அறநெறி முதற்றே அரசின் கொற்றம்!
பிரிட்டனை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என்று அரசியலமைப்பு வரைவியலாளர்கள் வரையறுத்திருக்கின்றனர்.


பிரிட்டனை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என்று அரசியலமைப்பு வரைவியலாளர்கள் வரையறுத்திருக்கின்றனர். என்றாலும், அந்நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆணிவேராகிய நீதித் துறை ஆழமாக வேரூன்றி நிற்பது இந்திய மண்ணில்தான்.
ஆங்கிலேயர்கள் முடியாட்சிக்குக் கொடுத்த முதன்மையைப் பாரத தேசத்தினர் நீதித் துறைக்குத் தந்துள்ளனர். மற்ற துறைகளில் தவறு இழைப்பவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால், நீதித் துறையிலே தவறிழைப்பவர்களைத் தெய்வமே தண்டிக்கும். கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னனுக்கு நேர்ந்த கதியை நாடறியும். தெய்வமும் உண்டுகொல், தெய்வமும் உண்டுகொல் எனக் கண்ணகி கேட்டதும் இதற்குச் சான்றாகும்.
பெரிய மனிதர்கள் தவறு செய்தால், ஆங்கிலேயர்கள் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. கிழக்கிந்திய கம்பெனியில் கணக்கராகச் சேர்ந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் கவர்னராக நியமிக்கப்படுகிறார். அங்கு சென்றவுடன், ஆசாத் - உத் - தெüலாவிடம் இருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் பெறுகிறார். ஹேஸ்டிங்ஸ் செய்த 23 குற்றங்கள் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் சபையில் நிரூபிக்கப்பட்டும், அவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்பது ஓர் உதாரணம்.
ஆனால், புறநானூற்றுத் தமிழன், தாய் வயிற்றிலிருந்து வெளியே வரும்போதே நீதி என்ற கிரீடத்தையும் சுமந்தே வருகிறான். பாண்டியன் நன்மாறனே, நீ வலிமையான நால்வகைப் படைகளையும் பெற்றிருப்பது பெருமைதான். ஆனால், அதனைவிடப் பெரியது எது தெரியுமா? அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்பதாகும்.
அதனால், நம்மவர் என்று அறங்கோணாது, அயலார் என்று அவர் நற்குணங்களை வெறுத்து அவரைக் கொல்லாது, நடுநிலையோடு ஆட்சி செய்க என்று மருதன் இளநாகனார் (புறம் 55-வது பாடல்) அரசனுக்கு நீதிக் கலையை அறிவுறுத்துகிறார்.
நீதிமன்ற பரிபாலனத்தில் தலைமை முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைப் பொற்கைப் பாண்டியன் வரலாறு ரத்த சாட்சியாக எடுத்துரைக்கிறது. (சிலப்பதிகாரம் கட்டுரைக்காதை: வரிகள் 50 - 54).
முதல் நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டால், மேல்முறையீட்டுக்குச் செல்லுகின்ற முறைமையும், காவல் துறையால் கைது செய்யப்பட்டால், ஜாமீன் கொடுக்கின்ற முறைமையும் சோழராட்சிக் காலத்திலேயே இருந்திருக்கிறது.
10-ஆம் நூற்றாண்டிலே தஞ்சையை அடுத்திருக்கின்ற திருப்பூந்துருத்தி என்ற ஊரினைச் சேர்ந்த நாராயணமாதவன் என்பவன் ஊர்ப் பணத்தைக் கையாடல் செய்துவிடுகிறான். ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி அவன் செய்த குற்றத்துக்காக ஒரு பெருந் தொகையைத் தண்டனையாக விதிக்கிறது.
அவனை பிணையில் (ஜாமீனில்) எடுக்க அவனுடைய இரண்டாவது சகோதரனாகிய நாராயண நக்கன் முன்வந்து தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் விற்று பிணைத்தொகையைச் செலுத்துகிறான். அத்தொகை கோயில் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வெளியில் வந்தவுடன் கைதி செத்துப் போய்விடுகிறான்.
என்றாலும், ஊர்ப் பஞ்சாயத்துப் பிணைத்தொகை மட்டும் போதாது, அவன் செத்துப் போனாலும் அவனுடைய இன்னொரு சகோதரனாகிய நாராயண தாழியை முழுத் தண்டனைத் தொகையையும் செலுத்தும்படி தீர்ப்புக் கூறுகின்றது (தென்னிந்தியக் கல்வெட்டு, தொகுதி 13, எண்.260, பொய்யிலியப்பன் கோயிலில் உள்ளது).
நாராயண தாழி முழுத் தொகையையும் கட்டிவிட்டு தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனுடைய அவைக்குச் சென்று மேல்முறையீடு செய்கிறான். வழக்கை விசாரித்த சுந்தர சோழப் பேரரசன் இந்த வழக்கில் முதல் பாதி சரியானது. ஆனால், குற்றவாளி செத்தபிறகு இன்னொருவரை முழுத் தொகையைக் கட்டச் சொன்னது அதர்மம். எனவே, வசூலித்த பணத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தாலும், வாதிக்கே திருப்பித்தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறான்.
ஊர்ப் பஞ்சாயத்தும் அதன்படியே நடந்து மேல்முறையீட்டுத் தீர்ப்பையும் அதே கல்வெட்டின் தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறது. சுந்தர சோழனுடைய 15-ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டில் முதல் 13 வரிகள் ஊர்ப் பஞ்சாயத்துத் தந்தத் தீர்ப்பு காணப்படுகிறது. மேல்முறையீட்டில் சுந்தர சோழன் தந்தத் தீர்ப்பு 14-ஆவது வரியிலிருந்து தொடர்ந்து, அரசாங்க முத்திரை போன்று மாகேஸ்வரர் ரட்ஜை என்று முடிகிறது. இதுவல்லவா பாரதியார் சொன்ன நாட்டு ராஜநீதி?
சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்திலுள்ள ஒரு கல்வெட்டு ஒரு வித்தியாசமான வழக்கையும் தீர்ப்பையும் சொல்கிறது. இன்றைய வழக்குமன்றத்தில் நடக்கிற வாதப் பிரதிவாதங்களைப் போல் அன்றைக்கும் நடந்திருக்கின்றன.
தாமரைப்பாக்கத்தில் ஒரு பெற்றோருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளை பாடுபட்டுச் சம்பாதித்து வயது முதிர்ந்த பெற்றோர்களுக்குச் சோறு போடுகிறான். இரண்டாவது பிள்ளை ஊதாரியாக ஊர்சுற்றி விட்டுச் சாப்பிடுவதற்கு மட்டும் வீட்டுக்கு வந்துவிடுகிறான். இதனால், இரண்டு பேருக்கும் சண்டை வந்து, தந்தையின் கண்ணுக்கு எதிராகவே மூத்தவனை அவனுடைய தம்பி கொன்று விடுகிறான். தந்தை ஊர்ச் சபையில் முறையீடு செய்கிறார்.
தம் வாழ்வாதாரத்தை அழித்துவிட்ட இளைய மகனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்கிறார் தந்தை. வழக்கை விசாரித்த சபைத் தலைவர் தந்தையாரைப் பார்த்து உங்களுக்கு உற்ற சொந்தக்காரர்கள் யாரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டார். தந்தை இல்லை என்றார். சபைத் தலைவர், உங்களுக்குச் சொத்து சுகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றார். இல்லை என்றார் தந்தை. தலைவர், உங்களால் உழைத்துச் சம்பாதிக்க முடியுமா என்றார். முடியாது என்றார் தந்தை.
நிர்கதியாக இருக்கும் நீங்கள் ஒரே வாரிசாக இருக்கும் இவனையும் இழந்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எனவே, இவனே இன்றிலிருந்து உழைத்துப் பாடுபட்டு உங்களுக்குச் சோறு போட வேண்டும். மேலும் அவனுக்குரிய தண்டனை என்னவென்றால், நாளும் கோயிலைப் பெருக்கி, அவனே விளக்கேற்றி வரவேண்டும். அவனைக் கண்காணிக்கும் பொறுப்பைச் சபை ஏற்றுக் கொள்ளும் என்று தலைவர் தீர்ப்பளிக்கிறார்.
இன்றைக்கு இரு பிரிவுகளுக்கு இடையில் ஏற்படுகிற பிணக்கத்தைத் தீர்க்க, நீதிமன்றமே சச்சரவுத் தீர்ப்பாயம் (Arbitration Commission) என்று தனி மனிதரின் கீழ் அமைக்கிறது. தாமரைப்பாக்கம் வழக்கு அன்றே சச்சரவுத் தீர்ப்பாயம்போல் செயல்பட்டிருக்கிறது.
ஒரு நடுவராயம் (ஃபுல் பெஞ்ச்) எப்படியிருக்க வேண்டும் என்பதை அன்றைக்கே கணித்துச் சொல்லியிருக்கிறார் கம்பர். நாட்டுத் தலைவன் வெகுண்டபோதும் அதனைப் பொருள்படுத்தாது, அச்சினத்தைத் தாங்கிக் கொண்டு நீதியையே உரைக்கும் வீரர்களாக நீதிபதிகள் திகழ வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அறக்கோட்பாடுகளை நெகிழவிடாதவர்களாக இருக்க வேண்டும். முன்னொன்று சொல்லிப் பின் அதனை மாற்றாமல் ஒருமையே மொழியும் தன்மையராக இருக்க வேண்டும் என்பது கம்பரின் கணிப்பு (மந்திரப்படலம், பாடல் 8).
நீதித் துறையின் மகத்துவத்தைச் சேக்கிழார் சுவாமிகள் சொன்னதைப்போல எவரும் சொல்லவில்லை எனலாம். அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்பதைத் துல்லியமாகப் புலப்படுத்த நினைத்த தெய்வச் சேக்கிழார், நகரப் படலத்தையே மனுநீதிச் சோழன் புராணமாக மாற்றியமைத்தார்.
கதையமைப்புப்படி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்த திருநாவலூரைத்தான் அவர் நகரப் படலமாகப் பாடியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியின் ஆணிவேர் நீதித் துறை என்பதை வருங்காலச் சமுதாயத்துக்கும் சொல்ல, நீதிதேவன் வரலாறு வரும் திருவாரூரைப் பாடிவிடுகிறார்.
கன்றைக் கொன்ற பாவத்துக்கு, ஒரே மைந்தன் வீதிவிடங்கனைக் கொல்வது முறையாகாது, பரிகாரங்கள் செய்துவிடலாம் என அமைச்சர்கள் மொழிந்தபொழுது, வேந்தனாகிய மனுநீதி மறுதலித்து தருமம் தன்வழிச் செல்கைக் கடன் என்று மகனையே தேர்க் காலில் அறைந்தான்.
எனவேதான், யாரையோ நீ எனக் கேட்ட பாண்டியனுக்கு, ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார் என்பதியே என பெருமிதத்துடன் சொன்னாள் கண்ணகி.
இன்றைக்கு நீதிமன்றங்கள் வற்புறுத்துகிற ஆவணங்களை அன்றைக்கே கண்டு சொன்ன தீர்க்கதரிசி சேக்கிழார் பெருமான். உரிமையியல் வழக்கு, குற்றவியல் வழக்கு இரண்டுக்கும் ஆதாரமான உலக வழக்கு, பத்திரப் பதிவுகள், eyewitness எனப்படும் நேரடிக் காட்சி ஆகிய மூன்றையும் ஆட்சியில் ஆவணத்தில், அயலார் தம் காட்சியில் என வரிசைப்படுத்துவார். ஜோடிக்கப்படும் சாட்சிகளை ட்ங்ஹழ் ள்ஹஹ் ண்ள் ய்ர் ங்ஸ்ண்க்ங்ய்ஸ்ரீங் என்பதால், அவர் அதனைக் குறிப்பிடவில்லை.
அதிவீரராம பாண்டியர் தமது வெற்றிவேற்கையில் நீதி நிர்வாகத்தைப் பற்றிச் சொல்லியது ஓர் அபூர்வமான செய்தியாகும். இரண்டு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் நீதிமன்றம் ஏழுமுறை கேட்க வேண்டும். இருவரும் பொருந்தக் கூறாவிட்டால், மனுநீதியின்படி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கினால் அந்நீதிவான்களின் வம்சமே அழியும். மும்மூர்த்திகள் நின்று அந்த அழிவைக் காக்க முயன்றாலும் முடியாது (வெற்றிவேற்கை, பாடல் 75).
பொய் சாட்சி சொல்பவனுடைய வீட்டில், வேதாளம் சேருமே, வெள்ளெருக்குப் பூக்குமே, பாதாள மூலி (சப்பாத்திக் கள்ளி) படருமே, மூதேவி சென்றிருந்து வாழ்வளே, சேடன் (பாம்பு) குடிபுகுமே, மன்றோரம் சொன்னார் மனை (நல்வழி: 23-வது பாடல்) என்று நீதித் துறையில் தவறு செய்பவர்களை எச்சரிக்கிறார் ஒளவையார்.
மூன்றுறையரையனார் எனும் புலவர் பாமரனுக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி வழங்குவதை ஓர் அருமையான உவமையால் மனத்தைக் கிள்ளி எடுக்கிறார். பாமரனுக்கு ஒரு நீதி - பணக்காரனுக்கு ஒரு நீதி வழங்குவது, ஒரு தாய் தன்னுடைய ஒரு மார்பகத்தால் ஒரு குழந்தைக்குத் தண்ணீரையும், மறு மார்பகத்தால் அடுத்த குழந்தைக்குப் பாலமுதையும் ஊட்டுவது போலாகும் என்கிறார் (பழமொழி நானூறு: பாடல் 244).
வரலாற்றுக் காலத்திலிருந்து நீதித் துறை எனும் நெடு நதியை கரையுடைத்துப் போகாமல் காலம்தோறும் நம் முன்னோர்கள் காத்து வந்திருக்கின்றனர். நம் நாட்டு ராஜநீதி என்றும் தன் ராஜபாட்டையில் நடக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...