தற்போதைய காலச் சூழ்நிலையில் எந்தப் பிரச்னைக்குத்தான் போராட்டம் நடத்துவது என்ற சிந்தனையே இல்லாமல் மிகச் சிறிய பிரச்னைகளுக்கும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால், ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுவது பொதுமக்களே.
ஒரு நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாதபோது அதை நிறைவேற்ற வலியுறுத்தி படிப்படியாக பல்வேறு கட்ட போராட்டங்களை அஹிம்சை வழியில் நடத்துவதுதான் நியாயமான போராட்டமாகும். போராட்டம் என்றால், நம் நாட்டு சுதந்திரத்துக்காக பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களை உதாரணமாகக் கூறலாம்.
ஆனால், இப்போது நடக்கும் போராட்டங்கள் தனிப்பட்ட பிரச்னைகளுக்காக நடத்தப்படுகின்றன. சாலை விபத்து நடந்தால் சாலை சரியில்லை என்று போராட்டம் நடத்துகின்றனர்.
போக்குவரத்துக் காவலர் வாகனத்தை திடீரென நிறுத்தச் சொன்னதால் வாகனத்தை நிறுத்தியபோது விபத்து ஏற்பட்டது. அதனால், போக்குவரத்துக் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்துகின்றனர். விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளை முன்னிறுத்திக் கொள்ளவும், மக்களிடையே செல்வாக்கு பெறவும் போராட்டங்களை அறிவிக்கின்றனர். அது பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது என்று எடுத்துக் கொண்டாலும், அதில் அவர்களுடைய சுயநலமே மேலோங்கி உள்ளது.
குறிப்பிட்ட சங்கங்களும் தங்களுடைய சங்க உறுப்பினர்களின் நலனுக்காக போராட்டங்களை நடத்துகின்றன. குடிநீர் வரவில்லையென்றால் போராட்டம், கால்வாய் சுத்தம் செய்யவில்லையென்றால் போராட்டம், இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டு அதனால் பாதிக்கப்படுபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம்.
தவறு செய்தவர்கள் என்று தெரிந்த போதிலும், அவர்களை காவல் துறையினர் கைது செய்தால் விடுவிக்கக் கோரி போராட்டம்.
போராட்டங்களை வன்முறையோடு நடத்துபவர்களும் இருக்கின்றனர். அவர்களை தீவிரவாதிகள், நக்ஸலைட்டுகள் என்ற பெயரில் அழைக்கிறோம். மத ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன. தேசப் பாதுகாப்புக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலும் சில போராட்டங்கள் வன்முறையாக மாற்றப்படுகின்றன.
அப்பாவிகளை மூளைச் சலவை செய்து தவறான தகவல்களைப் பரப்பி போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதை சமூக விரோதிகள் தங்கள் முழுநேரப் பணியாகவே செய்து வருகின்றனர். அதனால், அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
போராட்டத்தைத் தூண்டிவிட்டவர்கள் காவல் துறையிடம் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். எதற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்பதை முழுமையாக அறியாமல் போராட்டத்தில் பங்கேற்று வன்முறையாக மாறும்போது, அந்த வன்முறைச் சம்பவத்துக்கு அப்பாவிகள் காரணமாக்கப்படுகிறார்கள்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் ஒரு பெண் மாயம், ஓர் இளைஞன் மர்ம மரணம் தொடர்பான போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்துள்ளது. தனிப்பட்ட பிரச்னைக்காக நடத்தப்பட்ட வன்முறைப் போராட்டத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான்.
ஆம்பூர் வன்முறையில் காவல் துறையினர் அதிக அளவில் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டனர். மறைமுகமாக ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 5 மணி நேரம் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவசர வேலையாக வெளியூர் செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் என பலதரப்பட்ட பொதுமக்களும் அதனால் பாதிப்படைந்தனர்.
இவ்வாறான போராட்டங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. நியாயமான காரணங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு நியாயமற்ற காரணங்களை முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறான போராட்டங்களின் முடிவு வன்முறையாக மாறுகின்றன.
வன்முறைக்கு வித்திடும் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அதேநேரத்தில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான அஹிம்சை வழியிலான போராட்டங்களைக் கட்டுப்படுத்தாத வகையில் அச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
நியாயமான போராட்டங்கள் என்றைக்கும் தடுக்கப்படக் கூடாது. அதேநேரத்தில், நியாயமற்ற போராட்டங்கள் நடத்த என்றைக்குமே வழி ஏற்படுத்திவிடக் கூடாது. இதனை போராட்டக்காரர்களே உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், சட்டத்தின் வழியில் அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். சட்டத்தை முறையாகச் செயல்படுத்தி தேவையற்ற போராட்டங்களை நடத்த விடாமல் கட்டுப்படுத்த வேண்டும்.
சென்னையில் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், "போராட்டம் நடத்த உரிமை உண்டு; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி போராட்டம் நடத்த உரிமை இல்லை' என்பதைத் தெளிவுபடக் கூறியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

