/

ஆராய்ச்சியும் சமூகமும்

ஒரு நாட்டில் உயர் கல்வியின் தரம் உயர உயர சமூகத்தின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரச் செயல்பாடுகளும் உயரும் என்பதும் கோட்பாடு.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:59 am

க. பழனித்துரை

ஒரு நாட்டில் உயர் கல்வியின் தரம் உயர உயர சமூகத்தின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரச் செயல்பாடுகளும் உயரும் என்பதும் கோட்பாடு. கல்வி என்பது மானுடத்தை மேம்படுத்தும் கருவி என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
 ஆனால், இன்றைய யதார்த்த நிலையில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை சமூகத்தில் கூடியதால், உயர் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆராய்ச்சி நிலையங்களின் எண்ணிக்கை கூடியதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதா, சமூகம் மேம்பாடு அடைந்துவிட்டதா என்பதுதான் பிரதானமான கேள்விகள்.
 இந்தக் கேள்விகளுக்கு நாம் நேரடியாக ஆம் என்றோ, இல்லை என்றோ ஒட்டுமொத்தமாகப் பதில் கூற முடியாது. மானுடத்தின் புற நடவடிக்கைகளில் கல்வி ஏற்படுத்தியிருக்கக் கூடிய தாக்கம் என்பதை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
 ஆனால், மானுடத்தின் சிந்தனைப் போக்கில், நடத்தையில், பார்வையில், அணுகுமுறையில், செயல்பாடுகளில் மானுடத்தைச் செம்மைப்படுத்தும் நிலைகளில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்ற உண்மையையும் நாம் பதிவு செய்தாக வேண்டும்.
 அது மட்டுமல்ல, இன்றையச் சூழலில் இந்தக் கல்வி சமூகத்தில், பொருளாதாரத்தில், வாழ்க்கை முறையில் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றங்கள் ஓர் அடிப்படைக் கேள்வியை உருவாக்கியிருக்கின்றன. இன்றைக்கு நாம் தருவதும், பெறுவதும் கல்வியா என்ற கேள்வி நம் முன் எழுந்துள்ளது.
 இந்தக் கல்வி மானுடத்தை மேம்படுத்துவதற்குப் பதில், தாழ்நிலைக்குக் கொண்டு செல்கிறது என்ற சூழலைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். கல்வி என்பது சமூக மேம்பாட்டுக்கு என்பதிலிருந்து என் வாழ்வாதாரத்துக்கு, என் முன்னேற்றத்துக்கு என்ற நிலைக்கு வந்துவிட்டது.
 கல்வி என்பது விவேகானந்தர் கூறியதுபோல, தன்னம்பிக்கையைத் தருவதற்குப் பதில் கல்வி கற்றவர்கள் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று அழுது புலம்பும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. கல்வி கற்றோரின் எண்ணிக்கை கூடியதால் சமூகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் உருவாகி சமூகச் சிக்கல்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதைப் பார்த்து வருகிறோம்.
 கல்வி நிறுவனங்கள் சமுதாயத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டு செயல்படுகின்ற தன்மையும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 குறிப்பாக, தொழில்நுட்பம் படிக்கிற மாணவர்கள் தொழிற்சாலைகளுடன் இணைந்து தங்கள் படிப்பினை, பயிற்சியினை மேற்கொள்ளவில்லை என்றால், அவர்கள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்றவராகத் தங்களைத் தயாரித்துக் கொள்ள முடிவதில்லை.
 கல்வி நிறுவனங்கள் மானுடப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அறிவின் மூலம் முயற்சிக்கிறபோது, அறிவு உருவாக்கத்தைச் செய்கின்ற கல்வி நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரோ, உருவாக்கப்பட்ட அறிவோ, தொழில்நுட்பமோ, திறனோ செயல்படுத்தப்படும் இடங்களுக்கு நேரடியாக வருவது கிடையாது.
 கல்வி நிலையங்கள் போதித்தலுடனும், ஆராய்ச்சி செய்தலுடனும் நின்று விடுகின்றன. அப்படி போதிக்கின்றபோதும் சரி, ஆராய்ச்சி செய்கின்றபோதும் சரி, சமூகம் சார்ந்த, சமூகத்துக்குத் தேவையானவற்றைப் பற்றி செய்வது கிடையாது.
 அது மட்டுமல்ல, சமூகமும் விழிப்புணர்வுடன் இந்தக் கல்வி நிறுவனங்கள் பொறுப்புடன் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணச் செயல்படுகின்றனவா என்று கண்காணிப்பதில்லை. இந்தக் கல்வி நிறுவனங்களை சமூகத் தணிக்கை செய்வதும் கிடையாது. இது உலகம் முழுவதும் இருக்கிற பிரச்னை. இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகளில் சமூகத்துக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்பது உயிரோட்டமானதாக இருக்கிறது.
 சமூகத்துக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள இடைவெளி என்பது குறைவாகவே இருக்கின்றது. ஏனென்றால், மக்களின் விழிப்புணர்வு, சமூகப் பார்வை என்பது சற்று அதிகமாக இருக்கின்ற காரணத்தால். சமூகத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு ஓரளவு செயல்பாடுகள் இருக்கும்.
 குறிப்பாக, சமூகப் பிரச்னைகளை நேரடியாகத் தீர்க்க முயற்சித்து உதவி செய்யும் ஆசிரியர்களுக்கு ஊக்கமும், உதவியும், பாராட்டும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், வளர்முக நாடுகளில் அதுவும் குறிப்பாக ஆப்பிரிக்க - ஆசிய நாடுகளில் சமூகத்துக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள இடைவெளி அதிகம்.
 பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி பேசுகையில், "நமது சமூகத்தையும், உலகையும் சிறப்பாக ஆக்குவதற்கு கடந்த 60 ஆண்டுகளில் நமது உயர் கல்வி நிறுவனங்கள் ஏதாவது பங்காற்றி உள்ளனவா?
 அதேசமயம், அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமோ கடந்த 50 ஆண்டுகளில் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய குறைந்தபட்சம் 100 மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளது.
 வறுமை முதல் எழுத்தறிவின்மை வரை, மாசுபட்ட ஆறுகள் முதல் சீர்குலையும் மருத்துவத் துறை வரை எத்தனையோ பிரச்னைகளுக்கு நமது நாட்டில் தீர்வு காணப்படவில்லை. இருந்தும் உயர் கல்வி நிறுவன மாணவர்கள் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆராய்ச்சியில் ஈடுபடாமலேயே படிப்பை நிறைவு செய்கிறார்கள். படித்து முடித்து வெளியே சென்ற பின்னும் அவர்கள் பெரிதாக எதையும் சாதிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது' என்று குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மையே.நமது நாட்டில் கல்வி என்பது வாழ்க்கை மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு என்ற பார்வை கொண்டவையாக இல்லாமல் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கப்படுகிறது. அத்துடன் கல்வி நிறுவனங்கள் என்பது மக்களுக்கு உதவிட வந்தது என்பதிலிருந்து அது ஏதோ உயர்நிலை அமைப்பு, அது சமூகத்தின் தணிக்கைக்கு உள்பட்டது அல்ல என்ற பார்வையையும் மனோபாவத்தையும் சமூகம் கொண்டிருப்பதால் கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது நம் கடமை என்ற உணர்வையும், பார்வையையும் பெறவில்லை.
 இந்தச் சூழலை மாற்றியமைக்க பல நாடுகளில், பல நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. பல நாடுகளில் உள்ள அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக, ஆராய்ச்சி நிதி ஒதுக்கும்போது சமூகத்துக்குத் தேவையான ஆய்வுகள் மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளித்து உதவிகளைச் செய்தன.
 இருந்தபோதும், அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளும் சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வினைக் கொண்டு வரவில்லை. ஆய்வு அறிக்கைகளாகப் பல்கலைக்கழக நூலகங்களில் அடுக்கி வைக்கப்பட்டவையாகத்தான் பார்க்க முடிந்தது.
 அதேநேரத்தில், தொழில்கள் மேம்பாட்டுக்காக, தொழிற்சாலைகளின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தையும் தொழில் மேம்பாட்டுக்கும், சந்தைச் செயல்பாடுகளுக்கும் எடுத்துச் சென்றுவிட்டனர். காரணம், நிதி தந்தவர்கள் கவனமாக கல்வி நிலையங்களில் செய்யப்பட்ட ஆய்வினை கண்காணித்து தங்கள் செயல்பாடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.
 இந்தச் செயல்பாடுகளைப் பார்த்து ஒரு சில நாடுகளில் சமூகப் பங்களிப்புடன் உயர் கல்வி நிறுவனங்களில் ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடு என்று முடிவுகள் எடுத்து, சமூகத்துக்குத் தேவையான ஆய்வினை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தன.
 கனடா நாட்டில் உள்ள சமூக விஞ்ஞானக் கழகம் இதனைத் திறம்பட செயல்படுத்திக் காண்பித்தது. சமூகத்துக்கு எவையெல்லாம் பிரச்னைகளோ அவற்றை எடுத்து ஆய்வு செய்திட அந்தக் கழகம் நிதி உதவி அளித்தது. அது மிகப் பெரிய விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தியது. அத்துடன் அந்த ஆய்வில் கிடைத்த முடிவுகளை நடைமுறையில் செயல்படுத்த சமூகத்துக்கு எடுத்துச் சென்றது.
 உயர் கல்வி நிறுவனங்கள் அப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டபோது, சமூகம் அதை முழுமையாகப் பின்தொடர்ந்து கண்காணித்தது. இதன் விளைவு சமூகத்துக்கும், கல்வி நிறுவனத்துக்கும் உள்ள உறவு மேம்பட்டது. கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை தங்கள் மேம்பாட்டுக்குச் சமூகக் குழுக்கள் பயன்படுத்திக் கொண்டன.
 இதனைத் தொடர்ந்து, இந்தியாவிலும் சமூகப் பங்கேற்புடன் கல்வி நிறுவன ஆய்வுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழுவை ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் இந்த அணுகுமுறையை பரிசோதனை அடிப்படையில், ஒரு திட்டமாக உருவாக்கி நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.
 எப்படி பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில் துறை உறவு முக்கியம் என்று வலியுறுத்தப்படுகிறதோ, அதேபோல் பல்கலைக்கழகங்களுக்கு சமூகத் தொடர்பு மிக முக்கியமானது என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சில பல்கலைக்கழகம் மட்டும் என்று இல்லாமல், எல்லா கல்வி நிறுவனங்களும், அது பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, சமூக அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, விவசாயக் கல்லூரியாக இருந்தாலும் சரி, அத்தனையும் சமூகத்துடன் இணைந்து செயல்பட அரசு பணிக்க வேண்டும்.
 அப்பொழுதுதான் கல்வி நிறுவனங்கள் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கும். இந்தப் பொருள் பற்றி நம் கல்வியாளர்கள் விவாதிக்க முன் வரவேண்டும். அதன் அடிப்படையில் அரசு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் .
 
 "நமது சமூகத்தையும், உலகையும் சிறப்பாக ஆக்குவதற்கு கடந்த 60 ஆண்டுகளில் நமது உயர் கல்வி நிறுவனங்கள் ஏதாவது பங்காற்றி உள்ளனவா?'
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.