கனிவுடன் கடமையாற்றுவீர்
பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரிவிக்க இன்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமைகளில் பொதுமக்களைச் சந்திக்கிறார்.


பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரிவிக்க இன்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமைகளில் பொதுமக்களைச் சந்திக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் சந்திப்பு. இன்னொரு நாளில் பணி ஓய்வு பெற்றோர் சந்திப்பு. மாநகரங்களில் திங்கள்கிழமைகளில் மேயர் சந்திப்பு.
புதிய திட்டத்தில் வாரம் ஒரு நாள் ஓர் ஊரில் அந்தந்த வட்டாட்சியர்கள் ஊருக்கே சென்று குறைகேட்பு. ஒரு வார காலம் ஓர் ஊரில் ஆட்சியர், வருவாய் அலுவலர் குறைகேட்புகள். இவற்றைத் தாண்டி, தலைமைச் செயலகத்தில் குறைகேட்புக்கென டிஆர்ஓ நிலையிலான தனிப்பிரிவு. இவை எல்லாவற்றுக்கும் இமெயில் வசதிகள் வேறு.
இதற்கு மத்தியில் நீதிமன்றத்திலுள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு வேறு தனியே மனு வாங்கி, அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கிறது. இப்போது சமரசத் தீர்வுகள் என்ற பெயரில் பிரம்மாண்டமான விழாக்கள்வேறு நடைபெறுகின்றன. வழக்கான பிறகு, அதிகாரிகள் சமரசத் தீர்வில் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
என்னதான் பிரச்னை?
குறைகளுடன் அல்லது தேவைகளுடன் வரும் பொதுமக்களை முதல் முறையாக சந்திக்கும் அரசு அதிகாரியே அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்க வாய்ப்பிருந்தும் அல்லது நல்ல வழிகாட்ட வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் விட்டுவிடுவதுதான்.
தனியார் நிறுவனங்களில் சிறப்பான அதிகாரிகளாக வருவதற்கு முன்வைக்கும் முதல் ஆலோசனை- "எக்ஸ்ட்ரா மைலேஜ்'. அதாவது தனக்குண்டான பணியில் கூடுதல் சிரத்தை எடுத்து, கூடுதல் நேரத்தைச் செலவிட்டு, கூடுதல் கவனத்தைச் செலவிட வேண்டும் என்பதுதான்.
அரசுத் துறை அலுவலகங்களில் இந்த ஆலோசனையை முன்வைக்கவே முடியாது. எவ்வளவு பெரிய அதிகாரி சொன்னாலும் சரி கடைநிலை ஊழியர் - ஏன் அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவரேகூட - தனது வேலையைக் காட்டிவிடுவார். குறிப்பாக, வருவாய்த் துறையில் இந்தச் சங்கடங்கள் அதிகம்.
நாம் எழுப்பும் வினாக்கள் அப்பாவிகளான பொது மக்களுக்குப் புரியுமா? என்ற குறைந்தபட்ச திறன்கூட பல இளம் அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. தாமதம் ஆகும்- அது இயல்புதானே என்று தங்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக் கொண்டு, எளிய வேலைகளையும் சில பல நாள்கள் இழுத்தடித்தல் சரியா?
அதேபோல, தங்களுக்கு சில சமயங்களில் ஏற்படும் கோபத்தை வருவோர், போவோரிடமெல்லாம் காட்டுவது நலமா? "நாளைக்கு வா', "அடுத்த வாரம் வா' என்று துரத்திவிடும்போது, குறைகளுடன் வருவோருக்குரிய சிரமங்களை யோசித்துப் பார்க்க வேண்டாமா?
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டால், அதற்கப்புறம் அவருக்கு கீழுள்ளவர்களிடம் போகவே முடியாது. காய்ச்சி எடுத்துவிடுவார்கள். ஆவணங்களில் சுழித்துவிடுவார்கள்.
"இது வேண்டும்', "இப்படி வேண்டும்' எனக் கேட்டால், அதிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ளாமல், "எனக்கு தெரியாதா' என குரலை உயர்த்தும் அதிகாரிகள் பலர் உண்டு. தவறிருந்தால் யார் சொன்னால் என்ன? ஆலோசனை என்றால் யார் சொன்னால் என்ன? இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை.
இவற்றிற்கெல்லாம் காரணம் சக மனிதர் மீது அன்பு இல்லாததுதான். குறைகளுடன் வருபவர்களிடம் பெரும்பாலான அதிகாரிகள் கனிவுடன் பேசுவதே இல்லை. "என்ன பிரச்னை' என்று கனிவோடு கேட்பதே இல்லை. உடனே மனுவில் சீல் வைத்து "அடுத்த வாரம் வா' எனக் கூறுவோர் அதிகமாக இருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது தன்னுடைய கடமை என்பதை மறந்துவிடுகிறார்கள். அதைக் கூடுதல் பணியாக நினைப்பதுதான் பிரச்னை.
நிர்வாகத்தில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அதை மக்களிடம் காட்ட வேண்டியது ஏன்?
சிக்கல்களைச் சந்திப்பது என்பது, படித்து வேலைக்கு வந்த, அந்தப் பணிக்காக ஊதியம் பெறும் அவர்களுடைய வேலைதானே? இதனைப் புரிந்து கொண்டால் போதும். பிரச்னைகள் எல்லாமும் அவ்வப்போதே தீர்ந்துவிடும்.
கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு, சீல் வைக்க மறுநாள் வரச் சொல்லும் சம்பவங்கள் அரசு அலுவலகங்களில் நாள்தோறும் நடைபெறுகின்றன.
முதல் சந்திப்பிலேயே குறைகள் தீர்க்கப்பட்டால் இத்தனை மெனக்கெடுதல் மனுதாரர்களுக்கும் இல்லை; அதிகாரிகளுக்கும் இல்லை.
ஊதியக் கோரிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், இதுபோன்ற நியாயங்களையும் ஊழியர் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களிடம் முன்வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...