நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பதினான்காவது நிதிக் குழுவும் பாதிப்பும்

மத்திய அரசால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் ஒருவர் தலைவராகவும் சிலர் உறுப்பினர்களாகவும் இருப்பர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:54 am

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

மத்திய அரசால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் ஒருவர் தலைவராகவும் சிலர் உறுப்பினர்களாகவும் இருப்பர்.

பொருளாதாரம் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்னைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதுண்டு.

மத்திய அரசின் வருவாயில், மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்து அளிப்பது எப்படி என்கிற பரிந்துரைகளை வழங்குவதுதான் நிதிக்குழுவின் முக்கியப் பொறுப்பு.

கலைக்கப்பட்ட திட்டக்குழுவைப் பற்றியோ, அதற்கு மாற்றாகத் தற்போது அமைக்கப்பட்டுள்ள "நீதிஆயோக்' எனப்படும் மத்திய கொள்கைக் குழுவைப் பற்றியோ அரசியல் அமைப்புச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 ஆனால், நிதிக் குழு மட்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் அடங்கியுள்ளது.

14-ஆவது நிதிக் குழு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்டது, இக்குழுவின் அறிக்கை 24.2.2012-இல் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அப்போதைய மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு விட்டது.

14-ஆவது நிதிக் குழு, தன் அறிக்கையில், மத்தியஅரசு வசூலிக்கும் வரி மூலமான வருமானத்தில் 42 சதவீதத்தை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

அதற்கு முந்தைய 13-ஆவது நிதிக் குழு, மத்திய அரசின் வரி வருமானத்தில் 32 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தது.

இதனால், 2015-2016- ஆம் நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 5.26 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014-2015-ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசு மூலமாகக் கிடைத்த பங்கு 3.48 லட்சம் கோடி ஆகும்.

மத்திய அரசின் மொத்த வரி வருமானத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதியைப் பிரித்தளிப்பது  எப்படி என்று 14-ஆவது நிதிக் குழு அறிக்கையில் பரிந்துரைகள் உள்ளன.

இந்த அறிக்கையின் மூலமாக, மாநிலங்களுக்குக் கூடுதலாக 10 சதவீத வருமானம் அதிகரிக்கும். இதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னேற்றமடைந்த மாநிலம், தனிநபர் வருமானம் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு நிதி ஆதாரங்களைப் பிரிக்க இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையின்படி, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களான பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்ராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கு நிதிக்குழுவின் பரிந்துரையால் கூடுதல் நிதி கிடைக்க இருக்கிறது.

இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு பிரச்னை 11-ஆவது நிதிக் குழுவிலிருந்தே ஆரம்பமாகி விட்டது.

அன்றைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு இதைக் கடுமையாக எதிர்த்தார்.

குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாராட்டி அவற்றுக்கு நிதி கொடுக்காமல் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது தவறு என்று 1998 கால கட்டங்களிலே பிரச்னை எழுந்தது.

மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

நிதிக் குழு தனது பரிந்துரையில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் 17.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யலாம் என்றும், 2011 மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் 10 சதவீதம்தான் செய்ய முடியும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

14-ஆவது நிதிக் குழு அறிக்கையின்படி, தமிழகத்திற்கு குறைவாகத்தான் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். வரி வருமானத்தில் 4.023 சதவீதமும், சேவை வரி மூலமாக 4.104 சதவீதமும் தமிழகத்துக்குக் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசு ஏற்கெனவே இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியத் திட்டங்கள், கல்வி வளர்ச்சி போன்ற அடிப்படைக் கூறுகளை  நிதிக் குழு சரியாக ஆய்வு செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாநிலங்களுக்கிடையே பாரபட்சமாகவும், சில மாநிலங்களைப் பாதிக்கக்கூடிய அளவிலும் நிதிக் குழு பரிந்துரைகள் வழங்கியுள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

சமஷ்டி அமைப்பில் மாநிலங்களுக்கிடையே ஏற்ற இறக்கம் இல்லாமல், மாநிலங்களுடைய தேவைகள், புவியியல் அமைப்பு, மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  நிதிக் குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

ஆனால், எல்லா நிதிக் குழுக்களுமே மாநிலங்களின் உண்மையான தேவைகளையோ, நடைமுறைப் பிரச்னைகளையே பற்றி அறியாமல் தங்கள் பரிந்துரைகளை வழங்கி விடுகின்றன.

 ஆறாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பின்புதான் இது பற்றிய விழிப்புணர்வு மாநிலங்களுக்கு ஏற்பட்டது.

பண்டித நேரு காலத்தில், மத்தியிலும் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியே இருந்தது. இதனால், நிதிக் குழுவின் செயல்பாடுகளைப் பற்றி பொதுமக்கள் வெளிப்படையாக அறிய முடியவில்லை.

1967-க்குப்பின், பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஏற்பட்டதால், திட்டங்களை ஒதுக்குவதிலும், நிதி ஆதாரங்களைப் பகிர்வதிலும் மாற்றாந்தாய் மனப்பான்மையே தில்லியில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு அடிப்படையானவை, நிதிக் கமிஷனும் திட்டக் கமிஷனும்தான்.

மாநிலங்களின் தேவைகளை மதிப்பிடுவதில் நிதிக் குழுவின் பங்கு மிக முக்கியமானது. ஆனால், நிதிக் குழுவை அமைக்கும் முறையிலும், அந்தக் குழு பரிசீலனை செய்யவேண்டிய விஷயங்கள் எவையெவை என்று நிர்ணயிப்பதிலும் மத்திய அரசின் கொள்கை தவறானதாக அமைகிறது.

மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி, நிதிக் குழுவை குடியரசுத் தலைவர் அமைக்கிறார். அதனால், நிதிக் குழுவை நிர்ணயிப்பதிலும் அது பரிசீலிக்க வேண்டிய பிரச்னைகள் என்னென்ன என்று தீர்மானிப்பதிலும் மாநில அரசுகளின் பங்கு இல்லாமல் போகிறது.

இதனால், மாநிலங்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் அந்தக் குழுவில் இடம் பெற்று விடுகிறார்கள்.

 நிதிக் குழு அமைக்கும்போதே அதற்கான வரையறைகளையும் மத்திய அரசு ஏற்படுத்தி விடுவதால், மாநிலங்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிதிகுழுவினால் நிறைவேற்ற முடியாமல் போகிறது.

நிதிக் குழுவுக்கென்று நிரந்தரமான அமைப்பு எதுவும் இல்லை. இதனால், முந்தைய குழு விட்ட இடத்திலிருந்து புதிய நிதிக் குழு தனது பணிகளைத் தொடங்க வேண்டியிருக்கிறது. இதனால் நிதிக் குழுக்களின் தொடர்ச்சியில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அரசியல்சட்டத்தின் 252-ஆவது பிரிவு கடன்களைப் பற்றியும், 293-ஆவது பிரிவு நிதிப் பங்கீடு பற்றியும், 270, 272, 275 ஆகிய பிரிவுகள் நிதிக் குழுவின் பரிந்துரைப்படி நிதிப் பங்கீடு செய்யப்படுவதைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

ஆனால், நிதிக் குழுவின் பரிந்துரைகள் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ கூட  நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.

ஆகவே, மத்திய அரசில் பொறுப்பில் உள்ள கட்சி எதுவோ அந்தக் கட்சி தங்களது அரசியல் கொள்கைகளுக்கேற்ப நிதிக் கமிஷனின் பணிகளை வரையறுத்துவிட்டு  தங்களுக்கு சாதகமான உறுப்பினர்களை யும் நியமித்து விட்டு கமிஷனின் பரிந்துரைகளை ஏற்கவோ மறுக்கவோசெய்யலாம்.

முதலில் நிதிக் குழுவுக்கென்ற தனி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். நிதிக்குழு என்பது தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட வேண்டும்.

அப்படிச் செயல்பட்டால்தான் அதனுடைய முடிவுகள் நியாயமானவையாக இருக்கும்.

முன்பு ஒருமுறை மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்கு துணைக் குழு அமைக்க தேசிய வளர்ச்சிக் குழு முடிவு செய்தது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்.

நிதிக் குழு தருகின்ற பரிந்துரைகள் சில நேரங்களில் விதிகளாகி விடுகின்றன. நமது நாட்டின் வளர்ச்சியைச் சீராகக் கொண்டு செல்வது, நிதிக் குழுவின் பரிந்துரைகளும் மத்திய அரசின் அணுகுமுறையும்தான்.

எனவே, நிதிக் குழுவில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏதோ ஒரு பொறுப்பு கிடைத்துள்ளது என்ற மன நிலையில் இல்லாமல் தங்களின் பணியை இதய சுத்தியோடும் விருப்பு வெறுப்பு இல்லாமலும் துலாக்கோல் நிலையிலிருந்து ஆற்றிட வேண்டும்.

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.