/

பாரதி ஒரு தைல தாரை

காலமெனும் சிற்பி செய்த கவிதைத் தாயின் தலைமகன் மகாகவி பாரதி, விடியவே விடியாது என நினைத்திருந்த பொழுதை, விழிப்பதற்கு முன்னமே விடிய

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:40 am

தி. இராசகோபாலன்

காலமெனும் சிற்பி செய்த கவிதைத் தாயின் தலைமகன் மகாகவி பாரதி, விடியவே விடியாது என நினைத்திருந்த பொழுதை, விழிப்பதற்கு முன்னமே விடிய வைத்தவன். முடியவே முடியாது எனப் படுத்திருந்த சரித்திரத்தை, நெம்புகோல் போட்டு நிமிர வைத்த சாதனைக் கவிஞன். விரிசல் விட்டுக் கிடந்த இந்திய தேசத்தை, எழுத்தாணி என்னும் ஊசி கொண்டு தைத்த சரித்திர நாயகன்தான் அந்தக் கரிசல்காட்டுக் கவிஞன்.
 விடுதலை வானத்தில் எழு ஞாயிறு தோன்றுவதற்கு முன்னமே எழுந்த விடிவெள்ளி மகாகவி சுப்பிரமணிய பாரதி. கவிஞர் சிற்பி பாடியதுபோல்,
 சோம்பல் முறிப்பதற்கும்
 சோதிடம் பார்த்துக்
 கொட்டாவி விடவும்
 இலக்கணம் தேடிச்
 சொப்பனங்களின்
 ஒப்பந்தக் குவியலாய் இருந்த
 இலக்கியப் பூமியை
 அடிவாரம் வரையிலும்
 புரட்டியெடுத்த
 ஊழிப் பிரளயம் பாரதி
 எனப் பாட்டுலகில் ஒரு புதிய பூபாளம் பாடியவன் அந்த மகாகவி.
 பாரதத்தில் ஒரு தனித் தீவாகத் திகழவில்லை பாரதி. ஒரு தைல தாரையாகத் திகழ்ந்தான். குளத்துத் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விட்டால், அதே இடத்தில் கரைந்துவிடும். ஆனால், அதே தண்ணீரில் ஒரு சொட்டுத் தைலத்தை விட்டால், அந்தக் கிணற்றின் பரப்பளவு முழுவதும் தைலத்தின் ஆதிக்கம் பரவி நிற்கும். பாரதி ஒரு தைலந்தானே?
 பாரதத்தின் ஒரு மூலையிலிருந்து அவன் கர்ஜித்தால், அது இமயத்தின் நெற்றியிலேயும் எதிரொலிக்கும், குமரிக் கடலிலேயும் அலை எழுப்பும்.
 தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. அதே உணர்வலைகள் குவாலியரில் வாழ்ந்த கவிஞர் பாலகிருஷ்ண சர்மாவுக்கும் (புனைப் பெயர் நவீன்) இருந்ததால், வீதியில் எறியப்பட்ட ஓர் எச்சில் இலையில் இருப்பதை, பசியெடுத்த ஒருவன் சுரண்டி எடுப்பதைப் பார்க்க நேர்ந்தால், அன்றைக்கே இந்த உலகத்தை நெருப்பு வைத்து எரிப்பேன் என்றார்.
 பெரிய மனிதர்கள் ஒரே விதமாகவேச் சிந்திப்பர் என ஆங்கிலத்தில் ஓர் பொன்மொழி உண்டு (Great men think alike). ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே எனப் பரந்து கிடக்க வேண்டிய பாரதம், விரிசல் விட்டுக் கிடப்பதற்குரிய காரணத்தையும் பாடினான்.
 பாரதியின் சம காலத்துக் கவிஞர் பாபு பாரதேந்து ஹரிச்சந்திரா எனும் உத்தரப் பிரதேசத்துக் கவிஞரும், பாரதியின் தைல தாரை பரவியதால், சேர வாரும் பாரத மாதாவின் புத்திரர்களே, அன்றெனில் நொந்து நூலாகி வெந்து விடுவோம் என எச்சரித்தார்.
 மாந்தோப்பிலிருந்து ஒரு குயில் குரலெழுப்பினால் அடுத்த மரத்திலிருந்த குயிலும் உடன் பின்பாட்டுப் பாடும். தொடர்ந்து தோப்புக் குயில்கள் ஒவ்வொன்றும் கூவத் தொடங்கும்.
 குயில் பாட்டைக் கேட்ட மகாகவி பாரதி என்ற பாட்டுக் குயிலும், குக்குக்கு வென்று குயில்பாடும் பாட்டினிலே தொக்க பொருள் எல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே, அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன், விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என் செய்கேன் எனப் பாடுகின்றார்.
 தமிழ்க் குயிலாகிய பாரதி, செப்பும் மொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள் எனப் பாடியவுடன், உருதுமொழிக் குயிலாகிய இக்பாலும் கண்கள் ஆயிரம் என்றாலும் பார்வை ஒன்றே ஒன்றுதான் எனப் பாடுகிறார் (There should be one sight among thousand eyes).
 குயில், ஒரு கிளையிலிருந்து ஒரு பாட்டைப் பாடிவிட்டால் அதே கிளையிலிருந்து மறு பாட்டைப் பாடாது. அடுத்த கிளையில் இருந்துதான் தொடங்கும்.
 அதுபோலவே பாரதி, பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு, பாரினில் இதற்கு வேறிலை ஈடு என்று பல்லவியைத் தொடங்குகிறான். அந்தப் பல்லவிக்கு அனுபல்லவியைப் போல் பாரினிலேயே நேர்த்திமிக்க நாடு பாரதநாடு, அந்தத் தோட்டத்தில் களித்துக் கானம் பாடும் புல்புல் பறவைகள் நாங்கள். தொடர்பு அற்றும் எங்களுக்குள் சகோதரத்தன்மை உண்டு எனக் கவி அல்லாமா இக்பால் தொடர்ந்து பாடுகிறார் (India is the best country in the world.  We are the Bulbuls of this garden. The religion does not advocate hatred among ourselves).
 மகாகவி பாரதி யுக மாற்றம் விரைவில் வரும் என்பதை ஊகித்து, அச்சமில்லை, அமுங்குதல் இல்லை, ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம், அண்டஞ் சிதறினாலும் அஞ்சமாட்டோம், கடல் பொங்கி எழுந்தாலும் கலங்கமாட்டோம்... வீழ்க கலியின் வலியெல்லாம், கிருதயுகந்தான் மேவுக என முரசறைந்தான்.
 பாரதி விட்ட ஒரு துளி தைலம், மூலிகைகளுக்கே தாய் வீடாகிய கேரளத்திலும் தைல தாரையாகப் பரவுகிறது. அதனால் ஜி என்று ஒற்றை எழுத்தாலே அழைக்கப்படும் ஜி. சங்கர குருப்பு, நாளையிந்த விடுதலையின் சிறை விரித்த காற்றாலே, நீள் அலையின் ஏழ்கடலும் நிமிர்ந்தெழுமே ஆர்வத்தால், நமை யடுத்த நாடு பல நலம் வருக என்று ஆர்த்தாடும். போ, விலகிப்போ, அச்சமே இனி ஜெயமே, புதுயுகம்தான் என அறைகூவல் விடுக்கின்றார்.
 மகாகவி பாரதி சோவியத் நாட்டின் அக்டோபர் புரட்சியை வரவேற்றுப் பாடியதுபோல், சங்கர குருப்பு அபிசீனியாவின் அடிமைத்தனம் நீங்கி, விடுதலை பெற எழுச்சிப் பாடல் பாடினார்.
 மகாகவி பாரதியாகிய தமிழ்க் குயில் மகாத்மா காந்தியடிகளை வாழ்க நீ எம்மான் எனத் தொடங்கி பாரத தேசந்தன்னை வாழ்வித்த காந்தி, மகாத்மா, நீ வாழ்க, வாழ்க என மனமார வாழ்த்தி முடிப்பார்.
 அதுபோலவே வள்ளத்தோள் நாராயண மேனன், என்ட குருநாதன் எனும் தலைப்பில், மகாத்மே, காந்தியே, புத்தனுக்குப் பின், ஏசுவுக்குப் பின் அன்புப் பிழம்பாய் வந்தவர் நீதான் மறக்கள வேள்வியை அறவழியில் செய்து முடிக்கப் போகின்றவர் தாங்கள்தான். உலகத்துக்கே குரு நீங்கள்தான் எனப் பாரதி தலைமட்டம் வரை உயர்த்திய காந்தியடிகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடிக்கிறார் வள்ளத்தோள் நாராயண மேனன்.
 பாட்டுக்கொரு புலவனாகிய பாரதி மண் விடுதலைக்குப் போராடிய அதேநேரத்தில், விண்ணை ஆள்வதற்கும் கனவு காணுகின்றான். அவன் கண்ட கனவு அப்துல் கலாம் கண்ட கனவு. அமரர் அப்துல் கலாம் நனவாக்கிய கனவு.
 ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர், வாராது போல் வந்த மாமணியாகிய பாரதி, ஆத்திசூடியில் வானநூல் பயிற்சி கொள் என்கிறார். வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி என்றும், சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்றும் நுண்மான் நுழைபுலத்தோடு பாடுகின்றார். பாரதி கண்ட அறிவியல் பார்வை நம்மை வியக்க வைக்கிறது. இது எப்படி?
 தீஞ்சுவைக் கவிஞனாக இருக்கும் ஒருவர், தீர்க்கதரிசியாகவும் இருக்க முடியும். அவன் கண்ட கனவை எப்படி நனவாக்குவது என்பதற்குரிய இணைப்புப் பாலத்தையும் அவனே கட்டி முடிப்பான் என ஒரு நீதிபதியைப் போல் தீர்ப்புரை வழங்கியிருக்கிறார் கார்ல் மார்க்ஸ். (he Artist of tomorrow will know how to bridge the gap between action and dream  என்பது கார்ல் மார்க்ஸின் கணிப்பு).
 பாரதி கண்ட தீர்க்கதரிசனங்கள் பல, இன்று நம் கண் முன்னே நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன. நான் எதையும் தேடுவதில்லை. என் கண் முன்னே அவற்றைக் காண்கிறேன் என்று ஓவிய மேதை பிகாஸோ கூறியதுபோல், பாரதியும் தம் கண் முன்னே பல புதுமைகளைக் கண்டிருக்கிறான்.
 திறமையான புலமையெனில் அதனை வெளிநாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்றார் பாரதியார். அவர் ஊருக்காகப் பாடிய தாரக மந்திரம், அவர் வீட்டுத் தலைவாசலிலேயே சத்திய வாக்காயிற்று.
 நெவின்சன் என்ற பிரிட்டன் நாட்டுப் பத்திரிகையாளர், லாலா லஜபதிராய் ஏகாதிபத்தியத்தால் நாடு கடத்தப்பட்டதைக் கேள்விப்பட்டு பாரதி துடித்துப் பாடியதை, பேசியதைச் செவி மடுக்கிறான்.
 "பாரதியின் புலம்பலை, கண்ணீர்க் கவிதையினைச் சென்னை கடற்கரையில் செவிமடுத்தேன். அது நாடு கடத்தப்பட்டவர்கட்கெல்லாம் பொதுவான புலம்பல் எனலாம். வீட்டைப் பற்றிய இன்ப நினைவுகள், சிறு வயதில் விளையாடிய நாட்டினிடம் ஆழ்ந்த பற்று, இந்தியர்களிடையும், வழங்காத மொழிகளிடையும் வாழ்க்கையின் ஏகாந்தமான தன்மை, இவையெல்லாம் வெகு சாந்தமுடனும், எளிதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன' என்று அந்தப் பத்திரிகையாளர் இந்தியாவின் நூதன உணர்ச்சி எனும் நூலிலே பதிவு செய்கிறார்.
 பாரதி வாழ்ந்த காலத்தில், அவன் வார்த்துவிட்ட தைல தாரைகள் தமிழ்நாட்டு ஆறு, குளங்களில் நீள அகலமாக ஆட்சி புரிந்ததோடு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்தின.
 அத்தகைய வீரயுகக் கவிஞனை வானத்து தேவன் வந்தான் காண், வந்ததுபோல் போனான் காண் எனப் புதுமைப்பித்தன் வானத்தை அண்ணாந்து பார்த்தது போல், அவரது நினைவு நாளில் நாமும் அண்ணாந்து பார்க்கிறோம்.
 பாரதத்தில் தைல தாரையாகத் திகழ்ந்தான் பாரதி. குளத்துத் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விட்டால், அதே இடத்தில் கரைந்துவிடும். ஆனால், அதே தண்ணீரில் ஒரு சொட்டுத் தைலத்தை விட்டால், அந்தக் கிணற்றின் பரப்பளவு முழுவதும் தைலத்தின் ஆதிக்கம் பரவி நிற்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.