டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இனி இதுபோல் நடக்கக்கூடாது

முன்பெல்லாம் வடமாநிலங்களில் மட்டும்தான் குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரிழப்பது அல்லது உயிருடன் மீட்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்துள்ளன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:03 pm

சா. ஜெயப்பிரகாஷ்

முன்பெல்லாம் வடமாநிலங்களில் மட்டும்தான் குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரிழப்பது அல்லது உயிருடன் மீட்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்துள்ளன. இப்போது இந்தக் காட்சிகளை தமிழ்நாட்டிலும் அதிகமாகக் காண முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு முறைகூட குழந்தைகளை உயிருடன் மீட்க முடியவில்லை என்பதுதான் பெருந்துயரம்.

இத்தகைய ஆழ்துளைக் கிணறு விபத்துகள் தவிர்க்க முடியாதவை அல்ல. ஒவ்வொரு கிராமத்திலும் தற்போதுள்ள ஆழ்துளைக் கிணறுகளையும், அவற்றில் செயல்படாதவை குறித்தும் பட்டியல் எடுப்பது எளிதான ஒன்றுதான்.

எல்லா கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்; மக்கள் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். ஒரு வாரத்தில் முழுப் பட்டியல் எடுத்துவிட முடியும்.

அவற்றில் செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளை, அதன் உரிமையாளர்களைக் கொண்டே மூடிவிடச் செய்வதும் பெரிய காரியமல்ல. ஒரு வண்டி மண் கூடத் தேவைப்படாது. ஆனால் மேலாக மட்டும் மூடி போட்டு மூடுவது என்பது ஆபத்தானதே.

அதேபோல, ஆழ்துளைக் கிணறுகளை தோண்டும்போதே, எதிர்பார்த்த தண்ணீர் கிடைக்காவிட்டால் அப்போதே மூடிவிடவும் உத்தரவிட வேண்டும். ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை மாநிலம் முழுவதும் ஒரு வார காலத்திலேயே ஏற்படுத்திவிட முடியும்.

ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்றன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கிறார்கள். தொடர்ச்சியாக இரு கூட்டங்களில் இந்த ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தினால் போதும்.

இதைத் தாண்டி, குழியில் விழுந்த குழந்தைகளை உயிருடன் மீட்க முடியவில்லை என்பதும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சவாலாக இருக்கிறது. அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில் காலை ஏழு மணிக்கு விழுந்த குழந்தையைக் காக்க மாலை ஐந்தரை மணிக்குத்தான் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்துக்குச் செல்ல முடிகிறது, இரவு ஏழு மணிக்குத்தான் குழந்தையை மீட்க முடிகிறது - அதுவும் சடலமாக.

இத்தகைய தாமதத்துக்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். செய்தி சென்றடையவில்லை என்று இந்நாளில் சொல்ல முடியாது. தொலைக்காட்சிகள் அரை மணிநேரத்திலேயே சம்பவ இடத்தில் ஆஜராகிவிடுகின்றன.

தனியார் சிலர் மட்டுமே இதற்கான கருவிகளை வடிவமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் பரிசோதிக்கிறார்கள்! ஏன், இதை அரசே, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு தொழில்நுட்பத்தை - ஒரு கருவியை கண்டுபிடிக்கக் கூடாது? சிலருக்கு அதைக் கையாள பயிற்சி அளிக்கக் கூடாது?

பெருநகரங்களில் மட்டுமாவது இதற்காக கருவியை வாங்கி வைக்கலாம். இதனால் பெரிய செலவாகிவிடாது.

அத்துடன், தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்பட்ட விபத்துகளை பட்டியலிட்டு, அந்தச் சம்பவங்களில் பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள், தொழில்நுட்பக் கருவி உரிமையாளர்கள், ஆய்வு மாணவர்களை ஓரிடத்தில் வைத்து ஆய்வரங்கம் ஒன்றை அரசு நடத்த வேண்டும். ஒவ்வொரு சம்பவத்திலும் தாமதத்துக்கு எது காரணமாக இருந்தது? உயிர்ப்பலிக்கு எது காரணமாக இருந்தது? இனி வருங்காலத்தில் அந்த காரணத்தை தவிர்ப்பதெப்படி? என்று தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

மாநிலத்தில் எந்தெந்த பகுதியிலுள்ள மண் வகையினால், மீட்புப் பணிகளில் எந்த விதமான நெருக்கடிகள் ஏற்படும்? என்பது குறித்தும் தொடர்புடைய துறை ஆய்வாளர்களைக் கொண்டு பேச வைக்க வேண்டும்.

இதுகுறித்த தொழில்நுட்ப விஷயங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களெல்லாம் ஒரு சின்னஞ்சிறு உயிர் ஊசலாடுகிற இடத்தில் பார்வையாளர்களாக நிற்கும் அவலம் மாற வேண்டும்.

இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் பூமியிலிருந்து பதினைந்து அடிக்குக் கீழே ஒன்றரை அடி விட்டமுள்ள ஒரு குழியில் நான்கு வயது குழந்தை எப்படி துடித்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் இவை எதுவுமே பெரிய காரியமல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.