டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சவால் விடுக்கும் குப்பைக் கழிவுகள்

குப்பைக் கழிவுகளைக் கையாளுவது அத்தனை எளிதானதும் அல்ல, அதேநேரத்தில் தீர்க்க முடியாத பிரச்னையும் அல்ல.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:59 am

சா. ஜெயப்பிரகாஷ்

குப்பைக் கழிவுகளைக் கையாளுவது அத்தனை எளிதானதும் அல்ல, அதேநேரத்தில் தீர்க்க முடியாத பிரச்னையும் அல்ல.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வணிகப் பயன்பாட்டில் மட்டுமின்றி, வீடுகளில் இருந்தேகூட, மறுசுழற்சி செய்ய முடியாத சிக்கலான கழிவுகளை ஏராளமாக வெளியேற்றுவதால் அவற்றைச் சுத்திகரிப்பது அத்தனைச் சுலபமானதல்ல.

ஏராளமான பிளாஸ்டிக், மின்னணுப் பொருள்கள் வீடுகளில் இருந்தே லட்சக்கணக்கான டன்களாக எல்லாவற்றுடன் கலந்து குவிகின்றன.

இத்தனைக்கும் மலைபோல் குவியும் இந்தக் குப்பைகளில் இருந்து அற்புதமான இயற்கை உரம் தயாரிக்க முடியும், எரிவாயு தயாரிக்க முடியும், இன்னும் கூடுதலாக மின்சாரமும் தயாரிக்கலாம் என்கிறார்கள். இவை அத்தனையும் அண்மைக்காலங்களில் அதிகவிலை கொண்ட, அரிதான விஷயங்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ரசாயன உரங்களில் இருந்து மீள, இயற்கை உரம் அவசியம். ஆனாலும் குப்பைகள் எரிகின்றன (எரிக்கப்படுகின்றன!). மிகவிரைவில் ஒரு எரிவாயு சிலிண்டர் ரூ. 1,000 ஆகப் போகிறது (மானியம் வந்தாலும் நட்டம் நமக்குத்தான்!). ஆனாலும் குப்பைகள் எரிகின்றன. மின்சாரமும் அப்படியே!

இதில் மின்சாரம் எப்படியோ, உரமும், எரிவாயுவும் சாத்தியமுள்ள அம்சங்கள்தான். ஆனால், மனித உழைப்பும், விசாலமான இடங்களும், விரிவான திட்டமும், கூடவே மிகஅரிதான பொறுமையும்தான் அவசியமாகத் தெரிகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள், மின்னணுக் கழிவுகள், இரும்பு உள்ளிட்ட மக்காத பொருள்களைப் பிரித்தெடுத்தல் அவசியம். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பணியில் கடுமையான தொய்வு. தெருக்கள்தோறும் வண்ண வண்ணத் தொட்டிகள் வழங்கப்பட்டதுதான் மிச்சம். இதற்கு என்ன காரணம்? எப்படிப் பிரிப்பது எளிது - சாத்தியம்? என்பதை முடிவு செய்துவிட்டால் பாதி கிணறு தாண்டியதாகப் பொருள்.

பிளாஸ்டிக் பைகள், துண்டுகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிலோ ரூ. 3-க்கு வாங்கி, சுத்தப்படுத்தி அரைத்துக் கொடுக்கிறார்கள் கிலோ ரூ. 30-க்கு. ஊரக சாலைத் திட்டத்துக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக் துகள்கள் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. தேவை அதிகம் இருக்கிறது. ஆனாலும் குப்பைக் கழிவுகளுடன் கலந்து எரிகின்றன.

காய்கறி உள்ளிட்ட உணவுக் கழிவுகளை மண்ணில் புதைக்கப்பட்ட குடுவை போன்ற ஓர் அமைப்புக்குள் செலுத்தி, மாட்டுச் சாணம் கரைத்து இதில் கலந்தால், எரிவாயு தயார். பல இடங்களில் இந்த முறை சாத்தியப்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களின் பயிற்சி மையங்களில் இந்த முறையில்தான் எரிவாயுவைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது. கழிப்பறையில் இருந்து மனிதக் கழிவையும் சேர்த்தால், தரமான எரிவாயு கிடைக்கிறது! அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள், ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகங்களின் "கேன்டீன்', ஏன், தற்போதைய "அம்மா' உணவகங்களுக்காகவும் இந்த முறையைக் கூடுதல் பணியாக மேற்கொள்ளலாம். வாய்ப்பு இருக்குமேயானால் விற்பனையும் செய்யலாம்!

அடுத்தது இயற்கை உரம். பரந்த நிலப்பரப்பில் மக்கும் கழிவுகளை திண்டு திண்டாகப் பரப்பி மேலே மாட்டு கோமியம் உள்ளிட்டவற்றைக் கலந்து தெளித்தால் அடுத்த மூன்று நாள்களில் மண்ணோடு மண்ணாகக் கலந்து தரமான உரம் தயார்.

இதைத் தயாரிக்கும் இடத்தில் எந்த துர்நாற்றமும் இல்லை. இதையும் பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் செய்தும் வருகிறார்கள்.

இந்த முறைகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து செய்ய தனியாக ஒரு துறை அல்லது வாரியம் அவசியம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதைச் செயல்படுத்த கணிசமான பணியாளர்கள் தேவை. ஆய்வு செய்ய, கண்காணிக்க அதிகாரிகள், அதற்கான ஏற்பாடுகள் தேவை.

அரசு நிர்வாகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்தான். தொடக்க நிலையில் கணிசமான கூடுதல் செலவும் அரசுக்கு வரலாம். ஆனால், இதைவிட்டால் வேறு கதி இல்லவே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். "டைஜெஸ்டர்' என்ற பெயரில் வரும் நவீன இயந்திரங்கள் இதைவிடவும் பெரும்பொருட்செலவைத் தருகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணுக்குள் புதைய விடுவதால் ஏற்படும் கேடுகளைவிட, இந்தப் பணி- செலவு பெரிதல்ல. விவசாய உற்பத்திக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் தலைமுறை தலைமுறையாக மனித குலத்துக்கு ஏற்படும் கேடுகளை விட இந்தப் பணியும் - செலவும் பெரிதல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.