அறிவு வீற்றிடும் செறிவுடை மனங்கொள்!
நம் அறிவியல் குறிப்பாக, அணுசக்தி அறிவியல் நம் தாழ்வு நிலையிலிருந்து விடுதலை பெறவும், நம் மக்களுக்கு கௌரவமான வாழ்வில் வசதிகள் வழங்கவும் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.


நம் அறிவியல் குறிப்பாக, அணுசக்தி அறிவியல் நம் தாழ்வு நிலையிலிருந்து விடுதலை பெறவும், நம் மக்களுக்கு கௌரவமான வாழ்வில் வசதிகள் வழங்கவும் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். மீண்டும் கூறுகிறேன், அணு ஆயுதத் திட்டத்தில் இறங்கும் விருப்பம் அறவே இல்லை. நாம் பாலைவனத்தை சோலைவனம் ஆக்க விழைகிறோம், அன்றி, உலகைப் பாலைவனம் ஆக்குவதற்கு அல்ல'' என்று உரையாற்றினார் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி.
1969 மார்ச் 12 அன்று சென்னை அருகே கல்பாக்கத்தில் "அணு உலை ஆராய்ச்சி மையம்' தோற்றுவிக்கப்பட்டு, 1983 ஜூலை 23 அன்று அவரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உலக அரங்கில் அணு ஆயுத ஒழிப்புக்கான "ஐன்ஸ்டீன் கொள்கை அறிவிப்பினை'த் தொடர்ந்து நம் நாட்டில் பண்டித ஜவாஹர்லால் நேருவும் ஓர் அறிவியல் மாநாடு நடத்த வற்புறுத்தினார். முதல் மாநாடு 1957 ஜனவரி புதுதில்லியில் நடத்த ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால், அதற்கிடையில் சூயெஸ் கால்வாய்த் தகராறு காரணமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாம். பின்னர் சைரஸ் இயாட்டன் என்னும் கனடா நாட்டுப் பொருளாதார நிபுணரின் வேண்டுகோளுக்கு இணங்க "பக்வாஷ்' என்கிற இடத்தில் முதல் கூட்டம் நடந்தேறியது. அதில் உலக விஞ்ஞானிகள் 22 பேர் கலந்து கொண்டனர்.
விண்வெளி போர்க்களம் ஆகாமல் காக்கவும், அணுசக்தி வெடிகுண்டுகளாக இயல் மாறாது இருக்கவும் "பக்வாஷ் இயக்கம்' பாடுபட்டது. அதில் நம் நாட்டு அணு விஞ்ஞானி டாக்டர் ஹோமி. ஜே. பாபா, விண்வெளி இயல் மேதை டாக்டர் விக்ரம் சாராபாய், ("இராமன் விளைவு'க் கண்டுபிடிப்பில் பெரும்பங்கு வகித்த) பிரபல இயற்பியலார் கே.எஸ். கிருஷ்ணன், பி.சி. மெகலானோபிஸ், ஹுசைன் ஜாகீர், டி.எஸ். கோத்தாரி போன்றோர் அங்கம் வகித்தனர்.
ஏதாயினும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974 மே 18 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்கரானில் "புத்தர் புன்னகைத்தார்'. அதுதான் நம் நாட்டின் முதலாவது அணுகுண்டுப் பரிசோதனை. அவ்வாறே, அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகத் திகழ்ந்தபோது மீண்டும் "சக்தி வென்றது'. 1998 மே 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் இரண்டாவது முறையாக ஐந்து அணுவெடிப்புச் சோதனைகள் நடத்தப் பெற்றன.
அதனாலேயே மே 11 தேசியத் தொழில்நுட்ப தினம் ஆக அறிவிப்பானது. இதற்கு மத்தியில் அதே ஆண்டு மூன்று வாரங்களுக்குள் 1998 மே 28 அன்று பலுசிஸ்தான் அருகே சகாய மாநிலத்தில் பாகிஸ்தானும் பதிலுக்கு அணுவெடிப்புச் சோதனை நடத்தியது வரலாறு.
எனினும் ""அணு குண்டு வெடித்து விட்டாலே உலக வல்லரசாகிவிட முடியுமா?'' என்று சீனா, இந்தியாவைப் பார்த்து எகத்தாளம் பண்ணியது.
""நாட்டில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அணுகுண்டு வெடிப்புச் சோதனைகள் நமக்குத் தேவையற்றவை'' என்று பொருளாதார நிபுணர்களும், ""ஆளும் கட்சியின் குறுகிய கால அரசியல் நோக்கமே அணுகுண்டு சோதனை'' என்று எதிர்க்கட்சிக்காரர்களும், ""ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட தற்போதைய அரசு அணுகுண்டு வெடித்தது மன்னிக்க முடியாத குற்றம்'' என்று இடதுசாரி அரசியல்வாதிகளும் கூறினர்.
சாதாரண மக்கள் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை. அணுப்பரிசோதனை என்றாலே அபாய வெடிகுண்டு என்ற பிரமை இன்றும் நம் மத்தியில் பரவி இருக்கிறது. காரணம், ஆத்திரவெறி கொண்டு ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அமெரிக்கா குண்டு வீசிய கோப ஆவேசச் செயல். இதனை இந்தியா நடத்திய அணுப்பரிசோதனைகளுடன் முடிச்சு போட்டுப் பார்ப்பது தவறு அல்லவா?
இன்றுவரை எந்த நாட்டையேனும் வம்புக்கு ஆக்கிரமிக்கவோ, போர் தொடுக்கவோ நாமாக நமது ராணுவ பலத்தினைத் துர்ப்பிரயோகம் செய்துள்ளோமா? கடந்த 5,000 ஆண்டு வரலாற்றில் எப்போதேனும் நாமாக எந்த நாட்டின் மீதேனும் படையெடுத்துச் சென்றது உண்டா?
சரித்திரத்தைப் புரட்டினால் புரியும். ஆதிகாலம் தொட்டு ஈரானியர், கிரேக்கர், முகம்மதியர், கிறிஸ்தவர் என அன்னியர்களே மாறி மாறிப் பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடினர். அவர்கள் தங்கள் கலை, வாணிபம் தொடர்பாகவும், மண்ணாசையாலும், மதத்தைப் பரப்பவுமாக இங்கு புகுந்தனர் என்பதே உண்மை.
மொத்தத்தில் படிப்பறிவு இல்லாதவர்களில் நூற்றுக்கு 23 பேரும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு அறுபத்து நான்கு பேரும் அணுகுண்டுப் பரிசோதனைகளை வரவேற்கிறார்கள் என்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புதிய தொழில்நுட்பங்களால்தான் நாடு உலகரங்கில் மதிப்பிலும் பொருளாதாரத்திலும் உயரும் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. தொழில்நுட்பத்தைக் கையாள்பவர் பற்றி விமர்சிக்கலாமே அன்றி, அறிவியல் தொழில்நுட்பத்தையே குறைசொல்வது முட்டாள்தனம். பழமைவாத இயற்கை விஞ்ஞானிகளும், அரசியலுக்கும் அறிவியலுக்கும் நடுவே இரண்டாங்கெட்டான் சமூக நல ஆர்வலர்களும் இதே செயலைத் தெரிந்தோ, தெரியாமலோ விழிப்புணர்வு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.
""ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் சம்பூர்ணமாக உனக்குச் சொல்லுகிறேன்..'' என்கிறது பகவத் கீதை ("ஞான யோகம்'). இங்கு ஞானம் என்பது உள்ளுணர்வால் பெறப்படுவது. ஆற்றல் அல்லது ஆன்மிகச் சிந்தனை. அதற்கு எதிர்மறையாகக் கருதப்படும் "வி-ஞானம்' (விஞ்ஞானம்) என்பது பொருள் சார்ந்த உலகியல் அறிவு.
பகவத் கீதை (7:4) இயற்கையை எட்டு வகையாகப் பிரிக்கிறது - மண் (திடப்பொருள்), நீர் (திரவப்பொருள்), நெருப்பு (பிளாஸ்மா அல்லது மின்மநிலை), காற்று (வாயுப்பொருள்), வான் (வெற்றிடம்), மனம் (உணர்வு வடிவம்), மதி (அறிவு நுட்பம்), அகங்காரம் (சுய நிலை). இங்கு முதல் ஐந்தும் லோகாயதப் புறச்சார்பு உடையவை. பிந்திய மூன்றும் அகச்சார்பு குறித்தவை. நவீன விஞ்ஞானம் எந்தக் கருத்தினையும் அறிவியல் ரீதியில் புரிந்துகொள்ள வழிகாட்டும்.
பரஞ்சோதியார் படைத்த திருவிளையாடல் புராணத்தில் ""அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்கள் எல்லாம் அண்டங்களாகப் பெரிதாச் சிறிதாயி னானும், அண்டங்கள் உள்ளும் புறமும் கரியா யினாலும், அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர்'' (பாயிரம் -6) என்று அணுவியல் பற்றிய குறிப்பு வருகிறது.
மின்சாரமும், அணுசக்தியும் தீங்கு தரும் என்று, அகல்விளக்கை ஏற்றி வசிக்கும் இயற்கைவாதிகள் எவர் உண்டு?
பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் அற்ற தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் கால்நடைக் கழிவையும் இயற்கை உரம் என்ற வகையில் பயன்படுத்த நினைத்தோம். இயற்கை உணவு நல்லதுதான். அதற்காக, "கம்போஸ்ட் உரம்' என்று மனித மலத்தினால் இனி மகசூல் பெருக்க முடியுமா? பிளாஸ்டிக் கழிவுகளைச் சாத்தான்கள் என்று சொல்லி, காகிதத்திற்காக மரங்களை அழிக்கத்தான் யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
120 கோடி ஜனங்களின் அவசரத் தேவைக்கு உடனடிப் பயிர்களும் பழங்களும் தேவை அல்லவா? அத்தகைய ஆராய்ச்சி வழி தற்காலத்திய சமூகப் பிரச்னைக்குத் தீர்வு காணவே தொழில்நுட்ப விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். உற்பத்தியான உணவு தானியங்களைப் பதப்படுத்தியும் பண்டகங்களில் பாதுகாத்தும் நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் உணவுப் பண்டங்களைக்கொண்டு சேர்க்கவும் தொழில்நுட்பங்கள் அவசியம்தானே?
"ஸ்புட்னிக்' தொடங்கி வைத்த விண்வெளி சகாப்தத்திற்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த முன்னேற்றங்களை என்ன சொல்ல? இன்றைய சூழலில் இந்தப் பூமியைப் போர்த்து இருக்கும் செயற்கை மின்காந்த அலைக்கற்றை 1957 ஆம் ஆண்டிற்கு முன்பு இல்லை.
கட்டபொம்மன் காலத்தில் கூட காற்றில் பரவும் காண்டா மணி ஓசை தான் திருச்செந்தூர் அந்திப் பூஜையை பாஞ்சாலங்குறிச்சி அரண்மனைக்கு அறிவிக்கும் தகவல் தொடர்பு உத்தி. செல்பேசி போன்ற செயற்கையான கருவி இனம் வந்தது, குருவி இனம் போச்சு டும், டும், டும் என்கிறோம். போனது போகட்டும், டும், டும். ""புதியன புகுதலும் வழுவல கால வகையினானே''.
ஆண்டவன் கொடுத்த இரண்டு காலில் நடந்து செல்வதே பயணம் என்று நம்பி இருந்தால் மெட்ரோ ரயில் எதற்கு? ஷேர் ஆட்டோ எதற்கு? ஆகாய விமானத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி மருமகள் பேறுகாலத்திற்கு யாரால் போக முடியும்? பெட்ரோலிய எரிபொருளும் இயற்கையின் கொடை ஆயிற்றே? ஆனால் எரிவினை வாயுக்களில் பசுமைக் குடில் வளிமங்கள் கலப்பதைக் கட்டுப்படுத்த முயல்கிறோமே அன்றி முழுவதும் நிறுத்த முடியாது.
கீதையின் பதினெட்டாம் அத்தியாயம் சந்நியாசம் பற்றியது. என்றாலும் அதில் சொல்லப்படும் கருத்துகள் இன்றைய அறிவியல், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றன. சாங்க்ய சாத்திரம் எல்லாச் செயல்களும் நிறைவேற்ற ஐந்து காரணங்கள் உண்டாம். களன் (ஆய்வுக்கூடம்), கர்த்தா (ஆராய்ச்சியாளர்), உபகரணங்கள், செயல்முறைகள், இயற்கை.
""பொருள், கருவி, காலம், வினை, இடனொ(டு) ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்'' (குறள் 675) என்பார் வள்ளுவர்.
மாற்றங்கள் இன்றி வாழ்வதெனில் மனிதனுக்கு ஆறு அறிவு ஏனோ? ""மாறிக்கொண்டு இருப்பது மாறா இயற்கை'' என்கிற சித்தர் ஞானமும் இயற்கை விஞ்ஞானிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர்- பணி நிறைவுற்ற விஞ்ஞானி.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...