உள மாசு முதலில் ஒழியட்டும்!
கடவுளை நோக்கிக் கடுந்தவம் புரியத்தொடங்கினான் ஒருவன். அவனைப் பார்த்த அடுத்த வீட்டுக்காரன் போட்டிக்குத் தொடங்கினான்.


கடவுளை நோக்கிக் கடுந்தவம் புரியத்தொடங்கினான் ஒருவன். அவனைப் பார்த்த அடுத்த வீட்டுக்காரன் போட்டிக்குத் தொடங்கினான். கடுந்தவம் நெடுந்தவம் ஆனது.
தவத்தினை மெச்சி அருள்புரிய வந்த இறைவன் வேண்டுவது யாது என வினவினான்.
தன்னைவிடவும் மற்றொருவன் மிஞ்சிய வரத்தைப் பெற்றுவிடக்கூடாது என்று கருதிய முதலாமவன், போட்டிக்குத் தொடங்கிய பக்தன் என்ன வேண்டுகிறானோ, அதனைப்போல் இரண்டு மடங்கு எனக்கு வேண்டும் என்று கேட்டான்.
அங்ஙனே ஆகுக என்று அருளிய இறைவன், அடுத்தவனிடம் சென்று வினவினான். அவனோ, முன்னவன் கேட்ட வரம் யாதெனக் கேட்டான்.
இறைவன் சொல்ல, சற்றே யோசித்துவிட்டு, இறைவா, இந்த உலகை ஒரு கண்ணாலேயே பார்க்க முடிகிறபோது இன்னொரு கண் மிகை. எனவே, எனக்கு ஒரு கண் போதும். மற்றொரு கண் பார்வையை இழக்கச் செய் என்றான். அங்ஙனே ஆகுக என்றருளிவிட்டு, இறைவன் மறைந்தான்.
யாரோ யாருக்கோ சொன்ன இது, வெறுங்கதையன்று. நாள்தோறும் நடக்கும் நாட்டு நடப்பினைக் காட்ட வேண்டி யாரோ கட்டிய கதை உலகிற்கு ஓர் உண்மையைக் காட்டிய கதை.
ஆக, இந்தக் கதையில், மொத்தம் மூன்று கண்களை இந்த மானுடர்கள் இழந்ததுதான் மிச்சம்.
நாளும் இறைவன் முன்னிலையில் பொதுநலம் குறித்து வேண்டாவிடினும் பரவாயில்லை, தன்னலங்குறித்து வேண்டினாலும் தவறில்லை, தன்னைவிடவும் இன்னொருவன் வாழ்ந்துவிடக் கூடாது, அவன் ஒழிய வேண்டும் என்பதான பிரார்த்தனைதான் கொடுமை.
வீடு தொடங்கி நாடு வரை வேகமாய்ப் பரவி வரும் இந்த வியாதியினால் நாளுக்கு நாள் ஆவிகளை இழப்பவர்களாக மானுடர்கள் ஆகிவருவது அவலம்.
தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்கள் பெற்றுவிடக் கூடாது என்கிற மோசமான உணர்ச்சி மனித மிருகங்களைத் தவிர, வேறு எந்த உயிருக்கும் இருப்பதாய்த் தெரியவில்லை. இதற்குப் பொறாமை என்று பெயர் சொல்லுகிறார்கள். அது பொருத்தமானதன்று.
பொறுமைக்கு எதிர்ச்சொல்லாகப் பொறாமையைக் கருத இடமுண்டு. சிறுமை பொறாது பொங்கி எழுகிற அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக அது ஆகிவிடும். எனவே, இதற்கென்றே பொருத்தமான சொல் ஒன்றை ஆழச் சிந்தித்து அழுத்தமாகப் புலப்படுத்துகிறார் வள்ளுவப் பேராசான்.
வெள்ளிக்கிழமைதோறும் வீதிகளில் உடைபடும் தேங்காய்களும், பூசணிக்காய்களும் சொல்லுவது இந்த அழுக்காற்றின் நிலைப்பாட்டைத் தானே!
புதிதாய் முளைக்கும் கட்டடங்கள் முன்பு, பானையை முகமாக்கி, வைக்கோலில் வயிறு செய்து, பழைய சட்டையைப் போட்டு மனிதப்புனைவாய் ஒரு பொம்மையை நிறுத்திவைப்பது வேறு எதற்கு?
மந்திரம், தந்திரம், எந்திரம் என்றெல்லாம் ஆன்மிகத்திற்கு ஒவ்வாத செயல்பாடுகளை நோக்கி இந்த நவீன காலத்திலும் மனிதனை நம்பச் செய்து ஓடவைப்பது இதுதானே!
பொன்னை, பொருளை, புகழை, இன்னும் உலகில் உள்ள எல்லாவற்றையும் தனதாக ஆக்கிக்கொள்ளச் செய்யும் நுகர்வு வெறியைவிடக் கொடுமையானது, இந்த அழுக்காறு என்னும் அழிவு வெறி.
போட்டி எனும் போர்வை போர்த்துக்கொண்டு வீட்டுக்குள்ளும் நாட்டுக்குள்ளும் நுழையும் விஷக்கிருமியான இது, நாளடைவில் உள்ளீடற்று அனைத்தையும் அழித்துவிடுகிற ஆபத்து மிக்கது. இது தனித்தன்மை ஒழியத் தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் சூனியம் ஒத்தது.
அகப்பகையாய் மெல்ல முளைத்துப் புறப்பகையாய் வெடித்தெழச் செய்து மனிதர்களின் அன்பை நாளும் நலியச் செய்து, ஒன்றுமறியாததுபோல் உள் ஒளிந்துகொண்டிருக்கும் நன்றற்ற ஒன்றின் பெயர் அழுக்காறு.
அது, தன்னையொத்த மனிதனின் வளர்ச்சி காணப் பொறுக்காத கயமையின் வெளிப்பாடு; தனி மனித அளவில் தோன்றி ஒட்டுமொத்த மனித குலத்தின் பேரழிவுக்குத் துணைபோகும் தீய குணம்.
தூய சக்திகளையும் செயல்படவிடாத தீய சக்தியான அழுக்காறு என்பது, ஒற்றைச்சொல் போலத் தோன்றினாலும் இது இரட்டைச் சொற்களின் கூட்டு. அழுக்குஆறு எனப் பிரிக்க விரியும் சொல்லின் பொருள், உலகத்து ஒட்டுமொத்த அழுக்குகளையும் உள்புக விடும் வழி என்று
அமைகிறது.
இதனை அறவே நீக்குவது அறம். அறமல்லாத அனைத்திலும் இருந்து அறவே விடுபடுவது அறம். அறமல்லாதது எது? அழுக்கு மாசு என்று மற்றொரு பெயர் அதற்கு உண்டு.
நில மாசு, நீர் மாசு, காற்று மாசு என்றெல்லாம் பேசும் காலத்திற்கு வெகுமுன்பே உள மாசு என்று இதனை நுணுக்கமாகக் காட்டிநிற்கிறது திருக்குறள்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்று அழுத்தந்திருத்தமாய் அது வலியுறுத்திக் காட்டுகிறது.
உள மாசு முதலில் ஒழிந்தால், உலக மாசுகள் பெரும்பாலும் ஒழிந்தே போகும்
அல்லவா?
தன்னைப்போல் உலகில் உள்ள அனைத்தையும் அனைவரையும் கருதுகிற உள்ளம் இருந்தால், ஒருவன் சுற்றுப்புறத்தை மாசாக்குவானா?
புற மாசுகளைப் போக்க எத்தனையோ அறிவியல் நூல்கள் விளக்கம் அளிக்கின்றன. அதுபோல், அக மாசினைப் போக்க அறநூலான வள்ளுவம் என்ன வழி
காட்டுகிறது?
புறம்தூய்மை நீரான்
அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும் - என்கிறது.
வாய்மை எனப்படுவது யாது?
வாய்மை எனப்படுவது
யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல் } என்று சொல்கிறது வள்ளுவம்.
தீமை நிறைந்த செயல்களுக்கெல்லாம் தாய்மையாவது தீமை உடைய சொல்தான். தீயினும் தீய பயக்கும் தீமை இது என்பதால்தான், நெருப்பு விறகையோ, புல் பூண்டுகளையோ தின்றுவிடுவதுபோல, இது நற்செயல்களைத் தின்றுவிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறார் நபிகள் நாயகம். இது எதனால் வருகிறது? எப்போது வருகிறது? அழுக்காறு பிறக்கிறபோதுதான்.
அறநூலாகத் திருக்குறளைத் தந்த வள்ளுவப் பேராசான், உள நூலாகவும் அதனை உருவாக்கியிருக்கிறார் என்று தெளிய இதற்குப் பதில் கண்டால் போதும்.
உள்ள மாசான அழுக்காறானது ஒன்றுபோலத் தோன்றினாலும், அது நாலாபுறத்திருந்தும் நம்மை நோக்கி விழுங்க என்றே விரைந்து வருகிற மாயப் பூதம்.
அது, ஒன்றல்ல, நான்கு என்பதை வள்ளுவர் வரிசைப்படுத்தியே காட்டிவிடுகிறார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் - என்பது குறள்.
அழுக்காறு போலவே அடுத்து வருகிற சொற்களையும் நாம் வழக்கமான நிலையில் பொருள் கொள்ளுதல் தகாது. அவா என்பது பேராசையன்று, வெகுளி என்பது கோபமும் அன்று, அவற்றையெல்லாம் கடந்த நிலை.
இந்த இடத்தில் மகாகவி பாரதி கூறிய பெரிதினும் பெரிதுகேள், ரெüத்திரம் பழகு என்ற மந்திரத் தொடர்கள் ஒத்த புதிய ஆத்திசூடி வரிகளைப் பொருத்திப் பார்த்தால் நுட்பம் புரியும்.
எது கிடைப்பினும் அடங்காப் பெருவிருப்பு, அவா. வெறுப்புகளின் உச்சத்தில் பிறந்த கொடுவிருப்பு அது. அ என்று மெல்லத் திறந்த வாயைச் சொல்லி முடிக்கவிடாமல் அழுக்காற்றை நோக்கி வா என்று வரவேற்கும் பெருவாசல், அவா. அது அழுக்காற்றின் துணைப்படை.
இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று தூண்டி, மனத்தைத் தீமையின்பால் சேர்த்துவிடும் தூண்டில். அது அறவே துண்டிக்கப்பட வேண்டியது என்பதால்தான், அவா அறுத்தல் என்கிறார் அவர்.
அதனைத் தொடர்ந்து வெளிவருவது வெகுளி. அது கோபம் இல்லை, ரெüத்திரமும் இல்லை, சேர்ந்தாரைக் கொல்லும் சினத்தைவிடவும் கொடியது. வெகுளாமை நமக்கு வேண்டிய அறம் என்று அவர்தரும் தெளிவை எய்த விடாமல் அடுத்து வருவது இன்னாச்சொல்.
இது இனிய சொல்லுக்கு எதிர்ப்பதம் என்று கருதிவிடக் கூடாது. வாய்மைக்கும் தூய்மைக்கும் வெடிவைக்கும் பேய்க் குணம் இதற்கு உண்டு. இன்னாச் செயல் புரிய எல்லாரையும் தூண்டிவிடுகிற வன்முறையின் ஊற்றுக்கண் இது.
ஆக, அழுக்காறு உள்புகுந்த அடுத்த கணமே, அவா விரியும்; அடைய முடியாத பொழுது வெகுளியாய் அது வெளிப்படும். தாங்க முடியாத தருணத்தில், அது இன்னாச்சொல்லாய்ப் பிறப்பெடுத்து எல்லா அறங்களையும் இல்லாதாக்கிவிடுகிற பொல்லாப்பாவியாக, மனிதனை நிறுத்திவிடும்.
அதனால்தான் இந்த அழுக்காறினை, பாவி என்று வரையறுத்துக் காட்டுகிறார் வள்ளுவர். இந்த இடத்தில் வள்ளுவரின் உன்னதத் தன்மையினையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உலகில் எந்தவொரு மனிதனும் பாவியாய்ப் பிறப்பதில்லை என்பதே நமது நாட்டுத் தத்துவம். அதிலும் தெய்வத்தன்மை ஒத்ததாய் மானுடப் பிறப்பைக் கருதும் வள்ளுவர், மனிதனை ஒருபோதும் பாவி என்று ஒதுக்குபவர் அல்லர்.
ஆயினும், மனிதனைப் பாவியென ஆக்குவது இந்த அழுக்காறு என்பதால், அழுக்காறு என ஒரு பாவி என்று விளிக்கிறார்.
அது ஏன் பாவியாகிறது? அது எல்லாப் பாவச் செயல்களையும் செய்து செல்வம் குவிக்கச் செய்கிறது. அச்செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, புகழ் முதலிய அனைத்தையும் ஓரிடத்தே குவித்து அனைத்து அதிகாரங்களையும் வழங்கிவிடுகிறது.
ஆயினும் என்ன, கொடுப்பதுபோல் கொடுத்து அனைத்தையும் அழித்து, அதற்குரியவனையும் இல்லாதவனாக, பொல்லாதவனாக ஆக்கிவிடுகிறது.
அதனால்தான்,
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் - என்கிறார் வள்ளுவர்.
இதற்குப் பரிமேலழகர், தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும் என்று விளக்கம் அளிக்கிறார். அதனால்தான் இறைத் தொண்டிற்கு முன்பு இந்த நிதி சால சுகமோ என்று வினவுகிறார் தியாகராஜர்.
அதனால்தான், உயிரினும் பெரிதாக ஓம்பக்கூடிய ஒழுக்கங்களுள் தலையாயது என, அழுக்காறாமையை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
இந்த இயல்பு பிறழ்கிறபோது அதனைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதுதான் மனிதப் பண்பு. சோம்பேறித்தனத்தால் அதைத் தவறவிட்டுவிட்டு, முயன்று முன்னேறுவோரைப் பார்த்துப் பொறாமைப்படத் தொடங்கினால், வந்துவிட்டான் உங்களுக்குள்ளும் அந்த அழுக்காறு எனும் ஒரு பாவி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...