டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நடிப்புச் சுதேசிகளா நாம்?

தமிழகத்தில் அண்மையில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஆகா.. இவ்வளவு பேர் தமிழ் மீது பாசமும் பற்றும் வைத்திருக்கிறார்களே என மகிழ்ச்சி எழுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:55 am

ஜெயப்பாண்டி

தமிழகத்தில் அண்மையில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஆகா.. இவ்வளவு பேர் தமிழ் மீது பாசமும் பற்றும் வைத்திருக்கிறார்களே என மகிழ்ச்சி எழுகிறது.

நதிநீர் பிரச்னை முதல் வேட்டி பிரச்னை வரை ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பணிப் புறக்கணிப்பு, மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு தங்களது தமிழ் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், உண்மை நிலை என்ன?

ஓர் இனத்தின் அடையாளம் மொழி! தொல்காப்பியமும் திருக்குறளும் தமிழ் இனத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

தமிழ் மொழியை வளர்க்க நமது முன்னோர் எப்படியெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கி, அதில் தமிழ்ப் புலவர்களையும், ஆய்வாளர்களையும் இணைத்து பழந்தமிழ் இலக்கியங்கள் மறையாமல் பாதுகாத்துத் தந்துள்ளார்.

பழைய ஓலைச்சுவடிகளைத் தேடியலைந்த உ.வே.சாமிநாதய்யர், பல நாள்கள் அலைந்து திரிந்துதான் அரிய தமிழ் இலக்கியத்தைத் தேடியெடுத்துத் தொகுத்தார்.

இன்றும் பல தமிழார்வலர்கள் பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க, தமது உழைப்பையும், பொருளையும் வழங்கிவருகிறார்கள். இவர்கள் எல்லாம் மெத்தப்படித்துப் பட்டம் பெற்று அதை வைத்து சம்பாதித்து வாழ்வோர் அல்லர்.

நம் மொழிக்காக ஊருக்கு ஊர், கம்பன் கழகம் வைத்தும் திருவள்ளுவர் கழகம் வைத்துத் தமிழையும், இலக்கியத்தையும் பாதுகாக்கின்றனர்.

ராமன் கதை கேட்டு ஓடிவருவதாக நம்பப்படும் அனுமன் போலவே, எங்கெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதோ... அங்கெல்லாம் அமர்ந்து கேட்கும் தமிழரால்தான், அருகு போல பரவிய தமிழ் மொழி இன்று ஆலமரம் போல் பரவி நிற்கிறது.

தமிழாசிரியர்களாய், ஆய்வாளர்களாய், கலைஞர்களாய் கோடிக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை தமிழ் வளர்ச்சிக்கெனத் தகவமைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், பல இலக்கியக் கூட்டங்களின் இருக்கைகளை ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், அரசுப் பணியாளர், ஆன்மிக அன்பர்கள் போன்ற சொற்பக் கூட்டமே நிறைத்து வருகிறது என்பதே நிஜம்.

தமிழுக்காக ஆர்ப்பாட்டம், மறியல் என வீதியில் நின்று கூக்குரலிடுவோரில் எத்தனை பேர் தமிழ் இலக்கியம் போன்ற நிகழ்ச்சிகளில் வந்தமர்கிறார்கள்?

உலக மயமாக்கல் தமிழரின் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிட்டது. தாமறிந்த தமிழை பிறருக்குச் சொல்ல ஒரு தொகை! அதிலும் மொழியை, கலாச்சார பண்பாட்டுக் காப்பியங்களை, சங்க இலக்கியத்தை இந்த நவீன உரையாளர்கள் கிண்டலடித்தும், கேலி செய்தும், கேட்போரை சிரிக்கவைத்து தமிழையும் பிறர் பார்த்துச்சிரிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதுண்டா?

சன்மானம் கிடைக்காத கூட்டத்தில் தமிழ் சொல்ல, தற்போதைய தமிழ் பேராசிரியர்களில் பெரும்பாலானோருக்கு அவர்தம் தன்மானம் இடமளிக்காதாம்!

தமிழ் கற்றதால் கிடைத்த ஆசிரியப்பணி! சுற்றுலா இடத்துக்கெல்லாம் கருத்தரங்கம், மாநாடு என சென்று வர அரசு செலவு! தனது கற்பித்தலை சோதிக்கும் தேர்வுத்தாள்கள் திருத்தக்கூட தனித் தொகை! ஆய்வு வழிகாட்டலைக் கூட வருவாய் ஈட்டுவதாக மாற்றும் சமயோசிதம் என தமிழின் பெயரால் இந்த நவீன தமிழ்ச்சான்றோர் சம்பாதிப்பவை கணக்கிலடங்காது.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்... கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!' என பாரதி கூறியதை வைத்து பிழைப்பு நடத்துவோர், எத்தனை நாட்டு இலக்கியங்களை இம் மண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்?

சங்ககாலத் தமிழ் இலக்கியத்தை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துரைக்கக்கூட ஆளில்லையே என பல தமிழறிஞர்கள் வருத்தப்படுவது யார் காதிலாவது விழுகிறதா?

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்தில்கூட அரசியல் அரிதாரம் பூசும் அவலம் நடந்துவருகிறது. இத்தகைய அரசியலானது, குறிப்பிட்ட சிலரின் குடும்பத்தை வேண்டுமானால் வளமாக்கலாம். ஆனால், இனத்தையும் மொழியையும் முடமாக்கிவிடும் என்பதே உண்மை.

ஆகவே, கிராமத்தில் கூறுவது போல உப்புக்கு பெறாத பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மொழியின் உயிர்நாடிப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம். இல்லையேல் பாரதி கூறியதுபோல, நடிப்புச் சுதேசிகள் பட்டியலில் நாமும் சேரும் நிலை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.