மீண்டு(ம்) வர வேண்டும் அந்த மாண்பு!
நம் பாரத தேசத்துக் கண்மணிகளாகிய பெண்மணிகள் அடிக்கடி பாலியல் வன்கொடுமைகளுக்கு


நம் பாரத தேசத்துக் கண்மணிகளாகிய பெண்மணிகள் அடிக்கடி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிற கொடிய செய்திகள் வந்து நம் நெஞ்சை அறுக்கின்றன.
அறிவு வளர்ச்சியும், அறிவியல் பெருக்கமும் கூடி உன்னத நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிற இந்தக் காலகட்டத்தில், இத்தகு கொடுமைகள் நிகழ எத்தனையோ காரணங்கள்...
நெடும்பொழுதுகள் நெஞ்சில் உறங்குவதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் வக்கிர உணர்ச்சி (காமம் என்று இதைக் கருதுதல் தகாது) கட்டுக்கடங்காமல் வெடித்துக் கிளம்புகிற அந்தக் கணநேரத்தில்- மனிதப் பிசாசுகள் ஆடி முடித்து விடுகின்றன. பல அரும்புகள் கருகி உதிர்ந்து விடுகின்றன.
தாயாகவும், தந்தையாகவும் இருந்து அந்த வேதனையை உணர்கிறபோது, விழிகளில் நீர் ஒழிந்து, குருதி பெருகும். இது என்று ஒழியுமோ என்று குமுறும் நெஞ்சில் ஓர் அடைப்பு வந்து தாற்காலிகமாய் விலகும். பழகிப்போகும் பட்டியலில் இது நில்லாது, நெஞ்சமுடையார் எல்லாரிடமும் நஞ்சுபோல் வந்து அஞ்சச் செய்யும் ஆபத்து. விபத்துபோல் வந்து இது நிகழ்வது சில கணப்பொழுதுகள் என்றாலும், அதன் விளைவுகள் அழியாத கொடுமைகள்.
தன்னையொத்த இன்னொரு மனிதப் பிறப்பு என்று பெண்ணையும், தன்னையும் அந்தக் கணநேரத்தில் சிந்திக்க விடாமல் செய்கிற பிசாசு எது?
உடன்பிறப்பு எனும் சகோதர உணர்வு முற்றாகவே அற்றுப் போகும்படியாக ஆனதற்கு யார் காரணம்?
ஒன்றே போதும் என்று குடும்பத்தை நிறுத்திக் கொண்ட கட்டுப்பாடா?
ஒளிமயமான எதிர்காலம் என்று மரபுகளின் வேர்விடுத்து அன்னியக் கல்விக்கே ஆளாக்கி நம் பிள்ளைகளை வார்த்துவிட்ட அவசரமா?
விரும்பியதுபோல் இருந்துவிட்டுப் போகட்டும் என்று அனுமதித்த நாம், சுதந்திரத்தின் நிழலாய் இருக்கும் சுய கட்டுப்பாட்டைச் சொல்லிக் கொடுக்கத் தவறிய குற்றமா?
தகவல் தொழில்நுட்ப ஊடகங்களின் தாறுமாறான பயன்பாட்டால் எழுந்த பண்பாட்டு வீக்கமா?
கொண்டாட்டமோ, துக்கமோ நுரை ததும்பும் குப்பிகளைக் காலி செய்து, தள்ளாடியபடி நட(ன)மாடும் யூத் கலாசாரத்தை முன்வந்து தடுக்க முடியாமல் போனதன் இன்னொரு பயங்கரப் பரிணாமமா?
பிறப்பின் நோக்கமே காதல் (இது இல்லை என்று உறுதியாய்த் தெரிந்த பிறகும்) செய்தாக வேண்டும் என்று வெறிகொள்ளத் தூண்டும் சில பொழுதுபோக்கு அம்சங்களை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கத் தூண்டும் காரணிகளை தணிக்கைகள் இன்றி வளர்த்துவிட்ட குறைபாடா?
எப்பொழுதும் தன்னைச் சுற்றிக் காளைகள் திரியவேண்டும் என்று கன்னியரும், கன்னியர் கூட்டம் வரவேண்டும் என்று காளையரும் நினைத்துக் கொள்வது பருவத்தில் வரும் ஒரு மனநிலை. அது இல்லையெனில், பிறப்பே பொருளற்றுப் போகும் என்று எண்ணத் துணிவதும் இறப்புக்கு முயல்வதும் எதில் சேர்த்தி என்று சொல்லிக் கொடுத்துத் தன்னம்பிக்கை வளர்க்கத் தவறியது யார்?
அழகாயில்லாததால் அவள் தங்கையாகிவிட்டாள் என்று யதார்த்தத்தை எழுதிய வாக்கியத்தை இந்த நூற்றாண்டின் இன்றியமையாத வாழ்வியல் சூத்திரமாகவே ஆக்கிவிட்ட உறவு நெறிமுறைதான் உண்மையில் தமிழ் நெறியா?
பழகிய பெண் ஒருத்தி, தன்னை அண்ணன் என்று சொல்லிவிட்டால், அது அவமானம் என்று இன்றைய இளைஞன் எண்ணுவது எத்தகு கொடுமை?
தங்கை என்று சொல்வது தகாது. அதுவும் அக்கா என்று சொல்லிவிட்டால், அது கொடூரத்தின் குறியீடு என்று எல்லா இளம்பெண்களும் கருதுகிற அளவுக்குச் சிறுமைப்பட்டுப் போனது இந்திய உறவுமுறை.
மருள்நீக்கியாரை திருநாவுக்கரசராய் சமய உலகிலும், சமுதாய அளவிலும் நிலைநிறுத்திய திலகவதியார் என்னும் அற்புத அக்காவை எப்படி மறந்தது இந்தச் சமுதாயம்?
ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமைமிக்க ஆலயத்தைத் தஞ்சையில் எழுப்பிய இராஜராஜனுக்குச் சதய விழா நடத்தி அவன் கட்டிய ஆலயத்தில் நூறாண்டுகளுக்குப் பிறகு, தேரோட்டம் விட்டுத் திருவிழாக் காணுகிறோமே, அதற்கு அவன் காரணம் என்றால், அவனை அவ்வண்ணம் ஆக்கி வளர்த்தவள் அவன் அக்கா குந்தவை நாச்சியார் அல்லவா? அந்த உணர்வு நம் குருதியோட்டத்தில் கலக்குமாறு ஏன் சொல்லித் தரவில்லை?
அழகிய மதுரையில், உன் மகளை, உன் மகனே வம்புக்கிழுக்கிறான், அழகி, உன் காலத்தில் எப்படி உலாப் போனாய் என்று தெய்வ மீனாட்சியிடம் கேள்வி கேட்ட இரா. மீனாட்சியை இன்றைக்கும் கவிஞர் உலகம் கவிஞர் என்பதைவிட, அக்கா என்றே அழைக்கிறதே, அந்த மரபு இன்று வளர்ந்துவரும் தலைமுறைக்கு வாய்க்க வேண்டாமா?
மந்திரத்தால் அல்ல - எந்தத் தந்திரத்தாலும் அல்ல - மனம் நெகிழ்ந்த பக்தியினால் கணவனின் (பசிக்குக் கூட அல்ல,) ருசிக்கு மாம்பழம் தருவித்த மங்கையை விட்டொதுங்கிப் போனான் கணவன். பெற்றோராலும், உற்றோராலும் பேணாது விடப்பட்ட அப்பெருமாட்டி, பேய் உருக்கொண்டு வாழ்ந்தபோது, தாய் எனப் போற்றித் தாங்கினான் நெற்றிக் கண்ணன் சிவன். அந்தக் காரைக்கால் அம்மையார் அவதரித்த மண்ணில் இத்தகு கொடுமைகள் நிகழ்தல் அடுக்குமா?
மற்றெந்தக் கவிஞர்களும் பாடிவிட முடியாத உயரத்துக்குக் காதலின் மகத்துவத்தைக் கவிதைகளாய்ப் பாடிய கோதை, வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து நாரணன் கரம்பற்றக் கனாக் கண்ட இந்த மண்ணில் காரிகையர் பலர் வாழ்வு, இக்கயமையினால் கருகுவது முறையா?
தன்னாட்டுக்கு வந்த பெண்ணொருத்திக்கு அநீதி நிகழ்ந்துவிட்டபோது, தன்னுயிர் கொடுத்து, வளைந்த செங்கோலை நிமிர்த்தினானே பாண்டியன் நெடுஞ்செழியன், உடனே, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது ஒன்றுஇல் என்று மாண்டாளே பாண்டிமாதேவி, முற்றாகப் பழந்தமிழ்மூதூர் மதுரையே பற்றி எரிந்ததே.. எல்லாம் பாடிய இளங்கோ வாக்கில் கண்ணகி, பாண்டியன் மகள் ஆகிற உன்னதம் எத்துணை பெரிது?
அதன்பின் பிறந்து வளர்ந்த, வெறுங்கதையா மணிமேகலை?
காலம் முழுக்கக் கன்னியாய் இருந்து அறம் வளர்த்த பெருந்துறவி அல்லவா அவள். மாதவியும், கோவலனும் மகிழ்ந்து பெற்ற அம்மங்கையை, கண்ணகியின் மகள் என்று மாதவி சொல்கிற மாண்பு எங்கே போனது?
மனித மதிப்புகளைப் பெரிதும் புறந்தள்ளிவிட்டு மதிப்பெண்களை மட்டுமே கவனத்திற் கொண்டு, பள்ளிகளுக்கே பிள்ளைகளைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, தத்தம் இல்லங்களில், நிகழும் இன்ப துன்ப தேவைகளில்கூடப் பங்கெடுத்துக் கொள்ளவிடாமல் தடுத்து நடத்துகிற பாடத்தில் இவையெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவேயில்லையா?
என்ன செய்வது, யாரை நோவது?
போட்டி போட்டுக் கொண்டு, கல்விச் சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர்களும், மற்றோர்களும் பிள்ளைகளைக் கொண்டு இயங்கும் இந்த நேரத்தில் இத்தகு பாலியல் கொடுமைக்கு எந்தவகையில் மாற்றுத் தேட முடியும்?
பாடக் கல்வியோடு, சகோதர பாசக் கல்வியையும் வளர்க்கும் பண்பாட்டுக் கல்வி வேண்டும். அதற்கு தன்னிலும் மூத்த - இளைய பிள்ளைகளை, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை என உறவுப் பெயர்களைச் சொல்லி அழைக்கப் பழக்க வேண்டும்.
சில ஆங்கிலப் பள்ளிகளில் ஆசிரிய, ஆசிரியைகளையே அக்கா, அண்ணா என்று அழைக்கிற மரபுகள் இருக்கின்றன. அவை, பெற்றோர் - ஆசிரியர் தினவிழாக்களைப் போலவே, தாத்தா - பாட்டியர் விழாக்களையும் நடத்தி வருகின்றன. இந்த முறை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தால் நல்லது.
அதற்கு முன்னர், ஆண்டு விழாக்களில் நடக்கும் ஆட்டபாட்டங்களில் வரன்முறை வேண்டும்.
ஓரிரு பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை, பண்பாட்டை அடியொற்றி நடத்தப்பெற்ற பள்ளிக் கலைவிழாக்கள் இன்று பாலியல் எண்ணங்களை வளர்க்கும் தன்மைக்குப் பெரிதும் இடமளித்திருப்பதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
இது முற்றிலும் மாற்றியமைக்க வேண்டியது என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறபோது, புதுவயல் ஸ்ரீ சரசுவதி சங்கத்தின் சிறப்பு மலர் ஒன்று என் கைக்குக் கிடைக்கிறது.
1922-இல் மகாகவி பாரதியாரின் நல்லாசியோடு தொடங்கப் பெற்ற இச்சங்கத்தின் வாயிலாக நடத்தப்பட்டுவரும் பள்ளி ஆண்டு விழாக்களுக்குப் பல்வேறு தமிழறிஞர்கள் வந்து சிறப்பித்திருக்கிறார்கள்.
பெரியார் ஈ.வெ.ரா., தோழர் ஜீவா, ரசிகமணி டி.கே.சி., கல்கி, நாமக்கல் கவிஞர், கி.வா.ஜ., மு.வ. உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்று, பயிலும் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து பாராட்டித் தன் உள்ளக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.
1935 ஏப்ரல் 28-ஆம் நாள் நடைபெற்ற புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி சங்கத்தின் பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீ சரஸ்வதி வித்தியாசாலையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா அவையின்கண் தலைமை வகிக்கும் பாக்கியம் பெற்றேன்.
வித்தியாசாலையின் மாணவ, மாணவிகள் அவையின்கண் நடாத்திய சம்பாஷணைகளும், நடிப்புகளும், பாடிய பாடல்களும் எனது தெய்வ பக்தியையும், தேசாபிமானத்தையும், மொழிப் பற்றையும் ஒரே நாளில் மிக வளர்த்துவிட்டன.
மாணவிகள் நடாத்திக் காட்டிய பெண்கள் சீர்திருத்த மகாநாட்டின் நடவடிக்கைகள் என் மனத்தையும், அவையினர் மனங்களையும் பூரணமாகக் கவர்ந்தன. சுருங்கக்கூறின், அம்மாணவ, மாணவிகளின் சொற்களால், பாடல்களால், நடிப்பு முதலியவற்றால், யானும் அவையினரும்,
"அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடுதெளிந்தேம் - மறனெறிந்த வாளார் அறிஞர்காள் மாணவர்கள்தம் வாயால் கேளாதன வெல்லாம் கேட்டு' என்று கூறுதல் மிகையாகாது.
இம்மாணவ, மாணவிகளுக்கும், அவர்களைப் பெற்ற தாய் - தந்தையர்களுக்கும், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், ஸ்ரீ சரஸ்வதி வித்தியாசாலைக்கும், அதன் போஷகர்களுக்கும், அதன் அங்கத்தினர்களுக்கும், அதற்கு ஆதாரமான
ஸ்ரீ சரஸ்வதி சங்கத்தினர்க்கும், அதன் அங்கத்தினர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்கள் முதலியவர்களுக்கும் எல்லா நன்மைகளையும் எல்லாம் வல்ல இறைவன்
அளிப்பானாக
- வ.உ.சிதம்பரம் பிள்ளை, 29.4.1935
என்று எழுதியிருக்கிறார்.
அந்தக் காலத்தில், இந்தியா சுதந்திரம் எய்தவில்லை. இன்று சுதந்திரம் பெற்றுப் பல்லாண்டுகள் கடந்துவிட்டோம். என்ன நடந்திருக்கிறது? அதே வ.உ.சி. இன்று நம் பள்ளிவிழாக்களைக் கண்ணுற்றால் என்ன எழுதுவார் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
சரியாக எண்பதாண்டுகளுக்கு முன்பு அவர் பாராட்டி எழுதிய இந்த மரபின் அடிச்சுவட்டில் நம் பள்ளிகளும், கல்வி முறையும் வளர்ந்திருந்தால்....
அவர்தம் வாழ்த்துக்குரிய நிலையில் யாவரும் வளர்கிற சூழலை இனியேனும் பள்ளிகளில் உருவாக்கினால் பண்பாடு உருவாகும். பாரதக் குழந்தைகள் உடன்பிறப்பினர்களாய் தங்களை உணர்வர். உலகத்தை உயர்த்துவர் என்பதில் ஐயமில்லை.
மீண்டு(ம்) வரவேண்டும் அந்தப் பெரு மாண்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...