அடாவடி அரங்கம்
முன்பெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் தலைவர் என்று ஒரு சாதனையாளரைப் போடுவார்கள். கூட்டத்தை நடத்திச் செல்வது அவருடைய பொறுப்புதான். அவரே ஒவ்வொரு பேச்சாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேச அழைப்பார்.


முன்பெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் தலைவர் என்று ஒரு சாதனையாளரைப் போடுவார்கள். கூட்டத்தை நடத்திச் செல்வது அவருடைய பொறுப்புதான். அவரே ஒவ்வொரு பேச்சாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேச அழைப்பார்.
இப்போது தனியே ஒருவரை ஒருங்கிணைப்பாளராக போடுவது வழக்கமாகி விட்டது. தலைமையுரையை முடித்த பிறகு, கூட்டம் முடியும்வரை பரிதாபமாக மேடையில் அமர்ந்திருப்பதைத் தவிர தலைவருக்கு வேறு வழியில்லை. அவருக்கும் மற்ற பேச்சாளர்களுக்கு உரிய அந்தஸ்து தானே அன்றி சிறப்பு அந்தஸ்து எதுவுமில்லை.
ஒருங்கிணைப்பாளர்கள் சிலர், ஒவ்வொரு பேச்சாளர் பேசி முடித்தபிறகும், அவர் பேச்சில் தென்பட்ட ஏதாவது ஒரு கருத்திலிருந்து மாறுபட்டு கொஞ்சநேரம் பேசுகிறார்கள். பிறகுதான் அடுத்த பேச்சாளரை அழைக்கிறார்கள். எல்லாப் பேச்சாளரையும்விட தாங்கள் கூடுதல் விஷயம் தெரிந்தவர்கள் என்பது அவர்கள் எண்ணம்.
ஒரு பேச்சாளர் பேசி முடித்த பிறகு ஒருங்கிணைப்பாளர், அவர் பேச்சுக்கு எதிர்க் கருத்தைச் சொன்னால் முந்தைய பேச்சாளர் மறுபடி வந்து தன் கருத்தை நிறுவ வாய்ப்பில்லையே, அப்படியிருக்கும்போது, இது என்ன அடாவடித்தனம்?
சில கூட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் விவரம் தெரியாமல் பல தவறான தகவல்களை வாரி வழங்குகிறார்கள். ஒரு கூட்டத்தில் ஓர் ஒருங்கிணைப்பாளர் "குறிஞ்சிமலர்' எழுதிய டாக்டர் மு.வ. என்று பேசிக்கொண்டு போனார். நான் அவரிடம் "குறிஞ்சிமலர்' எழுதியது மு.வ. அல்ல, நா. பார்த்தசாரதி என்று அறிவுறுத்த முனைந்தபோது, ஓர் அற்பப் புழுவைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார் அவர். இதுகூடத் தெரியாமல் இருக்கிறேனே நான் என்றது அவரின் சலிப்பும் கோபமும் நிறைந்த பார்வை. அறியாமையை அறிவு என்று திடமாக நம்புபவரை நாம் எப்படி மாற்ற முடியும்?
இன்னொரு கூட்டத்தில் ஒரே குடும்பத்தில் பல பிரமுகர்கள் தோன்றுவதுண்டு என்று சொன்ன ஓர் ஒருங்கிணைப்பாளர், அதற்கு உதாரணமாக எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். உதயமூர்த்தி, எம்.எஸ். விஸ்வநாதன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகிய அனைவரும் உடன் பிறந்தவர்களே என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிக்கொண்டே போனார். மேடையில் இருந்த பேச்சாளர்கள், ஒருங்கிணைப்பாளரின் "மேதாவிலாச'த்தை கண்டு உறைந்துபோய் உட்கார்ந்திருந்தார்கள்.
பல கூட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்கள்தான் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். நடுநடுவே அவர்கள் பேசும் நேரத்தை மொத்தமாகக் கூட்டிப்பார்த்தால் இரண்டு மூன்று பேச்சாளர்கள் பேசிய நேரத்திற்கும் மேல் அவர்கள் பேச்சு நீண்டிருப்பது புரியும். பல கூட்டங்கள் காலம் தாண்டி முடிவதற்குக் காரணம் நீண்டநேரப் பேச்சாளர்கள் மட்டுமல்ல, நீண்ட நேரம் பேசும் ஒருங்கிணைப்பாளர்களும்தான்.
ஒருங்கிணைப்பாளர் என்றால் ஓரிரு வரிகளில் வரப்போகும் பேச்சாளரைப் பற்றி அறிமுகம் செய்துவிட்டு விலக வேண்டும். அதை விட்டுவிட்டு, "எழுந்து நில்லுங்கள்', "கைதட்டுங்கள்' என்றெல்லாம் பார்வையாளர்களுக்கு சிலர் உத்தரவு போடுகிறார்களே, அதுபோன்ற அநாகரிகம் வேறில்லை. எழுந்து நின்று கைதட்டும் மன எழுச்சி, இயல்பாக வரவேண்டும், உத்தரவு போட்டு வரக்கூடாது.
ஒரு கூட்டத்திற்கு பார்வையாளனாகப் போயிருந்தேன். ஒரு பேச்சாளர் பேசி முடித்ததும், அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சடாரென ஒலிபெருக்கி முன் வந்தார். "மிகச் சிறப்பாகப் பேசினார் இவர், எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுங்கள்' என்று கட்டளையிட்டார். (அந்தப் பேச்சாளர் அப்படியொன்றும் சிறப்பாகப் பேசிவிடவில்லை.)
பலரும் சபை நாகரிகம் கருதி எழுந்து நின்று கைதட்டினார்கள். நான் உட்கார்ந்தே இருந்தேன். என் அருகே இருந்தவர் "என்ன, நீங்கள் உட்கார்ந்தே இருந்தீர்கள்' என்று கேட்டார். "நான் தேசிய கீதம் ஒலிக்கும்போது மட்டும்தான் எழுந்து நிற்பது என்று ஒரு வழக்கம் வைத்திருக்கிறேன்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சுயமாகவே எழுந்து நிற்க வேண்டும், இப்படி அடுத்தவர் சொல்லி எழுந்து நிற்கக் கூடாது' என்றேன் நான். என்ன சரிதானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...