விவாதம் தொடங்கட்டும்!
பதினாறாவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 24ஆம் தேதி முடிவுற்றது. நாட்டில் கடைசி கட்ட வாக்குப் பதிவு மே 12ஆம் தேதி முடிவுறும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16 வரை நீண்ட இடைவெளி உள்ளது.


பதினாறாவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 24ஆம் தேதி முடிவுற்றது. நாட்டில் கடைசி கட்ட வாக்குப் பதிவு மே 12ஆம் தேதி முடிவுறும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16 வரை நீண்ட இடைவெளி உள்ளது.
முடிவு எதுவாக இருந்தாலும் மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப் பதிவு பற்றி, எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டிய, கடைப்பிடிக்கக் கூடாத அணுகுமுறை பற்றி ஒரு யதார்த்தமான விவாதம் நடைபெறுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கப் பயன்படும்.
அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் காலத்திலும், தேர்தல் முடிவு வெளியான பிறகும் நடைபெறும் விவாதங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். அது தவிர்க்க முடியாதததும் கூட.
ஆனால், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, நடந்து முடிந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்றிய அணுகுமுறை பற்றி (அரசியல் அணுகுமுறையை தவிர்த்து) விவாதிப்பது பயனளிக்கும்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி வரவேற்க வேண்டிய ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 2,000க்கும் கூடுதலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த தேர்தலிலும் கிட்டத்தட்ட 3,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இது முதல் முறையல்ல. 2011க்கு முன்பு திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலா' என்பது நாடு முழுவதும் விவாதப் பொருளானது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் வாக்காளர்கள் மத்தியில் நடந்த பணப் பட்டுவாடாவை மார்க்சிஸ்ட் கட்சியினர் தடுக்க முயற்சித்ததால் பலர் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
எனவே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தடுக்கப்பட வேண்டும், தடை செய்யப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் கூறியுள்ளது சரியான கருத்து.
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது, பணம் கொடுத்து செய்திகளைப் போட வைப்பது உள்ளிட்ட பல குற்றங்களை தடுக்க விகிதாச்சார பிரதிநிதித்துவம், வேட்பாளர் செலவுகளை தேர்தல் கமிஷனே ஏற்பது போன்றவற்றை உள்ளடக்கிய தேர்தல் சீர்திருத்தம் அமலுக்கு வர வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
தேர்தலின்போது தடுக்கப்பட வேண்டியது பணப் பட்டுவாடா மட்டுமல்ல. தடுக்க வேண்டிய, தடை செய்ய வேண்டிய, தண்டிக்க வேண்டிய இன்னும் பல தவறான அணுமுறைகளும் உள்ளன. அவைகளைப் பற்றியும் விவாதிப்பது எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை செழுமைப்படுத்திட உதவிடும்.
உதாரணமாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 123 மற்றும் 125, தேர்தலில் ஆதாயம் பெற, வாக்குகளைப் பெற, சாதி, மதம், இனம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என கூறுகின்றன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யக் கூடாது எனக் கூறும் டாக்டர் ராமதாஸ், வாக்குகளைப் பெறுவதற்காக சாதி உணர்வை பயன்படுத்தவில்லை என்று கூற முடியுமா?
ராமருக்கு கோயில் கட்ட வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் கோயில் கட்டுவோம் என்று பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறுவது மத உணர்வை தேர்தலுக்காக பயன்படுத்துவது ஆகாதா?
மேலும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்று கூறுவதற்கு பதிலாக, இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அடைக்கலம் கொடுப்போம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கூறுவது, மத உணர்வை பயன்படுத்துவது ஆகாதா?
சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவம்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக சாதி, மத உணர்வை பயன்படுத்துவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகிவிடும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை எல்லா வகையிலும் பாதுகாத்திட, வலுப்படுத்திட ஆரோக்கியமான விவாதம் தொடர வேண்டும். அந்த அடிப்படையில் திட்டவட்டமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்!
கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...