மந்திரக் கூடங்கள்
நாட்டில் மிகவும் பரிதாபகரமான இடங்கள் என்றால் அவை அரசுச் சொத்துகள்தான். தற்போது எல்லா மாவட்டங்களிலும் பரந்துவிரிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்கள் இருக்கின்றன.


நாட்டில் மிகவும் பரிதாபகரமான இடங்கள் என்றால் அவை அரசுச் சொத்துகள்தான். தற்போது எல்லா மாவட்டங்களிலும் பரந்துவிரிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்கள் இருக்கின்றன.
இவை உள்ளிட்ட ஒருங்கிணைந்த அரசுத் துறை வளாகங்களில் கழிப்பிடங்களைப் பராமரிக்க என தனியாக ஆள் கிடையாது. உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து எப்போதாவது வரும் பணியாளர்கள்தான் அவற்றைச் சுத்தம் செய்கின்றனர்.
பரந்துவிரிந்து கிடக்கும் காலியிடங்களில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆனால், அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரிக்க தோட்டக்காரர் இல்லை.
இதேபோலத்தான் அரசுக் கல்வி நிலையங்களும். கல்வி நிலையச் சூழல் எப்படியிருக்க வேண்டும் என்று ஏதேதோ குழுக்கள் அமைத்து முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்படுகின்றன. பிறகு அந்த அறிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.
அரசுப் பள்ளிகளை- குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை - நேரில் பார்வையிட்டால் போதும். ஒரு கல்வி நிலையம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன, இடவசதியில் மட்டும். பராமரிப்பில் அப்படியே தலைகீழ் நிலை.
மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் வளாகம் விசாலமானதாகக் காட்சி தருகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள். கழிப்பறைகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, தொட்டிகள் அமைத்துக் கொடுக்கிறார்கள்.
சில நாள்களில் அவை வழக்கமான நிலைக்கு மாறிவிடும். அதுவும், காலாண்டு, அரையாண்டு விடுமுறை விடப்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை. உள்ளடங்கியிருக்கும் பல பள்ளிகளில் வளர்ந்த பெரிய மரங்களை அந்த ஊர் முக்கியஸ்தர்கள் வெட்டிவிடுகின்றனர்.
இதேபோலத்தான் விடுதிகள். ஆதிதிராவிடர் நலன், பிற்பட்டோர் நலன் என வகைவகையாக மாணவர் விடுதிகள் மாநிலம் முழுவதும் உள்ளன. அவையும் போதிய இடவசதிகளுடன் அற்புதமான வளாகங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால்
பராமரிப்பில் மட்டும் எல்லாமே மோசம்.
கழிப்பறைகள் இருக்கின்றன, ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை. பிரம்மாண்டமான விளையாட்டுத் திடல்கள் இருக்கின்றன, அங்கே மாடுகள் மேய்கின்றன. தண்ணீர் தொட்டிகள் இருக்கின்றன, மூக்கைப் பிடிக்காமல் கிட்டே போக முடியாது. வகுப்பறைத் தரைத்தளங்கள், "கமிஷன்' எவ்வளவு? என்பதைப் பல் இளித்துக் காட்டுகின்றன.
இந்த வளாகங்களை ஏன் சிறப்பாகப் பராமரிக்க முடியாது?
ஒவ்வோர் ஊரிலும் கல்விக் கூடங்களுக்கென கல்விக் குழுக்களை ஏற்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஊரின் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்களைக் கொண்ட அந்தக் குழுக்களே பள்ளியை நிர்வகிக்கும் வகையிலும் அரசாணையில் வகை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் பலன் என்ன? எங்காவது மாவட்டத்துக்கு ஒன்றிரண்டு பள்ளிகள் கல்விக் குழுக்களை உருவாக்கி சிறப்பாகச்
செயல்பட்டால் அது அரிய செய்தி. மற்றபடி பல இடங்களில் எந்தக் குழுவும் இல்லை. சில இடங்களில் குழுக்கள் இருந்தும் அவை செயல்பாட்டில் இல்லை, கெüரவப் பதவிகளாகத்தான் இருக்கின்றன.
இன்று நிதியுதவிகள் பல்வேறு வழிகளில் வந்து குவிகின்றன. ஏராளமான தன்னார்வ அமைப்புகள் துளிர்த்துவிட்டன. நியாயமாகச் செயல்படும் அமைப்புகளைப் பட்டியலிட்டால் தாராளமாக நிதி கிடைக்கும்.
எதிர்கால சந்ததிகளை, எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் பள்ளிகளை அரசு நிச்சயம் கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கான கல்வி நிலையங்களில் நல்ல சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
ஏனென்றால் அவை அரசின் சொத்துகள். அதிலும் பள்ளிக்கூடங்களைப் பொருத்தவரை, அவை வெறும் சொத்துகள் மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரின் அறிவுக்கண்களைத் திறந்துவிடும் மந்திரக் கூடங்களல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...