/

பெரிதினும் பெரிது கேட்போம்!

மகாகவி பாரதிக்கு "பாரத ரத்னா' விருது கிடைக்க வலியுறுத்துவேன்' என்று உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்திருக்கிறார். பாரதி மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி செலுத்துவோம்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

கிருங்கை சேதுபதி

மகாகவி பாரதிக்கு "பாரத ரத்னா' விருது கிடைக்க வலியுறுத்துவேன்' என்று உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்திருக்கிறார். பாரதி மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி செலுத்துவோம்.

ஆனால், இதுதான் பாரதிக்குப் பெருமை சேர்க்கும் என்று நம்புவது அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை. உண்மையில், பாரதியின் உள்ளம் பெரிது; பணி பெரிது; அவர் பாரத நாட்டைப் பார்த்த பார்வை மிகப் பெரிது.

உலக வரைபடத்துக்கும் அப்பால் உலகநாடுகளின் உன்னதங்களையெல்லாம் விட ஓங்கி, பிரபஞ்ச அளவில் இந்த நாட்டின் பெருமை உயர்ந்திருப்பதை உணர்ந்து பாமரரும் உணரப் பாடியவர் அவர்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

அவைபிழையாமே சுழற்றுவோன் நான்

கண்ட நற்சக்திக் கணமெலாம் நான்

காரணமாகிக் கதித்துளோன் நான்

என்று பாடிக் கொண்டிருக்கும்போதே, "இவையெல்லாம் இந்த ஒற்றைநாடி உடம்புக்குள்ளிருந்த பாரதியா' என்று பலரும் ஐயுற நேரும் என்று கருதித்தானோ என்னவோ, "நான் என்னும் பொய்யை நடத்துவோன் நான்' என்றும் தன்னுணர்வை ஒரு பாடலில் தந்திருக்கிறார் பாரதி.

இந்தியநாட்டில் பிறந்த எல்லாரும் ரத்தினங்கள் என்று போற்றியவர் அவர். அவர், பாரத தேசம் என்று பெயர் சொன்னாலே - துயர்ப் பகைகளை வெல்ல முடியும் என்று நம்பியவர்.

அவர்கள் இந்திய நாட்டில் பிறந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. பெயர் சொல்லத் தெரிந்தவர் எவராக இருந்தாலும், இந்த உலகிலும், இந்த உலகத்திற்கு அப்பாலும் இருந்துகொண்டு, பாரத தேசம் என்று பெயர் சொன்னாலே துயர்ப் பகைகளை வெல்ல முடியும் என்று உறுதிபட உரைத்தவர் அவர்.

அத்தகு ஆன்ம பலத்தை, இந்நாட்டின் உன்னத ஞான நூல்கள் ஊட்டிவிடும் என்கிற நன்னம்பிக்கை அவருக்கு உண்டு. எண்ணற்ற ஞானிகள் பிறந்து ஞானம் வளர்த்த பெருநாடு இந்தியா என்கிற பெருமிதம் அவருக்கு இருந்தது.

அந்த வரிசையில் அவரே ஒரு ஞானி. எத்தனையோ சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் என்று தன் வரவைப் பிரகடனப்படுத்தியவர் அவர். முந்தையச் சித்தர்களின் முடிபெலாம் ஒன்று திரட்டித் தன்காலத்திற்குத் தகுந்த நன்னெறிகளைப் பாட்டில் புகட்டிய பைந்தமிழ்ச் சித்தர் பாரதி.

மாயாவாதம் பேசி மழுப்பிக் கொண்டிருந்த மற்ற சில ஞானிகளுக்கு மத்தியில் கண்ணெதிரில் கண்ட கொடுமைகளை எதிர்த்துத் துணிந்து போராடியவர். "எழுதுகோல் தெய்வம் - இந்த எழுத்தும் தெய்வம்' என்ற நிலைப்பாடு அவருக்கு உண்டு.

"நமக்குத் தொழில் கவிதை' என்று வரித்துக்கொண்ட பாரதி, தம் மனத்துக்கும் அவ்வாறே கட்டளையிடுகிறார். பொன்னை, பொருளை, புகழை விரும்பிக் கவிதைத் தொழில் செய்தவர் அல்லர் அவர். நாட்டிற்கு உழைத்தல் அதுதான் அவர் நோக்கம். அதுவும், ஓய்வுப்பொழுது உழைப்பன்று, இமைப்பொழுதும் சோராதிருந்து செய்யும் தொழில்.

இந்தத் திருநாட்டில் எல்லையில்லாத இயற்கை வளங்களையெல்லாம் வந்து வந்து அன்னியர்கள் சுரண்டிக் கொண்டிருக்கையில், அதை எதிர்த்துப் போராடப் பாமரர்களுக்கும் கற்றுத் தந்தவர்.

வல்லமைமிக்க போராயுதமாய்ப் பாட்டாயுதம் தந்தவர். கார்ட்டூன் ஆகிய கருத்துப் படங்களில் அத்தகு சுரண்டல் காட்சிகளைச் சித்திரப் படுத்தியவர். தன் காலத்திலும் தனக்கு முன்காலத்திலும் இந்திய விடுதலைக்குப் போராடிய எண்ணற்ற வீரர்களின் சரிதங்களையெல்லாம் எழுதிக் கொடுத்தவர்.

தன் காலத்துத் தலைவராக விளங்கிய திலகருக்குத் தளபதியாகத் தென்னாட்டில் பிறந்த தேசியக்கனலாக வ.உ.சி.யை வளர்த்துக் கொடுத்தவர்.

வெள்ளைக்கார விஞ்ச் துரையை எதிர்த்து, தேசபக்தன் வ.உ.சி. போர்க்குரல் கொடுப்பதாக, பாவனை நாட்டிப் பாட்டுகள் கட்டியவர். அதில் ஒரு கீற்றாய் ஓர் உண்மையை உரைப்பார் பாரதி. "பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ' என்பது அக்கண்ணி.

"நாங்கள் முப்பதுகோடி ஜனங்களும் நாய்களோ - பன்றிச்சேய்களோ' என்று முழக்கமிட்டு, ஒவ்வோர் இந்திய வீரரையும் தட்டி எழுப்பியவர்.

அவர் புதுவையில் வாழ்ந்த சமயம், தனது இதழுக்கு அட்டைப்படமாகப் பாரத மாதாவை வரையச் சொன்னபோது, அன்னையை எவ்வண்ணம் வரைவது என்று ஓவியர் தயங்கினாராம். செல்வம் எல்லாம் சுரண்டப்பட்ட நிலையில் பாரத மாதா துக்கித்திருப்பதாக வரையச் சொன்னார் அங்கிருந்த வ.வே.சு.ஐயர்.

உடனே பாரதியார் அதை மறுத்து, "நம் நாட்டுக் கங்கையையும் காவிரியையும் சுருட்டிக் கொண்டா போய்விட்டார்கள்? இமயமலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டா போய்விட்டார்கள்? பாரத மாதா ஆபரணங்கள் பூண்ட சர்வ அலங்கார பூஷிதையாகவே இருக்கட்டும். அவளுக்கு நவரத்ன மாலையை நான் சூட்டுகின்றேன்' என்று சொல்லி, "பாரத மாதா நவரத்ன மாலை' பாடினார்.

எனவே, பாரத மாதாவுக்கே, ஒன்றல்ல, இரண்டல்ல, ஒன்பது ரத்னங்களைக் கொண்டு, வெண்பா, கட்டளைக்கலித்துறை, எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம், ஆசிரியப்பா, தரவு கொச்சகக்கலிப்பா, வஞ்சிவிருத்தம், கலிப்பா, அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம் என ஒன்பான் யாப்பு மரபில், ஒன்பது ரத்னங்களின் பெயர்கள் அமையுமாறு பாடினார் பாரதி. அதிலும் செப்பமிகு ஓசையுடைய வெண்பாவில் தொடங்கி, எழுசீர் விருத்தமாக முடித்திருப்பது அழகு.

இதெல்லாம் திட்டமிட்டு வந்ததில்லை. உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் தேசபக்தியின் திறமிகு வெளிப்பாடு. இல்லையென்றால், நல்வயிரம், நீலம், ஆணிமுத்து, பவளம், செம்மணி, பச்சை, கோமேதகம், பதுமராகம், வாலவாயம் எனும் ஒன்பது ரத்னங்களின் பெயர்களையும் உள்ளடக்கி, அவற்றுக்கேற்பக் கருத்துமணிகளைக் கோத்துக் கவிபாடியிருக்க முடியுமா?

இன்னும் சொல்லப்போனால், தாய்நாடு என்று பேசுபவர்களுக்கு மத்தியில் "தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று பாரத புத்திரர்களுக்கு, இந்நாட்டைப் பட்டயம் எழுதித் தந்தவர் பாரதியார்.

"மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று தொடங்கி, "நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி' எல்லை வரை, ஓங்கி உயர்ந்து விளங்கும் பாரத மாதாவின் திருப்பாதத்தை நவரத்ன மாலையில் எப்படிச் சித்திரப்படுத்துகிறார் தெரியுமா?

வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமாதாவின் பதமலர் மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும், இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகத்தோடு அன்னையின் சொல்கேட்டு, அயோத்தி இராமன் கானகம் புகுந்ததாய்க் கம்பன் கவிபாடுவானே அதுபோல், தன் தாய்த்திருநாட்டிற்காகத் தலைவர்கள் ஏது கூறினாலும், அவ்வண்ணமே ஏற்றுச் செம்மை சேர் உள்ளத்தோடு செய்பணியில் தலைநின்ற வீரர்கள் அவர்கள்.

செந்தமிழ்நாட்டுப் பொருநர், கொடுந்தீக்கண் மறவர், சேரர்தன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர், தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர், கன்னடர், ஒட்டியர், போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டியர், இந்துஸ்தானத்து மல்லர், ரஜபுத்ரவீரர், பஞ்சநதத்துப் பிறந்தோர், முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் பதத் தொண்டு நினைத்திடும் வங்கத்தினர் என்று கம்பத்தின் கீழ் நிற்கும் வீரர்களைக் கணக்கெடுத்துச் சொன்னவர் பாரதி.

அவர்கள், நம்பற்குரிய வீரர்கள். தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காக்கும் தீரர்கள். வந்தே மாதரம் அவர்களின் மந்திரம். தாயகம் காப்பதே வாழ்வின் லட்சியம் என்று துணிந்து நின்றவர்கள்.

இன்று பல கோடி மக்கள் வாழும் தேசமாய்ப் பாரதம் ஆகியிருக்கிறது. பரந்து விரிந்த இந்த பாரத தேசத்தைத் தமது பாட்டுத்திறத்தால் ஒன்று படுத்திய பாரதக் கவிகளுள் பாரதி மிக முக்கியமானவர்.

எனவே, அவருக்கு "பாரத ரத்னா' விருது கொடுப்பதை விட, அவர் பெயரில், ஆண்டுதோறும், இந்தியப் பெருங்கவிகளுக்கு, ஞானபீட விருதுக்கும் மேலதாய், பாரதி விருது கொடுக்க ஏற்பாடு செய்வதே சாலப்பொருத்தம்.

காசியில் பாரதி வாழ்ந்த இல்லத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக ஆக்க வேண்டும், பள்ளிகளில் பாரதி, திருவள்ளுவர் குறித்துப் பாடங்கள் சேர்க்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிற தருண் விஜயின் முயற்சி வெல்லட்டும்.

அத்தோடு, பாரதியார் பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஓர் இருக்கை ஏற்பாடு செய்து பாரதியின் எழுத்துகளை இந்திய மொழிகளில் எல்லாம் மொழிபெயர்த்துப் பரப்பச் செய்வது இன்னும் சிறப்பு.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று அவர் உணர்ந்து பாடிய உண்மையை, பாரததேசத்தவர் யாவரும் உணரும் வண்ணம், எல்லா மொழியினர்க்கும் தமிழ் கற்க, பாரதி தமிழ் என்றே ஒரு பட்டயக் கல்விக்கு வழிவகுக்கலாம்.

உலக அளவில் இந்தியநாட்டிற்குச் செம்மொழிச் சிறப்பைப்பெற்றுக் கொடுத்திருக்கிறது தமிழ். சம்ஸ்கிருதம் பயில்வதுபோல், அனைத்துக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளிலும், இன்னொரு மொழியாகத் தமிழைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம்.

அன்னிய மொழியான ஆங்கிலத்திற்கும் பிரெஞ்சுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை, இந்திய மொழியான தமிழுக்குக் கொடுத்தால் என்ன?

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை' என்று உலக அளவில் ஒப்பிட்டு உணர்ந்து பாடிய பாரதி மரபில், இப்பாவலர்களின் படைப்பாக்கங்களை, எண்ணற்ற இலக்கியச் செல்வங்களோடு இணைத்து எல்லா மொழியினரும் பயிலவும் மேலாய்வு செய்யவும் வழிவகுக்கலாம்.

இவ்வளவுக்கும் மேலாக, அவரை ஞானவானாக்கிய காசியில் அவர் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றைச் செய்வதும் சாலப்பொருத்தம்தான். இவற்றையெல்லாம் கேட்டுப் பெறுவதுதான் பாரதிக்குச் செய்யும் உயரிய மரியாதையாகும்.

கேட்பது என்று முடிவெடுத்த பிறகு பெரிதாகக் கேட்பதே சரி. ஏனெனில், பாரதியாரே கூறியிருக்கிறார் "பெரிதினும் பெரிது கேள்!'

கட்டுரையாளர்: துணைப் பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.