/

இயற்கையைப் பேணுதலே இறை வழிபாடு

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தருளும் பரம்பொருளைத் தங்கு தடையின்றி வழிபடத் தமிழர்கள் தத்தமக்கு ஏற்ற வண்ணம் ஆலயங்கள் அமைத்துச் சாலவும் தொழுதனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:21 am

கிருங்கை சேதுபதி

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தருளும் பரம்பொருளைத் தங்கு தடையின்றி வழிபடத் தமிழர்கள் தத்தமக்கு ஏற்ற வண்ணம் ஆலயங்கள் அமைத்துச் சாலவும் தொழுதனர்.
 புறத் தூய்மையை நீராடியும், அகத் தூய்மையைத் தமிழ் பாடியும் தக்கவைத்துக் கொண்ட தமிழர்கள், பூவும் புனலும் சொரிந்து வழிபட நந்தவனங்கள் அமைத்தனர். குளங்கள் கல்லினர். பாலும் பழமும் அன்னமும் படைத்து வழிபட, ஆவினம் பேணும் பசு மடம் நிறுவியதோடு, நெல்லும் கனிகளும் தருவிக்க இறையிலி நிலங்களையும் ஏராளமாகத் திருக்கோயில்களுக்கு என்றே ஆக்கிப் பேணினர்.
 பசிப்பிணி போக்கவும், உடற்பிணி நீக்கவும் செய்கிற முயற்சியில் பிறவிப்பிணி ஒழியத் தமிழர்கள் கண்ட பெருநெறி இறைநெறி.
 இல்லுறை தெய்வம், உள்ளூர்த் தெய்வம், தத்தம் குலங்களுக்கு என்றொரு (குல) தெய்வம், இவற்றோடு விருப்புறு தெய்வம் (இஷ்ட தெய்வம்) என்றெல்லாம், ஒன்றாய் இலங்கும் பரம்பொருளைத் தத்தம் மனதுக்கேற்ற வண்ணம் கொண்டு வழிபடுதற்குத் தமிழில் இடமுண்டு.
 பண்டைத் தமிழ் இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப் பெருமான் எழுந்தருளும் இடங்களை,
 ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்,
 ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்,
 வேலன் தைஇய வெறிஅயர் களனும்,
 காடும் காவும், கவின்பெறு துருத்தியும்,
 யாறும் குளனும், வேறுபல் வைப்பும்,
 சதுக்கமும் சந்தியும், புதுப்பூங் கடம்பும்,
 மன்றமும் பொதியிலும், கந்துடை
 நிலையினும்
 (திருமுருகாற்றுப்படை- 220-226)
 என்று வரிசைப்படுத்திக் காட்டுகிறது.
 அதாவது, ஊர்கள்தோறும், விரும்பிய வண்ணம் விழாவெடுக்கும் இடங்களிலும், ஆர்வலர்களாகிய அன்பர்களின் உள்ளங்களிலும், வெறியயர் களங்களிலும் எழுந்தருள்பாலிக்கும் வேலன், நிரந்தரமாய் உறைந்திருக்கும் இடங்களாக இயற்கைத் தலங்களையே பெரிதும் எடுத்துக்காட்டுகிறது.
 குறிப்பாக, காடும், (பூங்)காவும், அழகிய ஆற்றின் இடையில் அமைந்துள்ள திடலும், ஆறும், குளமும் அழகழகாய் ஊர்களில் சீர்பெற அமைத்த வைப்பிடங்களும், சதுக்கம், சந்தி ஆகிய இடங்களும் புதிது புதிதாகப் பூத்துச் சொரியும் கடம்ப மரமும் கந்தன் விரும்பித் தங்கும் சிறப்புக்குரிய இடங்கள் என்பது இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
 "கடம்பமர் நெடுவேள்' என்று பெரும்பாணாற்றுப்படையும் (75), "செல்வக்கடம்பமர்ந்தான்' என்று ஐந்திணை ஐம்பதும் (பா-1), "காடுகெழுநெடுவேள்' என்று அகநானூறும் (அகம்-382) முருகனைப் பெருமையுறப் பேசுகின்றன.
 மேலும், தெய்வம் சேர்ந்த பராரை, வேம்பு (அகம்-309), கள்ளிநீழற்கடவுள் (புறம்-260), மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் (குறுந்தொகை-87), தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை (நற்றிணை-303), எரிமருள் வேங்கைக் கடவுள் (நற். 216), கடவுள் ஆலத்து உகுபலி அருந்திய தொகுவிரற்காக்கை (நற்.343) என்றெல்லாம் சங்கப் பாடல்கள் மரங்களை முன்னிறுத்தியே சுட்டுகின்றன.
 பின்னர் எழுந்த மணிமேகலையிலும், இந்த உண்மை இன்னும் சிறப்பாக விளக்கப்படுகிறது.
 பிழையற்ற மரத்திலும், மண்ணிலும், கல்லிலும் நிலைபெறுத்தி வைத்த இறைத்திருவுருவங்கள் பேசுமோ என்று மணிமேகலையை நோக்கி வினவுகிற கந்திற்பாவை,
 ..............மூதூர் யாங்கணும்
 கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்
 முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும்
 பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்
 காப்புஉடை மாநகர்க் காவலும் கண்ணி
 யாப்புஉடைத் தாக அறிந்தோர் வலித்து
 மண்ணினும் கல்லினும் மரத்தினும்
 சுவரினும்
 கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
 ஆங்குஅத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
 ஊன்கணி னார்கட்கு உற்றதை உரைக்கும் (மணிமேகலை-21:119-128)
 என்று விரித்துக்காட்டுகிறது. அந்தப் பெரும் பட்டியலிலும், மூதூர்த் துறைகள், முதுமர இடங்கள், முதுநீர்த் துறைகள் சிறப்பிடம் பெறுகின்றன.
 "கண்டறியாதன கண்டேன்' என்ற அப்பர் பெருமான் அருளிய தேவாரத்து அருட்காட்சி இயற்கை வடிவாய இறைத் திருத்தோற்றம்தானே.
 வேங்கடவனின் திருக்கோயில் வாசற்படியாய்க் கிடந்து அப்பெருமானின் பவளவாய் காண, உருகிப் பாடும் குலசேகராழ்வார், அத்திருப்பதியின் நீர்நிலையில் மீனாகவும், செண்பக மரமாகவும், இயற்கைப் பொருளின் ஏதேனும் ஆகவும் எண்ணிய பெருந்திறனை என்னென்று சொல்வது!
 தலங்கள்தோறும் மூர்த்தியாகிய தெய்வத்தை நீரையும், மரத்தையும் முன்னிறுத்தியே நம் முன்னோர் தொழுது உய்ந்தனர். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்கிற நிலைகளிலேயே இன்றளவும் தல புராணங்களைத் தமிழ் தாங்கி நிற்கக் காணலாம்.
 பாடல்பெற்ற திருத்தலங்களான கடம்பவனம், திருக்கடம்பந்துறை, புன்னைவனம், ஆலம்பொழில், திருக்குற்றாலம், வடதிருமுல்லைவாயில், திருஇரும்பூளை முதலியன மரங்கள், செடி - கொடிகளின் அடிப்படையில் சிறப்புப் பெற்றவை. அவ்வாறே கடம்பவனநாதர், புன்னைவனநாதர், மருதீசர், மருதவாணர், குற்றாலநாதர், கதலிவனநாதர் என மூர்த்திகளுக்கும் பெயர்கள் அமையக் காணலாம்.
 கோயிலே நகராகக் கொண்ட மதுரைத் திருநகரம் ஒரு காலத்தில் கடம்பவனம். அதனுள்ளே நின்றாடும் கூத்தன் கடம்ப மரத்தையே தல விருட்சமாகக் கொண்டு விளங்குகிறான். அம்மூர்த்தமே கடம்ப மரத்தாலானது என்பர்.
 அவ்வண்ணமே, திருவாவடுதுறையில் கோமுக்தீசுவரர் - படர் அரசுலிங்கம், திருக்களம்பூர்க் கதலிவனநாதர் - செங்கதலி (செவ்வாழை) மரலிங்கம். திருவிற்குடி வீரட்டானேசுவரர்- துளசிலிங்கம், திருக்களர் பாதாளேசுவரர்- நெல்லிலிங்கம் எனத் திருமேனி கொண்டு எழுந்தருளி இருக்கின்ற மூர்த்தங்கள் தமிழகத்தில் அனேகம்.
 பொதுவாகச் சிவனுக்கு வில்வமும், மாலுக்குத் திருத்துழாய் ஆகிய துளசியும், அம்மனுக்கு வேம்பும் என இலைகளைத் தூவி வழிபடுவது மரபு. இதனையே "யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை' என்று திருமந்திரம் சொல்கிறது.
 கொடுங்கோடைக் காலமாகிய பங்குனியில் பற்பல அம்மன் கோயில்களில் இன்றளவும் பூச்சொரிதல் நிகழ்வு திருவிழாக்களாக நடத்தப்படுகின்றன.
 பெருந் தெய்வம், சிறு தெய்வம் என்று வழிபடு மூர்த்தங்களை வகைப்படுத்திக் கொண்ட தமிழர்களின் வழிபாட்டு மரபில், சிறு தெய்வங்களாகிய கிராம தெய்வங்கள் மிகுதியும் இயற்கைசார் இடங்களையே தமக்குரிய இல்லங்களாகத் தேர்ந்து கொள்கின்றன.
 திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் போன்று கோபுரமே வேண்டாது வெயிலுகந்த அம்மன்களாகப் பெண் தெய்வங்கள் வீற்றிருக்கின்ற வழிபாட்டுத் தலங்கள் ஏராளம்.
 ஆறு, ஏரி, குளங்கள், அடர்காடு போன்ற இடங்களில் இருந்து ஊர் காக்கும் ஐயனார்கள், காவல் காக்கும் கருப்பர்கள், பிடாரி, காளி, செல்லியம்மன், செங்கழுநீர் அம்மன் முதலாய பெண் தெய்வங்கள் எல்லாக் கிராமங்களிலும் இருந்தருளுகின்றன. அவற்றுக்கான கோயிற் காடுகளும் பன்னெடுங்காலம் பராமரிக்கப் பெற்று வந்திருக்கின்றன.
 இன்றளவும் புதுக்கோட்டை- காரைக்குடி நெடுஞ்சாலையில் உள்ள இளங்கொடிப்பட்டி என்னும் கிராமத்தில் பன்னூறாண்டுச் சுடுமண் புரவிச் சிற்பங்களோடு பல ஏக்கர் கணக்கில் காடுகளும் அவ்வூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 இளங்கொடி ஐயனாருக்குப் பெரிய அளவில் விமானம் அமைத்துக் கோயில் எழுப்ப விரும்பிய அம்மக்களை, ஐயனார் தடுத்துவிட்டாராம். இளங்கொடி (இப்போது பெருவடம் எனத் தெரிகிறது) பின்னிய பெருமரத்தின் நிழலில் திறந்தவெளியில் இருந்தருள் புரிகிற ஐயனாரின் திருமேனியில் எப்போதும் இலைகள் உதிர்வது அழகு. அருகில் உள்ள கண்மாய் நீர்தான் அதற்கு அபிடேகத் தீர்த்தம்.
 இருளைத் துரத்தி எரிக்கும் வெயில் சற்றும் நுழைய முடியாத சோலையை, "வெயில் நுழைபு அறியா குயில்நுழை பொதும்பர்' (மணிமேகலை- 4:1-5) என்று மணிமேகலை சுட்டிக் காட்டும். அத்தகைய பொதும்பருக்கு எடுத்துக்காட்டாக இளங்குடிப்பட்டியில் இன்னும் இருக்கிறது உருமர் சிட்டை என்னும் இறையுறை பெருங்காடு.
 இதுபோல், தமிழகத்தின் எல்லாக் கிராமங்களிலும் வழிபடுத் தலங்கள் இருந்தன. பெரு நகரத்துப் பேராலயங்களும் திகழ்ந்தன. ஆனால், இன்றைக்கு அவற்றின் தன்மை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே துயரமாக இருக்கிறது.
 யானையும், சிலந்தியும், எறும்பும், வண்டுகளும் மற்று இந்தப் பூதலத்து எல்லா இயற்கை உயிரினங்களும் வந்து வழிபட்டதெனத் தல புராணங்கள் தருகிற செய்திகளின் உண்மை என்ன? இயற்கையோடு இயைந்து இறைவனை எல்லா உயிர்களும் ஏத்தின என்பதைத் தானே!
 ஆனால், இன்றைக்கு மனிதர்களே பெரிதும் நுழையாதவண்ணம் பல ஆலயங்கள் ஆகிவிட்டன. பல தலங்களில் வழிபாடுகள் நின்றே போயின. புனரமைக்க வழியின்றிப் பற்பல திருக்கோயில்கள் சிதைவுற்று அழிகின்றன.
 அதிலும் மத்திய அரசின்கீழ் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படும் தொல்லியல் துறைக்கு உள்ளான கோயில்களின் நிலைப்பாடு சொல்லுந்தரமன்று. இவற்றுக்கு மத்தியில், புதிதாகப் புனரமைக்கப்பட்டும், பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டும் சிறக்கிற தலங்களின் நிலைப்பாடுகளும் வருத்தத்தையே வரவழைக்கின்றன.
 பெருகிவரும் நவீன வசதிகளை உள்ளமைத்துப் புனரமைக்கப்பட்டும், புதிதாக எழுப்பப்பட்டும் வருகிற கோயில்களில் ஆன்மிக மரபு ஒழிந்து ஆடம்பரங்களே மிகுந்து வருகின்றன.
 வனங்களை இழந்து தனிமையாய் நின்று தவம் புரியும் தல விருட்சங்களின் வேர்களில் கூட ஈரம் இறங்காதபடிக்கு கற்பதிப்புகள். நந்தவனங்களை, பசு மடங்களைக் கண்டுகொள்ள முடியாத படிக்கு அருச்சனைப் பொருள்களின் கடைப்பரப்புகள். எந்தத் திருக்குளங்களிலும் இறங்கி நீராட, பெரும்பாலும் பக்தர்களுக்கு நேரமில்லை. அள்ளித் தெளித்துக் கொள்ளவேனும் ஆரோக்கியமான நீர் கொடுக்க முடியாமல் தவிக்கும் தீர்த்த நிலைகள்.
 எந்த நிலங்களை, எழிலுறைக் காடுகளை, நீர்நிறை ஏரிகளை, கவினுறு கண்மாய்களை, இயற்கை ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்று ஆயுதமேந்தி கம்பீரமாக கருப்பரும், ஐயனாரும், காளியும், பிடாரியும், பூதங்களும் எழுந்தருளிநிற்கின்றனவோ அந்த இடங்களில் இப்போது ஆடம்பரமான அமைப்புகளில் ஆலய விரிவாக்கம்.
 உள்ளூர்க் கற்களை அடியொடு கில்லி அகற்றிவிட்டு, ராஜஸ்தானின் சலவைக்கற்கள் இட்டுப் பிரகார விஸ்தரிப்பு. அபிஷேகத்துக்கென்று நீர்தர இருந்த ஏரிகள், குளங்கள் சுருங்கிக் குட்டைகளாகி வறண்டுபோனபின், போட்ட அடிகுழாய்களும் துருப்பிடித்துக் கிடக்க, இப்போது ஆழ்துளைக் குழாய்ப் பதித்த நீர்நிலைகள். அதுவும் எத்தனை நாளுக்கு வரும் என்று உணராமல், பக்தர்கள் செய்யும் வீணடிப்பு.
 இது தகுமோ, இது முறையோ, இது தருமந்தானோ என்று எந்தத் தெய்வத்திடம் சென்று முறையிடுவது?
 புறத்தூய்மை பேணும் வசதியும், அகத்தூய்மை நல்கும் வாய்மையும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்துவருகிறபோது, தமிழர்தம் வழிபாட்டு மரபார்ந்த கோயில்கள் முன்னைப்போலவே, தன்னியல்பு கொண்டு மீண்டு வருவதற்கு எந்தக் கோயிலில் சென்று வேண்டுதல் செய்வதென்று தெரியாமல் நொந்து தவிக்கிறது சிந்தை.
 இயற்கையைப் பேணி நடத்தும் வழிபாடே உண்மையில் இறை வழிபாடு. அதனை மறந்தும் மறுத்தும் நடத்துகிற எந்த விழாவாயினும், வழிபாடாயினும் அதனை ஒருபோதும் இறைவன் விரும்பி ஏற்பதும் இல்லை. எனவே, இயற்கையைப் பேணுவோம்.
 
 கட்டுரையாளர்:
 துணைப் பேராசிரியர்,
 பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,
 புதுச்சேரி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.