விருந்தோம்பிய தேசம்...
ஊரின் பிரதான இடத்தில் அந்த வீடு அமைந்திருந்ததால், ஊருக்குள் புதிதாக நுழைபவர்கள் அநேகமாக அந்த வீட்டில்தான் முகவரி கேட்பார்கள்.


ஊரின் பிரதான இடத்தில் அந்த வீடு அமைந்திருந்ததால், ஊருக்குள் புதிதாக நுழைபவர்கள் அநேகமாக அந்த வீட்டில்தான் முகவரி கேட்பார்கள்.
"இப்புடி நேராப் போயி...' என்று தொடங்கி வழியைச் சொல்லிவிட்டு, "இரு கண்ணு, மோர் குடிச்சுட்டுப் போங்க...' என்று வலுக்கட்டயமாக அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடுப்பார் அந்த வீட்டுப் பெண். குளிர்காலமாக இருந்தால் மோருக்குப் பதில் டீ (அவரின் வழக்கில் காப்பித் தண்ணி). முன் பின் தெரியாதவர்களையும் உபசரிக்கும் விவசாயியின் வெள்ளந்தி மனம்.
இதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை அல்ல' ஏழெட்டு ஆண்டுகள் முன்பு வரை இது சகஜம்.
ஆனால், பெரும்பாலான கிராமங்களில் இன்று அந்த வரவேற்பைப் பார்க்க முடிவதில்லை. "விருந்தோம்பலின் தேசம்' என்பார்கள் கொங்கு மண்டலத்தை. அந்த தேசம் தன் இயல்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
விவசாயிகளைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை ரூ. 16. ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் விற்பனை விலை ரூ. 17 என்று ஆகிவிட்ட பிறகு எந்த விவசாயியையும் நாம் குற்றம் சுமத்திவிட முடியாது.
"பாரம்பரிய விதைகள் வேண்டாம். இதை நடவு செய்யுங்கள் பூச்சிகள் தாக்காது; காய்ப்புத்திறன் அதிகம்' என்ற பசப்பு வார்த்தைகளை நம்பியதால், இன்று பருவம்தோறும் விதைகளைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை விவசாயிக்கு.
"குலைகளாகக் காய்த்துத் தொங்கும்' என உத்தரவாதம் அளிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகள் குலைகளுக்குப் பதில், "தற்கொலை'களாகவே காய்த்தன!
ஒரு தேங்காய் ரூ. 2.70க்கு தோட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட காலத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.8; இன்று டீசல் விலை ரூ.45; ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தேங்காய் ஆண்டுதோறும் சராசரியாக ரூ. 5.50 முதல் அதிகபட்சமாக ரூ. 6க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் கொள்முதல் விலையும் 5 மடங்கு அதிகரித்திருக்க வேண்டும்தானே? ஆனால், அப்படி அதிகரிக்காததற்கான பொருளாதாரக் காரணங்கள் பற்றிச் சொன்னால், ஏழை விவசாயிக்குப் புரியவா போகிறது?
மான்சான்டோவின் அசுர பலம் பற்றியோ, "ஜி.டி.பி.' மற்றும் "ஓபெக்' பற்றியோ சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையில் அந்த அப்பாவி ஜீவன்கள் இல்லை. சர்வதேச கச்சா எண்ணெய் அரசியல் பற்றியும் அவர்களுக்கு விளங்காது.
"தேசிய நதிநீர்க் கொள்கை'யை இத்தேசத்தின் நலம் விரும்பிகள் வகுத்திருக்கின்றனர்.
இதன்படி, நீர்வழித்தடத்தை மாற்றியமைக்கக் கூடாது. ஆக, நதி நீர் இணைப்பு எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.
இனி, நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் விவசாயி காசு கொடுக்க வேண்டும். இன்னும் தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை.
நதிகளும், நீர்நிலைகளுமே பட்டா போடப்பட்ட பிறகு, விவசாய நிலங்களை மட்டும் என்ன செய்ய? விலை போயின விளை நிலங்கள். சாகுபடிப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இந்த லட்சணத்தில் விவசாயிகளின் சராசரி தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாகக் கவலை வேறு நம் பிரதமருக்கு! ஆகவே, பெரும்பான்மை விவசாயத் தொழிலாளர்களை வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும் என புள்ளிவிவரங்களுடன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி, மண்ணில் இறைத்துவிட்டு வானம் பார்க்க வேண்டிய அவசியமில்லை அவருக்கு. வெள்ளைத்தாளும், பென்சிலும் இருந்தால் புள்ளிவிவரங்கள் அவருக்கு அத்துபடி.
அரசியல்வாதிகளைப் பொருத்தவரை "விவசாயி வாழ்ந்தால் வாக்கு; வைகுண்டம் சென்றால் புள்ளி விவரம்!'
எனவே, அடுத்த முறை நீங்கள் ஏதேனும் ஒரு கிராமத்துக்குச் செல்ல நேர்ந்தால், அங்கு முகவரி கேட்கும் உங்களைப் பார்த்ததும், பாதியளவு திறந்திருக்கும் கதவுக்குப் பின்னால் இருந்து தலையை மட்டும் நீட்டியபடி "தெரியாது' என்று பதில் சொன்னால் அவரை மன்னித்து விடுங்கள். ஏனெனில், அது அவரின் குற்றமல்ல.
"விருந்திருக்க உண்ணாதவன்' என்ற அடைமொழி தனக்காகத்தான் என்று அவருக்குத் தெரியும்; ஆனால், ஒருபோதும் தன் வாரிசுகளுக்கு அதைச் சொல்லித் தர அவர் விரும்ப மாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...