புனிதம் தொழுவதற்கு, மனிதம் வாழ்வதற்கு!
திருவாய்மொழி, நாராயணன் சொல்ல நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகம், மணிவாசகரால் மொழியப்பட, தில்லை நடராசரால் எழுதப் பெற்றது.


திருவாய்மொழி, நாராயணன் சொல்ல நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகம், மணிவாசகரால் மொழியப்பட, தில்லை நடராசரால் எழுதப் பெற்றது. ஷரியத் ஆண்டவரால் இறக்கப்பட, அது அருளாளரால் ஏந்தப்பெற்றது.
இவையெல்லாம் புனிதர் சொல்ல புனிதர்களால் வாங்கப்பட அல்லது எழுதப்படப் பெற்றவை. இவற்றில், மனிதர்கள் ஓர் எழுத்தை மாற்றவோ, மற்றொரு சொல்லைத் திருத்தவோ முடியாது, கூடாது.
ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மனிதர்கள் பணிக்க, மனிதர்களால் மனிதர்களுக்கு இயற்றப்பட்டது ஆகும். காலத்திற்கு ஏற்றவாறு, மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும், இறையாண்மையைக் காப்பதற்காகவும், எழுதப்பட்ட சட்ட வரைவில், திருத்தங்களைக் கொண்டு வரலாம்.
புனிதம் தொழுவதற்காகத்தானே தவிர, வாழ்வியலைத் தடுப்பதற்காக அன்று. மனித வாழ்க்கையில் மரணத்தைத் தவிர மற்றவை எல்லாமே மறுபரிசீலனைக்கு உரியவைதாம். எனவேதாம், 15.08.2015 வரை 100 சட்டத்திருத்தங்கள் அரசமைப்புச் சட்டத்திலே செய்யப்பட்டிருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள், பதினொரு மாதங்கள், பதினேழு நாள்களில், தவமாய் தவமிருந்து பெற்றது இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகும். 26.11.1948 அன்று அரசியல் சாசன சபை முன்னர், டாக்டர் அம்பேத்கரால் வழங்கப்பட்ட வரைவியலின் செறிவையும், அடர்த்தியையும், வீரியத்தையும் கண்டு வியப்படைந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அம்பேத்கர் இந்த வரைவு அமைப்புச் சட்டத்தின் தலைவராக, தம்முடைய அயராத உழைப்பின் மூலமாக எவ்வளவு திறமையுடன் இதனை வடிவமைத்துள்ளார் என்பதனை நான் பாராட்டவில்லை என்றால், என்னுடைய பொறுப்பிலிருந்து தவறியவனாவேன் எனப் புகழாரம் சூட்டியிருக்கிறார். இது வசிட்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் பெற்றதற்குச் சமமாகும்.
அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, திருத்தவோக் கூடாது என்ற எண்ணம் சிலபல வல்லுநர்களிடமும் உண்டு. அரசியல் சட்டத்தைத் திருத்தக்கூடாது என்று எண்ணுவது, இந்த பூமி இறந்தவர்களுக்குச் சொந்தம், உயிரோடு இருப்பவர்களுக்கு அல்ல என்று சொல்வது போலாகிவிடும் என அமெரிக்க நாட்டு அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பி ஜெபர்சன் எச்சரித்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தங்களுக்கு உள்பட்டதென்பதை டாக்டர் அம்பேத்கர், மாற்றவே முடியாத, திருத்தவே இயலாத கனடா நாட்டின் அரசியல் சட்டத்தைப்போல் அல்லாது, அசாதாரணமான நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான், மாற்ற முடியும் எனும் அமெரிக்க, ஆஸ்திரேலியா அரசியல் சட்டங்களைப் போல் அல்லாது, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு எளியமுறையை வகுத்ததன் மூலம், திருத்தங்களைக் கொண்டுவர மக்களுக்கு உரிமை வழங்கி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ முடியாத ஒரு முடிந்த முடிவு ஏற்படுவதை, இந்த அரசியல் நிர்ணய சபை தவிர்த்திருக்கின்றது என்று 25.11.1949 அன்று, அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தி
யிருக்கின்றார்.
இதனை வழிமொழிவதுபோல் பண்டித ஜவாஹர்லால் நேருவும், அரசமைப்புச் சட்டத்தில், குறிப்பிட்ட அளவில் நெகிழ்வுறு தன்மை இருத்தல் வேண்டும். எல்லாவற்றையும் இறுக்கமாகவும், நிரந்தரமாகவும் ஆக்கிவிட்டால், நீங்கள் நாட்டின் வளர்ச்சியை, வளரும் மக்களின் வளர்ச்சியை நிறுத்திவிடுவீர்! மாறிவரும் நிலைமைகளுக்கு இது ஏற்றதன்று எனக்கூறி 22.01.1947 அன்று வரைவுக் குழுவினருக்குச் சில நெறிமுறைகளை வழங்கியிருக்கிறார்கள்.
தேசம் தேங்கி நிற்கின்ற குட்டை அன்று, அது ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவநதி. அந்த ஜீவநதியில் சில நேரங்களில் சுழற்சிகளும், கரையை உடைக்கும் பேரலைகளும் எழுவதுண்டு. அப்படி ஒரு சுழற்சி, பாபு இராஜேந்திர பிரசாத் இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக வந்தபோது எழுந்தது.
இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆளும் கட்சிப் பிரமுகர்கள், பிரதமர் பண்டித நேருவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் குடியரசுத் தலைவரைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என இரண்டு மூன்று முறை கூறிவிட்டனர்.
முன்கோபத்துக்குச் சொந்தக்காரரான பிரதமர், என்ன பிரசிடெண்ட், பிரசிடெண்ட் எனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். உங்கள் நாட்டில் மன்னருக்கு என்ன மதிப்போ, அந்த மதிப்புதான் எங்கள் நாட்டில் பிரசிடெண்ட்டுக்கு என்று சிவந்த முகத்தைக் காட்டிவிட்டார்.
இதனைப் பத்திரிகைக்காரர்கள் ஊதி, பலூனாக்கிப் பறக்கவிட்டுவிட்டனர். அதனைப் படித்து ஆத்திரம் அடைந்த பாபுஜி உடனடியாகப் பத்திரிகை நிருபர்களை ராட்டிரபதி பவனுக்கு அழைத்து, அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு உரிய அதிகாரங்கள் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அப்படி வரையறுத்திருந்தால், அதனை உடனடியாக வெளிப்படுத்தியதாக வேண்டும் என்று ஊதப்பட்ட பலூனை ஓட்டையாக்கி, வெடிக்க வைத்துவிட்டார். இது பெரிய சர்ச்சையாகி, ஆளும் கட்சியிலே அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டன.
மூதறிஞர் இராஜாஜி, டி.டி.கே. போன்றவர்களால், பிரச்னை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டது. என்றாலும், அரசமைப்புச் சட்டத்தின் இறுக்கத் தன்மையும் அசைக்க முடியாத கட்டமைப்புத் தன்மையும், சிக்கலைத் தீர்க்கப் பயன்பட்டிருக்கின்றன எனலாம்.
மன்னர் மானிய ஒழிப்புக்கும், வங்கிகளைத் தேசியமயமாக்குவதற்கும், மூத்த அமைச்சர்களில் ஒரு சிலர் தடையாக இருப்பதாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நினைத்தார். அந்த நினைவுகளின் காரணமாக ஓர் அதிரடி அறிவிப்பையும் செய்தார்கள்.
நம்முடைய நாட்டில் இப்பொழுது பிரதிநிதித்துவக் குடியாட்சிதான் இருக்கிறது. அதனை மாற்றிவிட்டு, எல்லா மக்களுக்கும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவராட்சியைக் கொண்டுவர வேண்டும். அமெரிக்காவில் அப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறதல்லவா என்று பகிரங்க அறிவிப்பைக் கொடுத்தார்கள். இது பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அம்மையார் ஓர் அவசரத்தில் அப்படி அறிவித்துவிட்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் என்னும் கட்டடத்தில் குறுக்குச் சுவர்களை இடித்துக் கட்டலாமே தவிர, அதன் கடைக்காலை ("பவுண்டேஷன்') யாரும் அசைத்துப் பெயர்க்க முடியாது. நல்லூழின் காரணமாக, இந்திய அரசமைப்பு வல்லுநர்கள், அம்மையாரின் விருப்பத்தை வேரும், வேரடி மண்ணுமில்லாமல் செய்துவிட்டார்கள்.
நமது அரசமைப்புச் சட்டம் திருத்தங்கள் செய்வதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்தைப் பிரிப்பதற்கும், மாநிலத்தில் மேலவையைக் கொண்டுவருவதற்கும் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருக்கிறது. சட்டத்தில் 368-ஆவது ஷரத்து, அடிப்படை உரிமைகள் திருத்தப்படலாம், ஆனால், அடிப்படை அமைப்பு மாறக் கூடாது என்று சொல்லுகிறது.
மேலும், மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களில் 3:4 பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்; அன்றைய கூட்டத்திற்கு வந்திருக்கும் உறுப்பினர்களில் 3:4 பாகம் அன்று. அத்துடன், மாநிலங்களின் பின்னேற்பும் இருக்கவேண்டும்.
அதே சமயத்தில், அடிப்படை உரிமைகளான பேச்சுச் சுதந்திரம், சமத்துவம், வழிபாட்டுமுறை, நீதிமன்றத்தை அணுகுதல் போன்ற ஆறு அம்சங்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கியிருக்கின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டம் செய்திருக்கும் திருத்தங்கள், வருத்தங்களைத் தரத்தக்கவை அல்ல; மாறாக, மனித மேம்பாட்டிற்கு வளங்களைத் தாம் சேர்த்திருக்கின்றன. 1962-இல், விதிகளில் 12-ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்துதான், கோவா, டையூ, டாமன் போன்ற பிரதேசங்களை இந்திய யூனியனில் இணைத்தோம். மற்றும் ஒன்பதாவது அட்டவணையில் 305-ஆவது ஷரத்தில், நான்காவது சட்டத் திருத்தத்தை (எண்கள்.31:31யு) கொண்டு வந்து, பல தொழில்களைத் தேசியமயமாக்க முடிந்தது.
நமது அரசமைப்புச் சட்டம் அள்ளித் தெளித்த அலங்கோலம் அன்று; ஆயிரங்காலத்துப் பயிராகும். 21.02.1948 அன்று சட்ட வரைவியலை சாசன சபைக்கு முன்னர், முழுமையாக அரங்கேற்றம் செய்தார், அம்பேத்கர். வல்லுநர்களும், நிபுணர்களும் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்தார்.
சாசன சபையோர், வரைந்து கொடுத்த வரைபடத்தின் வழிதான் (1000 பிரிண்ட்) கட்டடத்தைக் கட்டிமுடித்தார் அந்த பாபா சாகேப். வரைந்து கொடுத்துவிட்டு, இந்த நாட்டு வாக்காளர்களும் கருத்துச் சொல்ல எட்டுமாத காலம் அவகாசம் கொடுத்தார். அப்படிச் செய்ததில் 2,475 பேர்கள் திருத்தங்களைச் சொல்லியிருந்தனர். அவற்றுள் ஏற்க வேண்டியவற்றை ஏற்று முழு வடிவம் தந்தார்.
நம்முடைய முன்னோர்கள் வலுவான வீடு கட்டுவதற்கு கடைக்கால் போட்டுவிட்டு, ஓராண்டு காத்திருப்பர். அதனால், கடைக்கால் நிலத்தோடு ஒன்றி கெட்டியாகப் பிடித்து நிற்கும். பிறகுதான் வீடு கட்டுவார்கள். அதுபோல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எட்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஒருவருக்குப் பல கோட்டுகள் இருந்தாலும் கல்யாண கோட்டுக்குத் தனி மரியாதை உண்டு. காரணம், அது வாழ்நாள் பரியந்தம் பாவிக்கப்பட வேண்டியது. எனவே, அதைத் தைக்கும் தையல்காரர், பல மடிப்புகளைப் பின்புறத்தில் வைத்துத் தைப்பார். கோட்டுக்குச் சொந்தக்காரரின் பருவத்திற்கு ஏற்றவாறு உருவம் பெருக்கின்றபொழுது, மடிப்புகளை ஒவ்வொன்றாகப் பிரித்துவிட்டுக் கொண்டே போவார்.
அதுபோன்றே பாபாசாகேப் அம்பேத்கரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல மடிப்புகளை வைத்துத் தைத்திருக்கிறார். நம்முடைய தேவைக்கேற்ப, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அம்மடிப்புகளை அவிழ்த்து திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
"அரசியல் சட்டத்தைத் திருத்தக்கூடாது என்று எண்ணுவது, இந்த பூமி இறந்தவர்களுக்குச் சொந்தம், உயிரோடு இருப்பவர்களுக்கு அல்ல என்று சொல்வது போலாகிவிடும்.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...