போராட்டம் முடியவில்லை
தமிழ்நாட்டின் முதன்மையான இயற்கை வேளாண் அறிஞரான கோ. நம்மாழ்வார், 1938 ஏப்ரல் 6-ஆம் தேதி


தமிழ்நாட்டின் முதன்மையான இயற்கை வேளாண் அறிஞரான கோ. நம்மாழ்வார், 1938 ஏப்ரல் 6-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காட்டில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "இளங்கலை வேளாண்மை' முடித்து அரசுப் பணியில் சேர்ந்து - மூன்றாண்டுகளில் வெளியே வந்தôர்.
அதன்பிறகு மாநிலம் முழுவதும் அவர் கால்பதியாத மாவட்டமே இல்லை. போகிற இடமெங்கும் ஏராளமான அமைப்புகளைத் தொடங்கினார். "குடும்பம்', "லிசா', "மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம்', "இந்திய அங்கக வேளாண்மை சங்கம்' போன்றவை அவர் விதைத்த விதைகள்.
"தாய் மண்' (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), "உழவுக்கும் உண்டு வரலாறு', "தாய் மண்ணே வணக்கம்', "நெல்லைக் காப்போம்', "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்', "இனி விதைகளே பேராயுதம்', "நோயினைக் கொண்டாடுவோம்', "எந்நாடுடையே இயற்கையே போற்றி', "பூமித்தாயே', "மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்', "களை எடு' போன்ற நூல்களை எழுதி
யுள்ளார்.
அவர் இயற்கை வேளாண்மைக்கான போராளி மட்டுமல்ல. முழுமையான வாழ்வியல் பேரறிஞர். தமிழகத்துக்கு பெரும்பகுதி தண்ணீரை வழங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார். பாலாறு பாதுகாக்கப்பட போராட்டங்களை நடத்தினார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு, உப்புக் காடாய் மாறிய விளை நிலங்களை மிகக்குறுகிய காலத்தில் பயிர் விளையும் பூமியாக மாற்றிக் காட்டினார். இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரிப் பண்ணைகள் நம்மாழ்வாரால் அமைக்கப்பட்டன.
இயற்கை உழவாண்மைக்கான 25 நாள் நடைப்பயணம், சுதேசி பயிர் வளர்ப்புக்கான பிரசாரம், அங்கக வேளாண்மைக்கான பிரசாரம், கரிம வேளாண்மைக்கான பிரசாரம் என மாநிலத்தைச் சுற்றிச்சுற்றி பிரசாரம் செய்தார்.
தனது இறுதிக் காலத்தில் அவர் தொடங்கிய யுத்தம் இன்றைக்கும் தஞ்சைப் பகுதியில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். இதற்காக கிராமங்கள் தோறும் சென்று பேசினார்.
முனைவர் பழ. கோமதிநாயகத்தின் நினைவு நாளில் (2013 டிச. 29) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கூட்டம்தான் நம்மாழ்வார் ஏறிய கடைசி மேடை.
நீண்டநாள்களாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததால் அவர் உடல் நலிவுற்றிருந்தது. கடும் காய்ச்சலுடன் காரில் வந்தார். பேசினார்.
மறுநாள் (டிச. 30) இறந்துவிட்டார். இயற்கையோடு கலந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டக் களத்தில் முகாமிட்டிருந்தபோதே நம்மாழ்வார் மறைந்தார். தஞ்சையில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குள்பட்ட சுருமான்பட்டியில் 35 ஏக்கர் பரப்பளவில் நம்மாழ்வார் அமைத்த வாழ்வியல் பயிற்சிப் பல்கலைக்கழகமான வானகத்தில் (நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்) அவரது உடல் புதைக்கப்பட்டது.
உடலை எப்படிப் புதைப்பது என்பதுகூட அங்கே தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகத்தான் இருந்தது.
இன்றைக்கும் அங்கே ஏராளமான மாணவர்களும், விவசாயிகளும் வருகின்றனர்; பயிற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
நல்ல வேளையாக "வானகம்' இளைஞர்கள் கையில் இருக்கிறது. இளைஞர்களே பயிற்சியாளர்களாகவும் இருக்கின்றனர். பல புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களில் தொடங்கப்பட்ட பண்ணைகள் இருக்கின்றன. ஏராளமான தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீரழிவுகளின் அளவுக்கேற்ப மாற்று நடவடிக்கைகள் போதுமானதாகப் புலப்படவில்லை.
மண்ணையும், மனிதனையும் மலடாக்கும் ரசாயன உரங்களுக்கு எதிரான போராட்டம்...
மலைகளைச் சுரண்டியும், மரங்களை வெட்டியும், நீர்நிலைகளை மூடியும் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து சூழலியலைச் சிதைப்பதற்கு எதிரான போராட்டம்...
மண்ணும் மலையும், காடும் கானுயிர்களும் மனிதனுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்கிற பார்வையை உருவாக்குவதற்கான இயக்கம்...
இப்படி நம்மாழ்வார் பிடித்து இழுந்து வந்த தேர், தற்போது நடுவழியில் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து இழுத்துச் செல்வதற்குப் பெரும்படை தேவைப்படுகிறது.
இந்தப் படை பொதுமக்களாகிய நமது விழிப்புணர்வின் மூலம்தான் உருவாக முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...