தித் தரும் பட்சத்தில், பெண்கள் அறிவியல் துறையில் மேலும் அதிக எண்ணிக்கையில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.
 
 அறிவியல் துறையில்
 பெண்கள் மற்றும் சிறுமிகள்
 சர்வதேச தினம் - பிப்ரவரி 11
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.