இதற்கா பெற்றோம் "பேச்சு' சுதந்திரம்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
அறத்துப்பால் வகையில், "அடக்கமுடைமை' என்ற அதிகாரத்தின் கீழ் அமையப்பெற்றுள்ள குறள் இது.
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும் என்பது குறளின் பொருளாகும்.
நாவைக் காக்க வேண்டும் என்பது இப்போது அல்ல... வள்ளுவன் காலத்திலேயே கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் ஒன்று.
இப்போதைய பிரச்னையே, அந்த நாவை மிகவும் முக்கியமாக அடக்கி ஆள வேண்டிய பல தலைவர்கள் அதனை அடக்கி ஆளாமல் விட்டுவிட்டனர் என்பதுதான்; அரசியல் தலைவர்களும், சமூக, ஆன்மிகத் தலைவர்களும் கூட, சமீபகாலங்களில் ஏடாகூடமாகப் பேசி பல ஏளனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகி, இறுதியாக மன்னிப்புக் கோரும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இன்று ஒரு தலைவர் விபரீதமாகவோ, மோசமாகவோ தனது கருத்தினை வெளிப்படுத்தினால், அது அன்றைய தலைப்புச் செய்தியாகி விடுகிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது.
இது இன்றோடு முடிந்துவிடும் செய்தி அல்லவே... தொடர்ந்து அதற்கான எதிர்ப்புகள், எதிர்ப்பினை வெளிப்படுத்தும் சந்திப்புகள், போராட்டங்கள், தன்னிலை விளக்கம் அளிக்க ஒரு சந்திப்பு என பல தொடர்புச் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கும். இறுதியாக, மோசமான கருத்தினை வெளியிட்ட தலைவர் செய்தியாளர்களை அழைத்து, "நான் கூறிய கருத்துகள் யாருடைய மனதையாவது புண்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்' என்று முடிப்பார்.
சில தலைவர்கள், "நான் சொன்ன கருத்து மீடியாக்களால் திரித்துக் கூறப்பட்டுவிட்டது' என்று ஒரு குண்டைத் தூக்கிச் செய்தியாளர்கள் தலையில் போடுவார். எது எப்படி இருந்தாலும் 3 அல்லது 4 நாள்களுக்கு சுவாரஸ்யமான செய்திகளுக்குப் பஞ்சம் இருக்காது. இந்த நிலை எப்போதாவது ஏற்பட்டுவந்த நிலை மாறி, தற்போது அடிக்கடி நிகழும் விஷயமாகிவிட்டது.
மைக்கைப் பிடித்து முதலில் பேச ஆரம்பிக்கும்போது இருக்கும் நடுக்கம், அடுத்தடுத்து கைத்தட்டல்களைக் கேட்ட பிறகு இல்லாமல் போய்விடுகிறது. இதில், பிரணாப் முகர்ஜியின் மகன் துவங்கி, நரேந்திர மோடி, வேணி பிரசாத் வர்மா, அஜித் பவார் என ஒரு பெரிய பட்டியலே உள்ளது.
இதில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சிக்கிக் கொண்டார். அமெரிக்காவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக இருக்கும் கமலா ஹாரிûஸப் பாராட்டும் போது, ""அமெரிக்காவிலேயே மிகவும் அழகான அட்டார்னி ஜெனரல் என்றால் அது கமலா ஹாரிஸ்தான்'' என்று கூறினார். இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. தனது கருத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டதை உணர்ந்த ஒபாமா, கமலா ஹாரிஸிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இப்படி நாவைக் காக்காமல், இறுதியாக மன்னிப்புக் கோரும் தலைவர்கள் அதிகமான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவும் தொடரப்பட்டுள்ளது. அதாவது, தலைவர்களின் மோசமான பேச்சுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், வெறுப்பினை ஏற்படுத்தும் பேச்சுகளைக் கட்டுப்படுத்த நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும், மகாராஷ்டிர, ஆந்திர மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோசமான பேச்சுகள் விவகாரம் உச்ச நீதிமன்றம் அளவுக்குச் சென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...