அற்றம் மறைக்கும் பெருமை!
நிழற்படம் எடுக்கும் ஒருவன், அர்த்தநாரீசுவரருக்குப் பக்கத்தில் ஓர் எலும்புத்துண்டு கிடந்தால் அதனை ஒதுக்கிவிட்டு, புகைப்படம் எடுக்கமாட்டான்.


நிழற்படம் எடுக்கும் ஒருவன், அர்த்தநாரீசுவரருக்குப் பக்கத்தில் ஓர் எலும்புத்துண்டு கிடந்தால் அதனை ஒதுக்கிவிட்டு, புகைப்படம் எடுக்கமாட்டான். எலும்புத் துண்டையும் சேர்த்தே எடுத்துவிடுவான். அர்த்தநாரீசுவரரை ஓவியமாக வரைகின்ற ஓர் ஓவியன் அந்த எலும்புத்துண்டை ஒரு மலராக்கி, வரைந்துவிடுவான்.
ஓர் எழுத்தாளன் அந்தக் காட்சியைப் பார்த்தால், எலும்புத் துண்டுக்குப் பக்கத்தில் கண்ணப்ப நாயனாரையும் வரைந்து, அவருக்குக் காட்சி கொடுப்பது போல், மாதிருக்கும் பாதியானையும் வரைந்து, அதனை ஓர் அர்த்தமுள்ள காட்சியாக்கிவிடுவான்.
எழுத்தாளன் ஓவியனைப்போல், இருப்பதையும் மறைக்கவில்லை நிழற்படக்காரனைப் போல் அருவருப்பையும் சேர்த்து வரையவில்லை. மானுடத்தின் பிரதிநிதியாக இருந்து, விகாரத்தையும், ஆராதிக்கும் காட்சியாக்கிவிடுகிறான்.
எழுத்தாளன் கத்திரிக்கோலாய் இருந்து முழுமையாக இருந்த துணியைக் கத்தரித்துத் துண்டு துண்டாக்கிவிடக்கூடாது. வெள்ளை ஆடையாக இருந்தாலும், கிழிசல்பட்டிருந்த இடத்தைத் தைத்து, மானங்காக்கும் ஊசியாக இருக்க வேண்டும் அவன்.
முதலில் தேரை விழுந்த கற்களை ஒதுக்கிவிட்டு, நல்ல கல்லைத் தேர்ந்தெடுத்த பிறகே சிற்பி சிற்பத்தைச் செதுக்கத் தொடங்குவான். மரத்தச்சன் பூச்சியடித்த மரங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, வைரம் பாய்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான், தனது கலைப்பணியைத் தொடங்குவான். அதுபோல எழுத்தாளன் சமூகத்தை மேலும் ஒரு படி உயர்த்தக்கூடிய அம்சத்தைத் தேர்ந்தெடுத்தப் பின்னர்தான், தன் பேனாவை ஓடவிட வேண்டும்.
ஓர் எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்பதைக் காட்டிலும், எதை எழுதக்கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும். அன்றெனில் அவனுடைய எழுதுகோலே, அவனை நெம்பும் கோலாகிவிடும்.
பாரதியார், "பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும்' என்றார். அவர் எழுதத் தொடங்கும் முன், நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும் பாடு என்று பராசக்தி பகன்றாளாம்.
பாவேந்தர் பாரதிதாசன், "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட....... இன்னலிலே தமிழ்நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார், அன்னதோ காட்சி இரக்கம் உண்டாக்கி என் ஆவியில் வந்து கலந்ததுவே' என்று எழுத்தின் இலக்கணத்தைப் படம் பிடித்தார்.
1928-இல் டாக்டர் சுப்பராயன் ஐக்கிய மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது, "தென்னிந்தியப் பறவைகள்' எனும் நூலிற்காக ரூபாய் 4,000/- வழங்கும்படி சட்டப்பேரவையில் ஒரு பிரேரணை வந்தது.
அப்போது அப்பேரவையில் அங்கத்தினராக இருந்த இராமநாத் கோயங்கா "என்னைப் பொறுத்தவரையில் இந்த 4,000 ரூபாய் வங்காள விரிகுடாவில் தூக்கி எறியப்படுவதற்குச் சமமாகும். பாரதியின் பாடல்களை வெளியிட்டுப் பரப்ப வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். படிப்பறியா மக்களிடம் இலவசமாக பாரதியார் பாடல்களை வழங்க வேண்டும்.
நேற்று எதிர்தரப்பில், பறவைகள் சம்பந்தப்பட்ட நூல், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறினார்கள். அப்படிப் பார்த்தால், பாரதியார் பாடல்களே விவசாயிகளுக்கு அதிக பயன்தரும்.
இந்தப் பிரேரணையாலும், பறிமுதல் நடவடிக்கையாலும், பாரதியாரின் பாடல்களின் கெளரவம் உயர்ந்துவிட்டது' எனப்பேசி, செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் எடுத்துரைத்திருக்கிறார் அப்பெருந்தகை.
எழுத்தாளனின் இலக்கைத் துல்லியமாகக் கணித்தவர், மகாகவி பாரதி. இந்திய மக்கள் அனைவராலும் வெறுக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் லார்ட் கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்து, எரிகின்ற நெருப்பிலே எண்ணெயை ஊற்றியவன். அவனுடைய அன்பு மனைவி மேரி விக்டோரியா லெயிட்டர்.
அவள் நிச்சயதார்த்தம் ஆகி, இரண்டு வருடங்கள் காத்திருந்து, கர்சானையே கைப்பிடித்த அமெரிக்க மாது. என்றாலும் அவள் 1906-இல் அகால மரணமடைந்தாள். அதனைப் பிரசுரித்த கல்கத்தா அமிர்தபஜார் பத்திரிகை, "வங்கத்தை இரண்டாகப் பிரித்து, வங்கத்திலே அடாவடித்தனங்களை மேற்கொண்ட கர்சானுக்கு இறைவன் வழங்கிய தண்டனை, மனைவியின் மறைவு. இதனால் எங்களுக்கு வருத்தமில்லை. உண்மையில் உள்ளூர மகிழ்ச்சிதான்' என்று எழுதிவிட்டது.
இதைப் படித்த பாரதி, "ஏ, பத்திரிகையாளனே, ஒருவருடைய மனைவி இறந்தால், துக்கம் அனுஷ்டிக்காமல், அவருடைய சாவை வரவேற்று எழுதியது பேடித்தனம். மனிதநேயமற்ற செயல்' என்று அமிர்தபஜார் பத்திரிகையைக் கண்டித்து, கடுமையாக எழுதிவிட்டார். இதன் மூலம் ஓர் எழுத்தாளன் எதை எழுதக்கூடாது என்பது தெற்றெனப் புலனாகின்றது.
எழுத்தின் இலக்கணம் எதை நோக்கி அமைய வேண்டும் என்பதை நன்குணர்ந்த திருவள்ளுவர், "அற்றம் மறைக்கும் பெருமை' (குறள் 980) என்றார். அதாவது நல்லதல்லாவற்றை மறைப்பதுதான் பெருமை என்றார்.
ஒருமுறை காந்தியடிகள், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் குமாரி ப்ரேமா பஹல் என்கிற தம்முடைய மாணவிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அடிகள் தம் மனத்தைத் திறந்து, ஆண் - பெண்ணின் திருமண வாழ்க்கை முறைமையையும், குடும்ப உறவுகள் பற்றிய செய்திகளையும் விரிவாக எழுதிவிட்டார். இந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு, அவரைத் தூற்றுவதற்குப் பலர் முற்பட்டனர்.
அதனைக்கண்டு மும்பையிலிருந்த, காந்தியடிகளிடம் பக்தி கொண்டிருந்த சான்றோர் பெருமக்கள் ஆத்திரம் அடைந்து, பத்திரிகைகளின் மூலம் எதிர்ப் போராட்டம் நடத்த, அடிகளிடம் இசைவு கேட்டனர். ஆனால், காந்தியடிகள் காலத்தையும், சக்தியையும் நல்லதற்கே பயன்படுத்த வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார்.
ஓர் எழுத்தாளனின் இதயம் விசாலமாக இருக்க வேண்டும் என்பதை வ.வே.சு. ஐயர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
நிரதிசயமான ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமானால், குறுகிய இருதயங்கள் விரிய வேண்டுமானால், இருளடைந்த மனதில் கோடி சூரியப் பிரகாசம் பிரவேசித்து, அதை ஒளிப்படுத்த வேண்டுமானால், மனிதர் ஆரியருடைய வேதங்களையும், உபநிஷத்துகளையும் படித்திடுக;
நம்மாழ்வாரின் வாக்கையும், அப்பருடைய அன்பு நிறைந்த தேவாரத்தையும் அனுபவித்திடுக; யூத நூல்களில் யோப்பையும் (ஒர்க்ஷ) ஸீலெமானின் (நர்ப்ர்ம்ர்ய்) பேரழகு வாய்ந்த கானத்தையும் பயிலுக;
கிறிஸ்துவ நூல்களுள் நான்கு சுவிசேஷங்களோடு (Testaments) அவர்களுடைய கடைசிப் புத்தகமான பவிஷியத் தரிசனத்தையும் (Revelations) ஆழ்ந்து படித்திடுக;
கடவுளிடம் பயம் நிறைந்த பக்தி வேண்டுமானால், முகமது நபியின் ஸராக்களையும், குரு கோவிந்த சிங்கினுடைய சண்டி ஸ்தோத்திரத்தையும், கடகஸ்துதியையும் சிரத்தையுடன் படித்திடுக;
தயையினும் பிரேமையினும் ஆரோகண அவரோகணமனைத்தையும் தங்கள் இருதயமாகிற வீணையில் கேட்க விரும்புகிறவர்கள் என்னையாளுடைய ஐயன் புத்தனுடைய திரிபிடகத்தையும், உலக குருவான வர்த்தமான மஹாவீரருடைய திருவாக்குகளையும், ஸ்ரீ பாகவதத்திலுள்ள பாலகோபாலனுடைய திருவிளையாடல்களையும் ஆர்வத்தோடு கேட்டிடுக;
அறம் என்றைக்கும் வெல்லும், பாவம் என்றைக்கும் தோற்றே போகும் என்கிற திட நம்பிக்கை வேண்டியவர்கள் ஐராதுஷ்டிரனுடைய (Zoraster) வாக்குகளை ஆழ்ந்து படித்திடுக.
ஓர் எழுத்தாளன் நினைத்தால், தீராத பிரச்னைகளைக் கூடத் தீர்த்து வைக்க முடியும். 1979-இல் குவைத் ஷேக் ஒருவர் தம்முடைய குழந்தையை மிகவும் ஆபத்தான நிலையில் இலண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். வியாதி இன்னதென்று மருத்துவ வல்லுநர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது ஒரு நர்ஸ், குழந்தையின் இரத்தத்தில் தால்யம் என்னும் விஷப்பொருள் கலந்திருக்கக்கூடும் என்றார். இரத்தத்தில் தால்யம் கலந்திருக்கிறதா என்பதைச் சோதிப்பதற்கு ஸ்காட்லாந்து போலீசிடம் மட்டுமே வசதிகள் இருந்தன.
ஷேக் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து, ஸ்காட்லாந்து போலீசு லபாரெட்டரியில் சோதனை செய்தார். இரத்தத்தில் தால்யம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, குழந்தை காப்பாற்றப்பட்டது.
இப்பொழுது, ஸ்காட்லாந்து போலீசுக்கு நர்சு மீது சந்தேகம் வந்தது. மருத்துவர்களுக்குத் தெரியாத உண்மை, இந்த நர்சுக்கு எப்படித் தெரிந்தது? நர்சு அகதா கிறிஸ்டி எழுதிய "எ பேர்ல் ஹார்ஸ்' என்ற புத்தகத்தை எடுத்து போலீசார் முன் வைத்தாள்.
அகதா கிறிஸ்டி இது போன்றதொரு சம்பவத்தை யூகித்து, அந்த நாவலில் எழுதியிருந்தார். பின்னர் அச்செய்தி, "தி பிரிட்டீஷ் ஜெர்னல் ஆப் மெடிசன்' இதழிலும் இடம்பெற்றது. இவ்வாறு படைப்பாளிகள் நிபுணர்களால் சிந்திக்க முடியாத பிரச்னைகளுக்குக் கூடத் தீர்வு காணலாம்.
ஓர் எழுத்தாளன், பாழுங்கிணற்றில் என்றைக்கோ விழுந்த பழைய பாத்திரங்களைத் தேடி எடுக்கும், பாதாளக் கரண்டியாக இருக்கக்கூடாது. ஆதிக்க வர்க்கத்தால் பாதிக்கப்படும் தரித்திர நாராயணர்களுக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும்.
அவசரத்தில் ஒரு மனிதன் மிதித்துக் கொண்டு வரும் மலத்தைப் படம் போட்டுக் காட்டி, அவனுடைய கவனக்குறைவை எச்சரிக்கும் திண்ணைப் பேச்சு வீரனாக அவன் இருக்கக்கூடாது. சூழ்ந்து வரும் பகையை நெட்டித் தள்ளும் கூரிய வேலாக இருக்க வேண்டும்!
கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...