குப்பைக் கட்டுகளா விடைத்தாள்கள்?
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலைபற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்வுக்கு முன்பு பெற்றோர்கள் மட்டுமல்ல, இந்தச் சமூகமே அவர்களை போருக்குத்


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலைபற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்வுக்கு முன்பு பெற்றோர்கள் மட்டுமல்ல, இந்தச் சமூகமே அவர்களை போருக்குத் தயாரிப்பவர்களைப் போலத்தான் தயாரிக்கிறார்கள்.
பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்பைத் தாண்டி, தனிப் பயிற்சியையும் (டியூஷன்) தாண்டி, நாளிதழ்கள், வார இதழ்களில் வெளியாகும் மாதிரி கேள்வித்தாள்கள், மாதிரி கேள்வித் தாள்களை எல்லாம் தொகுத்து "சிறப்பு வெளியீடுகள்'... உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஆசிரியர்களின் நேரலை... இப்படியாக பொதுத்தேர்வுகள் பிரம்மாண்டமான போட்டிக் களத்தில் மாணவர்களைத் தள்ளுகின்றன.
இந்த நிலையில் இருந்துதான் மாணவர்களின் நிலையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், கல்வித்துறை அதே கவனத்துடன் - அக்கறையுடன் விடைத்தாள்களைப் பார்க்கிறதா என்றால், அண்மையில் வெளியாகும் செய்திகளும், கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களும் வருத்தத்தையே அளிக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து நகரப் பேருந்தில் ஏற்றிவிடப்பட்ட 262 மாணவர்களின் பிளஸ் 2 விடைத்தாள் கட்டு திருச்சி வந்து - வராமலேயே (!) காணாமல் போனது.
இதில் என்ன வழக்கம் என்றால், பேருந்தில் கட்டை ஏற்றிவிடுவார்கள். அந்தக் கட்டை, சத்திரம் பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் (வழக்கமான இடமாம்!) வீசியெறிவார்கள்! மலைபோல் குவிந்து கிடக்கும் (குப்பை போல...!) அந்த பார்சல்கள், ஏதாவதொரு நேரத்தில் வரும் அஞ்சலக வாகனத்தில் ஏற்றப்படும்.
இதில் ஒன்றுதான் காணாமல் போனது. காணவில்லை என்பதையே சில நாள்கள் கழித்துத்தான் கண்டுபிடித்தார்கள் என்பது வேறு விஷயம்!
இந்த ஆண்டு ரயிலில் விடைத்தாள் கட்டு காணாமல் போனது. யார் பொறுப்பு என்பதே பட்டிமன்றமானது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அஞ்சல் துறைப் பணியாளர் இரு கட்டுகளுடன் பேருந்தில் ஏறியிருக்கிறார். இறங்கும்போது ஒரு கட்டுதான் இருந்திருக்கிறது. பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஒரு வழியாக யார் மீதாவது பொறுப்பைத் திணித்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். பிறகு, மற்றொரு தாளின் மதிப்பெண்ணைக் கொண்டோ, அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்ணைக் கொண்டோ, அல்லது வாய்ப்பு கிட்டினால் மறுதேர்வு நடத்தியோ முடிக்கப்படும். ஆனால் கேள்வி அதுவல்ல. ஓராண்டாக மாணவர்கள் படாதபாடுபட்டு எழுதும் விடைத்தாள்களை இத்தனை கவனக்குறைவாகவா கையாள வேண்டும்?
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களவைக்கும், சட்டப் பேரவைக்கும், உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. வாக்குச்சீட்டுகள் அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட பெட்டிகள் எப்படி எடுத்துச் செல்லப்படுகின்றன என்று இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எல்லா வாக்குச்சாவடிகளிலும் சராசரியாக மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, பெட்டிகளை எடுத்துச் செல்ல சாவடிக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸôருடன் பெட்டிகள் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதிகபட்சம் அன்றிரவே உரிய வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
வாக்குப் பெட்டிக்கு மட்டும் இத்தனைப் பாதுகாப்பு, ஆண்டு முழுவதும் படித்து எழுதிய விடைத்தாள்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?
விடைத்தாள்களை கவனமாகச் சேகரித்து - பாதுகாப்பது என்பது கூடுதல் சுமை என்று நினைக்க வேண்டியதே இல்லை.
கடந்த காலங்களில் கல்வித்துறை இருந்த நிலை எல்லோருக்கும் தெரியும். பழங்காலத்து பச்சை ஜீப்புதான் கல்வித் துறை அதிகாரிகளுக்கு கரும்புகை கக்கிக் கொண்டே ஓடியது.
இப்போது அந்தப் பரிதாபங்கள் நீங்கியுள்ளன. புதுப்புது "பொலிரோ'க்களில் கல்வித் துறை அதிகாரிகள் செல்லும் நிலை வந்திருக்கிறது.
இன்னும் சில நூறு வாகனங்களை வாங்கி, மாவட்டங்களில் காலியாக உள்ள உதவிக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்பினால் போதும், வேறு எந்தத் துறையின் உதவியும் இன்றி விடைத்தாள்களைப் பாதுகாப்பாகச் சேகரிக்க முடியும். காவல்துறை உதவியைக் கோரிப்பெற்றால் இன்னும் பலம்.
தேர்வுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களின் கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால், மற்ற துறைகளைப் பயன்படுத்தினால் இந்தப் பணி இன்னும் சுலபம்.
தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் எத்தனை ரகசியமாக, பாதுகாப்பாக பிரித்து எடுத்துச் செல்லப்படுகிறது?
அதேபோன்றொரு முறையை ஏன் விடைத்தாள்களுக்கும் நடைமுறைப்படுத்தக் கூடாது? மாணவர்களின் உழைப்பைப் புரிந்து கொண்டால் இந்தச் செலவும், வேலையும் பெரியதல்லவே? ஏன் செய்யக் கூடாது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...