எதிர்மறை அறிவியல் எதற்கு?
நாடெங்கும் பிரசங்கப் பிரளயம்தான். முற்போக்கு, பிற்போக்குக் கட்சிகள், அண்ணன் கட்சி, தம்பி கட்சி, தாத்தா கட்சி என்று பிளவுபட்டப் பல்வேறு கட்சிகள்.


நாடெங்கும் பிரசங்கப் பிரளயம்தான். முற்போக்கு, பிற்போக்குக் கட்சிகள், அண்ணன் கட்சி, தம்பி கட்சி, தாத்தா கட்சி என்று பிளவுபட்டப் பல்வேறு கட்சிகள். இவர்கள் திட்டங்களை அறிவித்தது என்னவோ உண்மை. அதற்காக கஜானாவில் எடுத்த 2 பணங்களில் இன்னொரு பணம் எங்கே என்று கேட்டால், "அந்த இன்னொரு பணம்தான் அண்ணே இது' என்று காட்டுகிறார்கள்.
இந்தப் பணக் கதை எதற்கு என்று தானே கேட்கிறீர்கள்? 2014ஆம் ஆண்டு இளைஞர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஊட்டும் ஆண்டு. தேசிய அறிவியல் தின முத்திரையும் அதுவே.
கடந்த இரண்டு மாதங்களில் தேவகோட்டை, புதுக்கோட்டை, தொழுதூர், கோவை, திருச்சி, தஞ்சை, கோவில்பட்டி ஆகிய 15 இடங்களில் உள்ள நடுநிலைப் பள்ளி, கலை-அறிவியல் கல்லூரி, பல்தொழில்-பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு வரையில் அறிவியல் பயணங்கள்.
அங்கு எல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய அறிவியல்-பொறியியல் கண்காட்சிகள் என்னை வியக்க வைத்தன. "பசுமை வேதிமங்களும், புதுப்பொருள்களும்' தொடங்கி, தண்ணீரின் மிதவைத் திறன் ஊட்டும் ஆற்றலால் மின்சாரம் உற்பத்தி செய்வது வரை எத்தனையோ இளங்குருத்துப் பரிசோதனைகள். முளைவிடும் அந்த இளம் விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதிலும் கலை, அறிவியல், தமிழ் மொழிப் பாட மாணவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த அறிவியல் எழுச்சி நம்மை அதிசயிக்க வைக்கிறது. "செவ்விலக்கியங்களில் வானவியல் சிந்தனைகள்' முதல் "சேர நாடும் சங்க இலக்கியமும்' என்பது வரை துறைதோறும் பதியும் அறிவியல் பார்வை நிச்சயம் வரவேற்புக்கு உரியது.
ஆரம்பப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். நடுநிலைப் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். பட்டதாரிகளுக்கு வழி காட்டவேண்டும். பணியில் நுழைந்தவர்களிடம் ஒரு சொல். ஆங்கிலத்தில் சொன்னால் பதியும்: "ஆப்டிட்யூட்' (அறிவுத்திறன்) அல்ல, "ஆட்டிட்யூட்' (செயல் திறன், நடத்தை) மட்டுமே "ஆல்டிட்யூட்' ஆகிய புகழ் உயரங்களைத் தீர்மானிக்கும்.
இந்த ஆண்டு "பன்னாட்டு படிகவியல் ஆண்டு' ஆகவும் அறிவிப்பாகி இருக்கிறது. வில்லியம் ராண்ட்ஜன் என்கிற ஜெர்மன் இயற்பியலார் எக்ஸ்-கதிர்வீச்சுத் தத்துவத்தைக் கண்டுபிடித்தது தெரியும். அதன் அடிப்படையில் படிகங்களின் உள்கட்டமைப்பினை அறிய வழி வகுத்த சர் வில்லியம் லாரன்ஸ் பிராக் எனும் விஞ்ஞானி, 1912ஆம் ஆண்டு "எக்ஸ்-கதிர்ப் பிரிகை' என்ற உத்தியை அறிமுகப்படுத்தினார். 1915ஆம் ஆண்டு தமது புதல்வர் வில்லியம் பிராக் என்பவருடன் இணைந்து நோபல் பரிசும் பெற்றார்.
இன்று சாதாரண கல்லுப்பு முதல் மரபணு மூலக்கூறு வரை இந்தப் படிகவியல் நுட்பம் இடம்பெறாத துறையே இல்லை.
ஹைடிரஜனால் காற்று மண்டலம் மாசுபடும் தொல்லையும் இல்லை. தூய்மையானதும் சுற்றுசூழலுக்கு நண்பனுமான ஹைடிரஜனே எதிர்காலத்தில் பாதுகாப்பான எரிபொருள். இதனை திரவ ஆக்சிஜனில் எரித்தால் தண்ணீர் வெளிப்படும். மின்சாரமும் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ விண்கலன்களில் ஹைடிரஜன்-ஆக்சிஜன் எரிமின் கலன்கள் பயன்படுத்தப்பட்டன. ஜப்பான், ஹைடிரஜன் எரிபொருளில் "ரயில் கார்' இயக்கிக் காட்டி உள்ளது. எரிமின் தொடர்வண்டியின் முன்னோடி ஊர்தி. தண்டவாளத்தில் சென்ற சீருந்து.
அதிலும், இன்றைய "நானோ-தொழில்நுட்ப' அடிப்படையில், குழல்களில் ஹைடிரஜனை நிறைத்து வைக்கலாம். கரி, அலுமினியம், எஃகு ஆகியவற்றின் மென்படல அடுக்குகளிலும் ஹைடிரஜனைச் சேமித்து வைக்க முடியும். இன்று உலோகக் கரிமச் சட்டமைப்பு என்கிற அமைப்பும் இதற்கு உதவும். இவ்விதம் "சிறைபட்ட ஹைடிரஜ'னை வேண்டியபோது வெப்பத்தால் வெளியேற்றிப் பயன்படுத்தலாம்.
ஹைடிரஜனை உலோக ஹைடிரைடு வேதிமங்களாகப் பத்திரப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்னீசியம்-நிக்கல் உலோகக் கலவையுடன் குழைத்த ஹைடிரஜன் எரிவாயுவை நில வாகனங்களிலும் கையாளலாம் என்கிறார்கள். எதிர்காலத்தில் கார் ஓட்ட ஹைடிரஜன் சிலிண்டர்கள் தேவை இல்லை. தீப்பெட்டி அளவிலான உலோக ஹைடிரைடு அட்டைப் பெட்டிகளே போதும்.
அது மட்டுமா? வாழும் தெய்வங்களை வயோதிக இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு, தெய்வ அருள்தேடி கோயில் செல்லும் இளைஞர்களை நம்பிப் பயன் இல்லை. முதியவர்களுக்கு இனி இயந்திரங்களே உறுதுணை புரியும். காலையில் வயதானவர்களிடம் "குட் மார்னிங்' சொல்லும். வேளா வேளைக்கு மாத்திரை மருந்துகள் சாப்பிட நினைவூட்டும். மூத்த குடிமக்கள் தனியே வசிக்கத் தடை இல்லை. தானியங்கிக் குளியல் தொட்டிக்குள் படுத்தால் போதும். அதுவே உடலை பிரஷ் போட்டுக் கழுவித் துடைத்துக் காய வைத்துவிடும். கைத்தாங்கலாக நடக்கவும் துணைக்கு "புற எலும்புக் கூடுகளை' வேலைக்கு அமர்த்தலாம்.
இப்படித்தான் அறிவியலார், சமுதாயம் சார்ந்தே இயங்குகின்றனர்.
ஆனாலும், வழக்கம்போல, எதிர்மறை அறிவியலை முன்வைத்து கலகக் குரல் எழுப்பும் குழப்பவாதிகளும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் அறிவியலுக்கும் ஆர்பாட்ட அரசியலுக்கும் இடைப்பட்ட இரண்டும் கெட்டான்கள். கற்றல், கள்ளத்தனம் இரண்டும் உடையவர்களால் நாட்டிற்கு ஆபத்து.
ஏழு வார முதல் அமைச்சர் ஆரவாரம் பாருங்கள். குஸ்தி பயில்வான் மாதிரி வசனம். இவர்கள் மக்களுக்குச் சேவை செய்யப் போகிறார்களா அல்லது நாடாளுமன்றத்தின் வாசலில் குழாயடிச் சண்டைக்குத் தயார் ஆகிறார்களா?
கஞ்சா கடத்தலா? இரவில் மாறுவேடத்தில் அமைச்சரே வீடு வீடாகச் சென்று தர்பார் நடத்தினாரே. வெளிநாட்டுப் பெண்ணானால் என்ன? கைது செய். காவலில் வை என்று உத்தரவு. அதே சாமான்யச் சட்ட அமைச்சர் பெயரில் ஆபாச இணைய தளங்கள் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தனவாமே.
சிப்பாய்த் தாத்தா தொடங்கி வைத்த தொப்பிப் போராட்டம். ஆரம்பத்தில் கூட்டத்திற்கு வந்த மேனாள் நீதிபதி, காவல் துறை அதிகாரி, ராணுவ அதிகாரி, மூத்த வழக்குரைஞர் என்று நீதித்துறை மேலோர் ஒவ்வொருவராகக் கழன்று கொண்டபோதும், ஞான ஸ்நானம் பண்ணி நாட்டின் நடுவில் வைத்தால் பாருங்களேன். பழக்க தோஷம், மீண்டும் வீதிக்கு வந்து கோஷம்.
ஆளும் இனத்தவரை அம்பலப்படுத்தியவர், இன்று அரைகுறையாய் அதே தோள் மீது நின்று ஆடுவானேன்? தில்லி விமான நிலையம் அருகே நட்சத்திர ஓட்டலில் முன்னாள் ஆட்சியாளர்களுடன் "மஃப்ளர்' இட்டு பேரம் பேசி முடித்தவர்கள். தகவல் தொழில்நுட்ப நகரில், "உங்களில் ஊழல் செய்யாதவர்கள் யாரேனும் இருந்தால் 19,999 ரூபாய் நிதி அருளி ஊழலை ஒழிக்க வாரீர்' என்று மான்யம் பெறும் சாமான்யர்கள், சரளமான ஆங்கிலப் பேச்சாளர்கள்.
தனியார் இலவச ஜெட் விமானத்தில் பறப்பார்கள் - பாமரர்க்கு உழைக்க. கூடவே "விளக்குமாறுகள்' (பெருக்குமாறு, வாரியல், துடைப்பக் கட்டை - யாவும் ஒரே பொருள் குறித்தவை) சுமந்து சென்று நாட்டைச் சுத்தப்படுத்தும் பரிசுத்தர்கள்.
இந்த லட்சணத்தில் குடியரசு தின ஊர்வலம் என்பது பழைய சம்பிரதாயமாம். பேட்டிகளோ பச்சை, தொப்பி மட்டும் வெள்ளை, மனதில் சிகப்பு, ஜனநாயகத்தின் முதல் குடிமகன் பேச்சையும் கேட்க மாட்டார்களாம். சுதந்திர விடுதலை இப்படி கிடைத்ததுதான் என்று வாதாடுகிறார் "யோக'த் தலைவர். அவர் முகத்தில் "மை' ஒப்பனைக்கு இப்படியா மேடையில் ஆள் ஏற்பாடு செய்வது?
மொத்தத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் விவகாரங்களில் அகப்பட்டவர்கள் தோளில் நின்றபடி எதிர்மறைப் பிரசாரம் செய்யும் முன்னாள் தில்லி "அறவேந்தர்' ஒருபுறம். "மோதி' எதிர்த்துப் பிரசாரம் செய்யும் இந்நாள் தில்லி இளவேந்தர் மறுபுறம்.
பத்து வருடங்கள் வாயே திறக்காதவர், ஒரே ஒரு பேட்டியில் மாட்டிக் கொண்டார். செய்த குற்றத்திற்கு 30 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் பரிபூர்ண சுகம் பெற்றவர்களாம். இந்த ஆண்டு பம்பர் பரிசு கிடைக்காது என்றதும், மதுரை சொக்கநாதரை நினைத்து, தனித்து விடப்பட்ட தருமி மாதிரி புலம்புகிறார்களோ? நீதிமன்ற வழக்கில் சிக்கியவர்கள் நீங்கலாக, புதிதாக இனி எவனும் வரமாட்டான் கூட்டணிக்கு. எல்லாம் தெரிந்தும் சூளுரைகள்.
குளு குளு அறைவாசிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கோடை வெயிலில் இறங்கி வருவது நல்லதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...