நிலத்தடி நீரைப் பாதுகாக்க...
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஏராளம்


தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஏராளம். அப்போது வெட்டப்பட்ட நீர்நிலைகள்தான் இன்றளவும் விவசாயிகளுக்கும், அனைத்து மக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் பயனளித்து வருகின்றன. அதன் பிறகு குறிப்பிடத்தக்க அளவுக்கு நீர்நிலைகள் உருவாக்கப்படவில்லை.
அக்காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் தற்போது அழிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட நீர்நிலைகள் 39,202 உள்ளதாக அரசுப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது உலகப் போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், வரும் 2030ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 3-இல் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. வெள்ளை அறிக்கை கூறுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்துவிட்டன. நிலத்தடி நீர்நிலையும் மிக மோசமாக உள்ளது. கையால் மணலை அள்ளிவிட்டு ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில் இன்று 200 அடிக்கும் கீழேதான்
நிலத்தடி நீரே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வறட்சியைப் போக்க மழைக் காலங்களில் வீணாகும் நீரைச் சேமித்தாலே போதும். மழைக் காலங்களில் கிடைக்கும் நீரில் 50% தண்ணீர் வீணாகிறது. அதில் 30% கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளை இணைத்தாலே அதன்மூலம் இன்னொரு காவிரி ஆறு ஓடும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று ஆதாரத்தோடு தெளிவுபடுத்தியுள்ளார் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் நீர்வள நிறுவனத் தலைமைப் பொறியாளராக இருந்த ராமன்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நிலத் தங்கம் தண்ணீர் என அழைக்கப்படுகிறது. தண்ணீர் தங்கத்துக்கு நிகரானது என்றார் ஆர்தர் காட்டன். சென்னை ராஜதானியாக இருந்தபோது தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர் இவர். கல்லணையின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோதாவரியின் குறுக்கே ஓர் அணையைக் கட்டினார். இவரும் தென்னகத்து நதிகளை இணைக்க வேண்டும் என்றார்.
அனைத்து ஆறுகளையும் இணைத்தால் கடலில் வீணாகும் தண்ணீரைச் சேமித்து வேளாண்மைக்கும், குடிநீருக்கும், மனிதத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மழையில்லாக் காலங்களில் வறண்டு கிடக்கும் ஆறுகளெல்லாம் வற்றாத ஜீவ ஆறுகளாக மாறும்.சில ஆண்டுகளுக்கு முன்பு உலக
வங்கியும், தனியார் தண்ணீர் குழுவினரும் இணைந்து இயற்கை வளங்களின் பொதுப் பிரிவில் இருந்த தண்ணீரை வர்த்தகப் பொருள் பிரிவுக்கு மாற்றினர். இக்கருத்தை
உலக நாடுகளிடையே பரப்பியதால் பல நாடுகள் தண்ணீரைத் தனியாரிடம்
ஒப்படைக்க முனைந்தன.
குடிநீருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தவிர ஏனைய அனைத்துப் பணிகளுக்கும் இன்றியமையாத தண்ணீரை இனிமேல் பணம் கொடுத்துதான் பெற வேண்டிய சூழல் உருவாகும். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போல நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டு தண்ணீருக்கான கட்டணத்தை ஆணையம் நிர்ணயிக்கும். இதனால், வேளாண்மை செய்ய தண்ணீரை பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்படும். பணம் கொடுத்து வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்தை தரிசாக போட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியாக இருந்தபோது பாலாறு தோன்றும் இடத்திலிருந்து கல்பாக்கம் வரை 240 கி.மீ. தமிழ்நாட்டுக்கு உரியதாகத்தான் இருந்தது. 1956-இல் மொழிவாரி மாநிலம் உருவாகியபோது தமிழர் பகுதியான சித்தூரை ஆந்திரத்துடனும், தங்கவயல் கோலாரை கர்நாடகத்துடனும் இணைத்ததால் 70 கி.மீ. கர்நாடக மாநிலத்துக்கும், 22 கி.மீ. ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமாகிப் போனது.
பாலாற்றுத் தண்ணீரைத் தமிழன் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எப்படித் தெரியுமா? ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே 22 கி.மீ. தொலைவில் 26 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. இந்தத் தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு மீதமுள்ள தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு வரும்.
முல்லைப் பெரியாறு அணை உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதியில் 1956 முதல் கேரளக் குடும்பங்கள் ஒன்றுகூட கிடையாது. இந்த அணை உள்ள பகுதியை கேரளத்தோடு சேர்த்ததால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை நம்முடைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறோம்.
மறுபுறம், காவிரியில் தண்ணீர் கிடைப்பதற்கு பருவ மழையையும், கர்நாடகத்தையும் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப, தமிழ்நாட்டில் உள்ள 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களை இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆழப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிராமங்கள்தோறும் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சுத்தப்படுத்தி நீர் சேமிப்புக் கலன்களாக மாற்ற வேண்டும். மேலும், புதிய நீர்நிலைகளைத் தோற்றுவிக்க வேண்டும். நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர் வார வேண்டும்.
மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்க அதிக இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். ஆறுகளை இணைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றை போர்க் கால அடிப்படையில் செயல்படுத்தினால்தான் பருவ மழை
பெய்யும் சமயத்தில் அதைச் சேமித்து குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...