/

மாநில அரசுகளே பொறுப்பு

மத்திய அரசில் ஓர் அமைச்சகம் இருக்கிறது. அந்த அமைச்சகத்தை உருவாக்கியது மன்மோகன் சிங் தலைமையில் இயங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:31 am

க. பழனித்துரை

மத்திய அரசில் ஓர் அமைச்சகம் இருக்கிறது. அந்த அமைச்சகத்தை உருவாக்கியது மன்மோகன் சிங் தலைமையில் இயங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அந்த அமைச்சகம் உருவானபோது அதற்கு அந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.20 கோடிதான்.
 பொதுவாக, ஓர் அமைச்சகத்துக்கு மதிப்பு என்பது அந்த அமைச்சகத்துக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீட்டை வைத்துதான் என்பதை நாம் இந்திய ஆட்சியில் பார்த்து வருகிறோம்.
 அதுவும் கூட்டணி அரசு என்றால், கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு அமைச்சகங்கள் கேட்கும்போது எந்த அமைச்சகத்தில் அதிக நிதி இருக்கிறதோ அந்த அமைச்சகத்தைத்தான் கேட்பார்கள். அதையும் இந்திய அரசியலில் நாம் பார்த்து இருக்கின்றோம். இந்தச் சூழலில் இந்தப் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதுதான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம். அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடியை வைத்துக் கொண்டு மிகப் பெரிய இயக்கம் போல் செயல்பட்டது அந்த அமைச்சகம் என்பது நாடறிந்த உண்மை.
 ஆனால், அந்த அமைச்சகத்தை ரூ.20 கோடியிலிருந்து ஏறத்தாழ ரூ. 7,000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு பெற்று பின்தங்கிய பகுதி முன்னேற்ற நிதித் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி நாடு முழுவதும் இருந்த 272 பின்தங்கிய மாவட்டங்களில் பஞ்சாயத்துகள் மூலம் மேம்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்த அந்த நிதியைப் பயன்படுத்தியது.
 ஆனால், இன்று அதே அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்பது வெறும் ரூ.94.25 கோடி மட்டுமே. இதைக் கேள்விப்படும்போது நமக்கு ஒரு கேள்வி எழுகின்றது. எதற்காக மத்திய அரசில் பஞ்சாயத்து ராஜ் என்ற ஓர் அமைச்சகம்? இந்த நிதியை வைத்துக் கொண்டு பெயரளவுக்குத்தானே செயல்பட முடியும். இந்த ரூ.94.25 கோடியில் நிர்வாகச் செலவு என்பது ஏறத்தாழ ரூ.25 கோடி.
 இந்தத் தொகை போக மீதி உள்ள தொகையை வைத்துக் கொண்டு பஞ்சாயத்துகளை வலுப்படுத்த எப்படிச் செயல்பட முடியும் இந்த அமைச்சகம் என்று எண்ணத் தோன்றுகிறது.
 இந்த அமைச்சகத்தில் இருந்த நிதி காணாமல் போய்விட்டதே, அந்த நிதி எங்கே சென்றது என்று இதனைத் தேடினேன். அப்போது எனக்குக் கிடைத்த பதில் பதினான்காவது நிதிக் குழுவின் அறிக்கைதான். அந்த நிதிக் குழுவின் அறிக்கையில் என்ன அப்படிச் சிறப்பு என்று விரிவாகப் பார்க்கத் துவங்கினேன்.
 அதில் உள்ளாட்சிகளுக்காக செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளும், ஒதுக்கப்பட்ட நிதியின் அளவையும் பார்த்தவுடன் மிகப் பெரிய திகைப்பு ஏற்பட்டது.
 அதாவது, பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அதாவது, சராசரியாக நம் கிராமப் பஞ்சாயத்து ஒவ்வொன்றுக்கும் இந்த நடப்பு ஐந்தாண்டு காலத்தில் ரூ.75 லட்சம் தர உள்ளனர். இந்தத் தொகையில் ஒரு பைசா கூட மாநில அரசால் எடுக்க முடியாது. இந்த ரூ.75 லட்சத்தையும் அடிப்படை வசதிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
 அதேநேரத்தில், இந்தச் செலவுகளை சமூகத் தணிக்கை செய்தாக வேண்டும். இந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோக, பஞ்சாயத்துகள் தங்கள் நிதி வருவாயைப் பெருக்க முயற்சி மேற்கொண்டால், அதற்கும் ஊக்கத் தொகை வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
 இந்த ரூ.75 லட்சமும் கிராமப் பஞ்சாயத்தில் எப்படி செலவிட வேண்டும் என்றால், ஒட்டுமொத்த கிராமப் பஞ்சாயத்தின் அடிப்படை வசதிகளுக்கான மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை மக்கள் பங்கேற்போடு தயாரித்து கிராம சபையில் ஒப்புதல் பெற்று நடத்திட வேண்டும். குறிப்பாக, தமிழகம் போன்ற சில மாநிலங்களில் கிராமப் பஞ்சாயத்துகளில் அடிப்படை வசதிகள் என்பது அனைத்தும் ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.
 ஏற்கெனவே கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மிகப் பெரிய அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், இரண்டு தாய்த் திட்டம். இந்த இரண்டு திட்டங்களின் மூலம் ஏறத்தாழ அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கள ஆய்வு செய்ததன் மூலம், பல கிராமங்களில் உருவாக்கப்பட்ட பல வசதிகளை மக்கள் பயன்படுத்தவே இல்லை.
 அதேபோல, ஒட்டுமொத்த நிதி வருவாயில் 32 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்து வருவது இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த நிதி இப்போது 42 சதவீதமாக மாநிலங்களுக்கு கிடைக்க உள்ளது.
 எனவேதான், மத்திய அரசு தன் திட்ட ஒதுக்கீடுகளுக்கு நிதியைக் குறைத்துக் கொண்டுள்ளது. இனிமேல், ஏழைகளுக்கான மிகப் பெரிய திட்டங்களை மத்திய அரசு உருவாக்காது. அந்தப் பணிகளை மாநிலங்களுக்குத் தந்துவிட்டது. மாநில அரசுகள் அந்தப் பணிகளைச் செய்தாக வேண்டும்.
 மத்திய அரசு கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்கும். ஆகையால்தான், திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு கொள்கை முடிவுகள் மட்டுமே எடுப்பதற்கு ஏதுவாக "நீதி ஆயோக்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தப் புதிய அமைப்புக்கு, மத்தியத் திட்டக் குழுவுக்கு இருந்த அதிகாரங்கள் இல்லை. இந்தச் சூழலில், மாநில அரசுகளின் செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
 மத்தியத் தொகுப்பிலிருந்து மாநிலத்துக்குக் கிடைக்கும் நிதி 10 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், நல்ல பல புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தலாம். அதேபோல, மாநிலங்களுக்கு அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி மாநிலங்களுக்கிடையே போட்டியை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசு.
 அதேநேரத்தில், சமூகப் பாதுகாப்பு என்பதை இதுவரை அரசு தனது பொறுப்பாக வைத்திருந்தது. ஆனால், இப்போது புதிய கொள்கையைக் கொண்டுவந்து விட்டது. அதன்படி வறுமைக் குறைப்பு, வறுமையிலிருந்து விடுபடுதல் என்பது தனி மனிதனின் பொறுப்பு. அதற்கு உதவி செய்வது அரசின் கடமை.
 அதற்கான வங்கிக் கணக்கைத் தொடங்க வைத்து மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்குக்குத் தந்து தனி மனிதனை முடிவெடுக்கப் பொறுப்பாக்குதல் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டது. அத்துடன், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒரு சுகாதாரத் திட்டத்துக்குப் பதில் ஒரு பாலிசியை தந்து விடுதல்.
 இனிமேல் அரசு நடைமுறைப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து தங்களைத் தாங்களே ஏழைகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அரசு இனிமேல் பழைய பாதுகாப்புத் திட்டங்களைத் தொடரப் போவது இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
 அதேபோல, பொது விநியோக முறையில் வரும் மாற்றம் என்பது, ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணத்தை அளித்து விடுவது. இதன் விளைவு பொது விநியோக முறை என்பது மறைந்து போய்விடும்.
 இவையெல்லாம் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். உன் ஏழ்மையை என்னால் விரட்ட முடியாது. உனக்கு அரசு உதவி செய்யலாம். அரசு அதை மட்டும்தான் செய்யும்.
 ஏனென்றால், ஏழைகளுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் ஏழைகள் பயன் அடைந்ததைவிட, மற்றவர்கள் பயன் அடைந்ததுதான் அதிகம். அதுதான் நாம் கண்ட உண்மை. எனவே, ஏழைகளின் தலைவிதியை அவர்களேதான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அந்தச் செய்தி.
 இது ஒரு பெரிய ஆளுகை, நிர்வாக அணுகுமுறை மாற்றம். எனவே, ஏழைகளைப் பாதுகாக்க மாநில அரசுக்கும், பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கும் அதிக நிதி வருவதால் இந்த இரண்டும் ஏழைகளைப் பாதுகாக்கத் திட்டங்கள் தயாரிக்க வேண்டும். இந்தப் பொறுப்பினை மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு அளித்துவிட்டது.
 இனிமேல், சமூக நலத் திட்டங்களை அதிக நிதி ஒதுக்கீட்டுடன் மத்திய அரசு நடைமுறைப்படுத்தப் போவது இல்லை. அதற்கு மாறாக, மாநில அரசுக்கு அதிக நிதியினை ஒதுக்கி, அந்த நிதியினை மாநில அரசின் தேவைக்கேற்ப செலவழிக்கும் தன்னாட்சியை வழங்கப் போகிறது.
 மாநில அரசுகள் ஊதாரித்தனமாகச் செலவழித்தால் அவதிப்பட போவது மக்கள்தான். இதுவரை அந்தப் பொறுப்பை மத்திய அரசு எடுத்துச் செயல்படுத்தி வந்தது.
 இதுவரை மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டிய மாநிலங்கள், மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்புடன் நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தின. பல மாநில அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மட்டும் மனதில் வைத்துத் தேவையான திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தின.
 இதன் விளைவு அந்த மாநிலங்கள் அனைத்தும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. மத்திய அரசின் இந்தப் புதிய அணுகுமுறையால் மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு மாநில அரசுகளே எதிர்காலத்தில் பொறுப்பேற்க நேரிடும். எனவே, மாநில அரசின் பொறுப்பு அதிகரித்துள்ளது.
 மாநில அரசுகள் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தி, புதிய சூழலைப் புரிந்துகொண்டு, ஏழைகளுக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தினாலன்றி சமூக மேம்பாடு என்பது கானல் நீராகி விடும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
 இந்தப் புதிய சூழலுக்கு எத்தனை மாநிலங்கள் தயாராகி உள்ளன என்பதுதான் இன்று நம்மிடம் எழும் கேள்வி.
மத்திய அரசின் இந்தப் புதிய அணுகுமுறையால் மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு மாநில அரசுகளே  எதிர்காலத்தில் பொறுப்பேற்க நேரிடும். எனவே, மாநில அரசின் பொறுப்பு அதிகரித்துள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.