நீதிக்கட்சியினரின் மனிதநேயம்
அரசியல், ஆசைக்கு ஏற்றவாறு அணிகின்ற ஆடை, அது அழுக்கடைந்தாலோ, கிழிந்தாலோ அதனை மாற்றிவிடலாம்.


அரசியல், ஆசைக்கு ஏற்றவாறு அணிகின்ற ஆடை, அது அழுக்கடைந்தாலோ, கிழிந்தாலோ அதனை மாற்றிவிடலாம். அந்த ஆடை இடுப்பில் இருந்தால் மானம் காக்கப்படும். அவிழ்ந்தால், மானம் போக்கப்படும். ஆனால், மனிதநேயம், மானுடம் மரத்துப் போகவில்லை என்பதைக் காட்டுகின்ற அளவுகோல், படைப்புகளிலேயே மானுடம் மகத்தானது என்பதைக் காட்டுகின்ற ஆராய்ச்சி மணி.
11}ஆம் நூற்றாண்டில் பேதாபேதங்கள், சாதி ஏற்றத் தாழ்வுகள் மலிந்து நின்றபோது, அதைத் தமது தண்டத்தால் சமன் செய்தவர் எம்பெருமானார் இராமானுஜர். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றையும் தம்முடைய தண்டத்தால் அடக்கி வைத்திருந்த எம்பெருமானார், "மனிதரிடை சமத்துவம்' எனும் நான்காவது சக்தியையும் தம் தண்டத்தால் சமப்படுத்தி வைத்திருந்தார். அதனால், அவர் புரட்சித் துறவி என அழைக்கப்படுகிறார்.
எம்பெருமானுடைய தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே டாக்டர் சி. நடேசன், டாக்டர் டி.எம்.நாயர், ஸர் பிட்டி. தியாகராயர் போன்ற மூன்று மாவீரர்கள் பொருளாதார, சாதி ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறியப் புறப்பட்டனர்.
சமூக நீதியைக் காப்பதற்காக அம்மூவரும் பெற்றெடுத்த குழந்தையாகிய நீதிக்கட்சியின் பிறந்த நாள், 19.11.1915 ஆகும்.÷நீதிக்கட்சியின் தோற்றம், காலத்தின் கட்டாயமாகும். அதன் தோற்றத்திற்கான நியாயத்தை அமரர் ஏ.என்.சிவராமன், சென்னை சம்பந்தப்பட்ட மட்டில், மாநில மட்டத்தில், காங்கிரஸுக்கு எதிரான கிளர்ச்சி (நீதிக் கட்சியின் கிளர்ச்சி) ஒரு புதிய வடிவில், ஒரு புதிய உணர்ச்சியுடன் உருவாயிற்று (இந்திய வறுமை பற்றிய ஆராய்ச்சி, தினமணி வெளியீடு 1971) என்றவாறு பதிவு செய்கிறார்.
சமூக நீதியைக் காப்பதற்காகப் புறப்பட்ட அம்மூவரிடம் காணப்பட்ட மனிதநேயம், அபரிமிதமானது, ஆச்சயர்யப்படத்தக்கதும் ஆகும். மருத்துவத் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்ற டாக்டர் நடேசன், மாலை நேரங்களில் சேரி மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மருத்துவத் தொண்டாற்றினார்.
முதல் உலகப் போர் தொடங்கிய போது ஆங்கிலேயருக்கு உதவியளிக்கும்படியாக ஆங்கிலேய அரசும், மகாத்மா காந்தியடிகளும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். நாட்டு மக்களும் நேசக் கட்சியினருக்கு ஒரு போர்க் கப்பலை நன்கொடையாக அளிக்கின்றனர். டாக்டர் நடேசன் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அக்கப்பலில் மருத்துவப் பணியாற்றுவதற்காக மனிதநேயத்தினால் செல்கின்றார்.
கப்பலில் அவருக்கு லெப்டினன்ட் பதவி வழங்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள், தேச சேவைக்காக கல்லூரியை விட்டுவிட்டு, கப்பலுக்கு வந்து சேருகின்றனர். டாக்டர் நடேசனார் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்த நேரம் போக, ஓய்வு நேரத்தில் சேவா தளத் தொண்டர்களாக வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்கள் கல்லூரியில் இழந்த பாடங்களை நடத்தத் தொடங்கினார். டாக்டர் நடேசனின் தொண்டினை மதித்து, ஆங்கில அரசு அவருக்குக் "கேசரி இந்து' எனும் விருதையும் வழங்கியது.
பனகல் அரசர் முதலமைச்சராக ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து. ஆறு மாதங்களாக நடந்து கொண்டிருந்தபோது, இம்மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதி பாதிக்கப்பட்டது.
அவ்வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்துபவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. என்ற காரணத்தால், ஆங்கில ஆளுநர் அவரைச் சிறைப்பிடித்து, பர்மாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார். இரட்டையாட்சி (டையார்சி) முறையால், நீதிக் கட்சியால் அதனைத் தடுக்க முடியவில்லை. என்றாலும், டாக்டர் சி.நடேசனாருடைய மனிதநேயத்தால், அதனைச் சாதிக்க முடிந்தது.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. நீதிக்கட்சியை ஆதியோடு அந்தமாக வெறுத்தவர், பகைத்தவர். என்றாலும், அவரைச் சிறைப் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகப் போராட்டம் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்த வியூகத்திற்குள்ளேயே டாக்டர் நடேசனார் நுழைகிறார். நீதிக்கட்சியைச் சார்ந்தவர் அந்தக் களத்திற்குள்ளே நுழைவதைத் திரு.வி.க. விரும்பவில்லை.
போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஒரு போராளிக் குழுவும், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மற்ற குழுவும் முட்டி மோதிக் கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் காவலர்கள், திரு.வி.க.வைக் கைது செய்ய நினைத்த நேரத்தில், டாக்டர் நடேசனார் உள்ளே நுழைந்தது, அனைவரையும் திகைக்க வைத்தது.
அன்று மாலையே, திருவல்லிக்கேணியில் நடந்த கண்டனக் கூட்டத்தில் டாக்டர் நடேசனாரும் கலந்து கொண்டு போராடியதில், டாக்டர் நடேசனார் காவல் துறையினரின் தடியடிக்கு உள்ளானார். மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் திரு.வி.க. என்றாலும், அபிமன்யு பத்ம வியூகத்துக்குள் நுழைவது போன்று டாக்டர் நடேசனார் நுழைந்தது, மலையளவு மெச்சத்தக்க மனிதநேயம் அல்லவா?
டாக்டர் நடேசனாரைப் போன்றே, டாக்டர் தரவாட் மாதவன் நாயர் (டி.எம்.நாயர்) அவர்களிடம் காணப்பட்ட மனிதநேயம் வானளவு உயர்ந்தது. அவரது மனிதாபிமானத்துக்குச் சான்றாக, 1909-ஆம் ஆண்டு தமிழக மேல்சபையில், "மிண்டோ மார்லி' சீர்த்திருத்தங்களைப் பற்றி ஆங்கிலேய ஆளுநரின் தலைமையில், காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அத்தீர்மானத்தை ஆதரித்துப் பேச வந்த சேலம் பி.வி.நரசிம்மய்யருக்கு ஆங்கிலத்தில் பேச வரவில்லை. அதனால் தமிழில் பேசத் தொடங்கினார்.
ஆனால், ஓர் உறுப்பினர் எழுந்து, மேலவையில் தமிழில் பேசுவதற்கு உரிமை உண்டா எனும் ஐயத்தை எழுப்பினார். உடன் மேலவைச் செயலாளர், அதற்கு விதிகளை ஆராய்ந்து பார்த்துத்தான் சொல்ல வேண்டும். இப்பொழுது அதற்கு நேரமில்லை. அதனால், தமிழில் பேச முடியாது என்றார்.
நிராயுதபாணியாக நின்ற நரசிம்மய்யரின் மேல் கொண்ட மனிதநேயத்தால், நீதிக்கட்சியைச் சார்ந்த டி.எம். நாயர் எழுந்து, இன்னும் சற்று நேரத்தில் மதிய உணவு நேரம் நெருங்கப் போகிறது. உணவு இடைவேளையின்போது, செயலர் விதிகளை ஆராய்ந்து பதில் சொல்லட்டும். அதுவரையில் நரசிம்மய்யர் தமிழில் பேசட்டும் என ஆங்கிலத்தில் கர்ஜித்தார்.
ஆளுநர், நாயரின் உரையில் மயங்கி நரசிம்மய்யர் பேசட்டும் என்றார். நரசிம்மய்யர் தமிழில் பொழிந்து தள்ளி விட்டார். டி.எம்.நாயர் ஒரு தனிமனிதருக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. தமிழுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார் எனலாம்.
மனிதநேயத்தில் எவரெஸ்ட்டைப் போல் எழுந்து நின்றவர் வெள்ளுடை வேந்தர், பிட்டி தியாகராயர். அவரும், அவருடைய தந்தையார் முனுசாமி செட்டியாரும் சேர்ந்து ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்பத்துச் சொத்துக்களைப் பொது நலத்துக்காகச் செலவழித்திருக்கின்றனர். வெள்ளுடை வேந்தரின் மனிதநேயத்துக்கு இரண்டு சுவையான சம்பவங்களைச் சுட்டலாம்.
பிட்டி தியாகராயர் மாநகராட்சியில் மேயராகவிருந்தபொழுது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் மாநகராட்சியின் நடைமுறைகளைக் கண்டித்து, சென்னைக் கடற்கரையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தியாகராயச் செட்டியார் தலைமையில் ஒரு கும்பல் மாநகராட்சியில் கூத்தடிக்கின்றது. நற்பயன் ஏதும் விளையவில்லை. நீதிக்கட்சியை நீக்கிவிட்டு, காங்கிரசு அதைக் கைப்பற்றினால் தான் விடிவு எனத் திரு.வி.க. பேசிவிட்டார்.
பிறிதொரு நாள் காலையில் பிராட்வே வழியாக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியைக் காரில் கடந்த வெள்ளுடை வேந்தர், காரை விட்டுக் கீழே இறங்கி, திரு.வி.க.வை அருகில் அழைத்து, தமது முதுகைக் காட்டி, "அறை அப்பா! அறை' என்றார். திரு.வி.க.வுக்கு ஒன்றும் புரியவில்லை, வெள்ளுடை வேந்தர், "இரண்டு நாள்களுக்கு முன்னே கடற்கரையில் வாயால் அறைந்தீரே, இப்பொழுது கையால் அறையும்' என்று சொல்லிச் சிரித்தார். சிறு கூட்டம் கூடிவிட்டது. திரு.வி.க.வுக்கு வெட்கம் தாளவில்லை.
திரு.வி.க. உடன், மேயர் வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டார். இருவரும் வழக்கம்போல் கலகலப்பாகப் பேசிக் கொண்டே பயணித்தனர். காஸ்மோபாலிட்டன் கிளப் வந்ததும், திரு.வி.க. காரை விட்டு இறங்கி விடைபெற்றார். இந்நகழ்ச்சியை, திரு.வி.க. தம்முடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டு, வெள்ளுடை வேந்தரின் பெருந்தன்மையை எண்ணி வியக்கின்றார்.
நீதிக்கட்சியினராகிய பிட்டி தியாகராயருடைய மனிதநேயத்தைப் பற்றி, காங்கிரசுக்காரராகிய திரு.வி.க. அவர்கள் தம்டைய நாட்குறிப்பில் பதிவு செய்திருப்பதை இப்பொழுது படித்தாலும், மனசு சிலிர்க்கின்றது. இராயபுரத்திலுள்ள மணியக்காரர் சத்திரத்தைத் தியாகராயர் நிர்வகித்து வந்தார். அக்காலத்தில் அங்கு பல அனாதைகளுக்குப் புகலிடம் தந்து, அவர் தம் வாழ்க்கைக்கு வழி வகுத்திருக்கிறார். பிற்காலத்தில் 1921-ஆம் ஆண்டில் பி அண்டு சி மில் ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்ற காலத்தில், தொழிலாளர்கள் பலர் வருவாய் ஏதுமின்றிப் பட்டினியால் அவதியுற்றனர்.
அப்போது தியாகராயர் தம் கைப்பொருள் தந்து உதவியதுடன், தம் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்கட்கு வேண்டிய உணவுப் பொருள்கள் நாள்தோறும் கிடைத்து வரும்படி ஏற்பாடு செய்தார். பசிக் கொடுமையினின்றும் பல குடும்பங்களைக் காப்பாற்றினார் எனத் தம் நாட்குறிப்பில், தியாகராயரின் மனிதநேயத்திற்கு மகுடம் சூட்டுகின்றார் திரு.வி.க.
தியாகராயர் இயற்கை எய்தியவுடன் திரு.வி.க., "அந்தோ! தியாகராய மலையும் சாய்ந்ததோ! ராஜகம்பீரத் தோற்றமும், திருநீற்றொளியும், சிங்கநோக்கும், மலர்ந்த முகமும், பீடு நடையும், அஞ்சாநெஞ்சும், ஆவின் இயல்பும் உடைய ஒரு பெரு வடிவை என்று காண்பேன் இனி' எனக் கண்ணீர் விட்டுக் கதறினாராம். இரண்டு குணக்குன்றுகளின் சால்பும், பட்டொளி வீசிப் பறக்கின்றது அல்லவா?
நீதிக்கட்சியினர், மானுடத்துக்கும் மனிதநேயத்துக்கும் எதையும் கொடுத்தார்களே தவிர, எதையும் எடுத்தவர்கள் அல்லர். அவர்கள் இருந்ததை இழந்திருக்கிறார்களே தவிர, இரண்டு கைகளாலும் எல்லாவற்றையும் மொண்டு கொண்டவர்கள் அல்லர். அவர்கள் வங்கிகளிலே பணத்தை வைத்திருந்தவர்களே தவிர, பணத்தை வைப்பதற்கு வங்கிகளைத் தேடியவர்கள் அல்லர்.
நீதிக்கட்சியினர், மனிதநேயத்துக்காக கொடுத்தார்களே தவிர, எதையும் எடுத்தவர்கள் அல்லர். இருந்ததை இழந்திருக்கிறார்களே தவிர, இரண்டு கைகளாலும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டவர்கள் அல்லர்.
(இன்று நீதிக்கட்சியின் நூற்றாண்டு தினம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...