சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேவை படிப்படியான மதுவிலக்கு

'பூட்டியே தீருவேன்' என்று சொல்லி, சங்கிலியும் பூட்டுமாக வந்து வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாமக தலைவர் ராமதாஸ் தொடங்கி, மதிமுக தலைவர் வைகோ அடுத்து, மனிதநேய மக்கள் கட்சியும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:53 am

சா. ஜெயப்பிரகாஷ்

'பூட்டியே தீருவேன்' என்று சொல்லி, சங்கிலியும் பூட்டுமாக வந்து வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாமக தலைவர் ராமதாஸ் தொடங்கி, மதிமுக தலைவர் வைகோ அடுத்து, மனிதநேய மக்கள் கட்சியும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

இவர்கள் ஒவ்வொருவரின் நிகழ்வுகள், முன் நடைபெற்றதைக் காட்டிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னும் பின்னும் பல அமைப்புகள், இயக்கங்கள் இதே முன்னெடுப்பைச் செய்துள்ளன.

இடதுசாரி இயக்கங்களிடமிருந்து உரத்த குரல் இல்லை. தலித் இயக்கங்களில் திருமாவளவன் உறுதியாக எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார். கிருஷ்ணசாமி, கள் இறக்குவதற்கும் அனுமதிக்கக் கூடாது என்றிருக்கிறார்.

ஏன் வேண்டும் பூரண மதுவிலக்கு? இந்தக் கேள்விக்கு ஆயிரக்கணக்கான பதில்கள் உள்ளன. முதல் பதிலில் வெளிப்படுவது ஸ்திரமான கேள்வி - "தன் குடி மக்களை அரசே குடிகாரனாக்கலாமா?'. மதுவுக்கு ஆதரவாகப் பேசுவோரும்கூட இதற்குப் பதில் சொல்ல முடியாது.

தெருவுக்குத் தெரு கடைகளைத் திறந்துவிட்டு, ஆண்டுக்கு ஆண்டு சில பத்தாயிரம் கோடி ரூபாய்களில் வருமானத்தை, கூட்டிப் பெருக்கிக் கொழித்துவிட்டு, திடீரென பூரண மதுவிலக்கு சாத்தியமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இதில் "பெரும்தொகை' அரசுக்கு இழப்பாகும் என்பது அரசுத் தரப்பு சிக்கல். கள்ளச் சாராயம் அல்லது வேறுவிதமான போதைப்பொருள் பெருகலாம் என்பது மற்றொரு சிக்கல்.

முடிவுகளைத் தடாலடியாக எடுப்பவர் என்று பெயர்பெற்ற ஜெயலலிதாவுக்கு முதல் சிக்கல் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை - முடிவெடுக்க வேண்டும் அவ்வளவே!

அதேநேரத்தில் கள்ளச் சாராயம் பெருகுவதைக் கட்டுப்படுத்தத்தான் முடியுமே தவிர, முற்றிலும் தடுக்கவே முடியாது. காரணம், அரசியல்வாதிகள் இதில் "ருசி' கண்டவர்கள்.

அத்தோடு, குறைவான வரி காரணமாக பெங்களூருக்கும், புதுச்சேரிக்கும் "குடிமக்கள் போக்குவரத்து' அதிகரிக்கும் - "சரக்கு'ப் போக்குவரத்தும்தான்!

இப்போதே தேர்தல் நேரங்களில் இந்த ஊர்களின் "சரக்கு'கள் தமிழ்நாட்டில் குவிக்கப்படுகின்றன - எத்தனைப் பாதுகாப்பு, சோதனை இருந்தும், விதவிதமான பார்வையாளர்கள் இருந்தும்!

அரசே சரளமாக மது விற்பனையில் இறங்கியபோதும், மருந்துப் பொருள்களில் இருந்து போதை மயக்கத்தைக் கண்டறிந்த நம் மக்கள், கடைகளைப் பூட்டினால் புதுவிதமான கண்டுபிடிப்புகளில் இறங்குவார்கள் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

வேறு வழி? படிப்படியாக சில விஷயங்களை முன்னெடுக்கலாம். முதல் கட்டமாக மதுக்கடைகளை அரசு நடத்துவதை நிறுத்த வேண்டும்.

அடுத்து, தனியாரிடமிருந்தாலும் அரசு அனுமதியில்லாத "கள்ளச் சரக்குகளையும்', நேரம் கடந்த கள்ள வியாபாரத்தையும் "பாரபட்சமின்றி'த் தடுக்க வேண்டும்.

தொடர்ந்து, படிப்படியாக நேரத்தைக் குறைப்பதும், விடுமுறை நாள்களை அதிகரிப்பதும் அவசியமானது. மக்கள் எதிர்ப்பு வெளிப்படும் இடங்களில் கடைகளைப் பூட்டுவதும், புதிய கடைகள் திறப்பதைக் குறைப்பதும் முக்கியமானது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே மதுபான விற்பனை, தொடர்ந்து உட்கொள்வோருக்கு "வரையறுக்குட்பட்ட அனுமதி' போன்ற முறைகளை அமல்படுத்தலாம்.

மது போதைக்கு அடிமையானவர்களை அரசு மருத்துவமனைகளில் தனி ஆலோசனை மற்றும் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி மருத்துவரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் கட்டாயம் மீட்கவேண்டும்.

அடுத்த தலைமுறையினரான பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகளை விளக்கி - சடங்குகளைப் போன்று அல்லாமல் - ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மதுபோதையின் தீமைகள் குறித்து வெளிப்படையான உரையாடல்களை நடத்த வேண்டும்.

பெரும்பாலானோரைக் குடிகாரர்களாக மாற்றிவிட்ட நிலையில், பூரண மதுவிலக்கை இங்கிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

பூரண மதுவிலக்கு மீண்டும் அமலுக்கு வந்து, குடிப்பதற்கு மக்கள் அஞ்சும் அளவுக்கு காவல்துறையும் அரசுத் துறைகளும் நடவடிக்கை எடுத்தால், தமிழர்களைக் காப்பாற்றிய பெருமை முதல்வருக்கு சேரும். பல தலைமுறைகளுக்கு அவர் வாழ்த்தப்படுவார். செய்வாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.