ஒபாமாவா, ரோம்னியா - ஆளப் போவது யார்?
ஜனநாயக நாட்டில் தேர்தல் காலம்தான் திருவிழா. நாடாளுமன்றம் எனும் கோவிலில் மூலவராகவும், உற்சவ மூர்த்தியாகவும், அதனைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகளாகவும் யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்கள்.


ஜனநாயக நாட்டில் தேர்தல் காலம்தான் திருவிழா. நாடாளுமன்றம் எனும் கோவிலில் மூலவராகவும், உற்சவ மூர்த்தியாகவும், அதனைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகளாகவும் யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்கள்.
ஜனநாயக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை சிறிது மாறுபட்டாலும், தேர்ந்தெடுப்பவர்கள் மக்கள்தான்.
சாதாரண நாடுகளிலேயே இந்த நிலை என்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவில் நடக்கும் தேர்தல் என்றால் கூடுதல் முக்கியத்துவம்தான். ஒரு நாட்டின் அதிபர் எடுக்கும் முடிவு நல்லதோ, கெட்டதோ அது பெரும்பாலும் அந்நாட்டுடன் முடிந்து விடும். ஆனால் அமெரிக்க அதிபர் என்றால் அப்படியல்ல; அவர் எடுக்கும் முடிவுகள் உலகின் தலையெழுத்தையே மாற்றவல்லது.
எனவே உலக நாடுகள் அனைத்தினாலும் ஆவலுடனும், சில நாடுகளால் சற்று அச்சத்துடனும் எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.
ஜனநாயகக் கட்சி சார்பில் இப்போதைய அதிபர் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி களமிறங்கியுள்ளார்.
துணை அதிபர் தேர்தலில் இப்போதைய துணை அதிபர் ஜோ பிடென், குடியரசுக் கட்சியின் பால் ரயானை எதிர்கொள்கிறார்.
வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நாளும் குறிக்கப்பட்டு விட்டது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமைதான் அங்கு தேர்தல் நடத்தப்படும். அதன்படி இப்போது நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர், துணை அதிபர் ஆகியோர் மறைமுகத் தேர்தல் முறையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். குடிமக்கள், வாக்காளர் குழுவுக்கான (எலெக்டோரல் காலேஜ்) உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். மாகாணம் வாரியாக இந்த வாக்காளர் குழு தேர்வு செய்யப்படுகிறது. மாகாண மக்கள்தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழுவுக்கான வாக்கு எண்ணிக்கை மாறும். பின்னர் இந்த வாக்காளர் குழுவினர் அதிபரையும், துணை அதிபரையும் தேர்வு செய்கின்றனர். இதுவே அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான நடைமுறை.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகால அவகாசம் கூட இல்லாத நிலையில், முதலில் ஒபாமாவின் கையே சிறிது ஓங்கியிருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வேட்பாளர்களின் நேரடி விவாதத்தில் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளினார் ரோம்னி.
உள்நாட்டுப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் ஒபாமாவின் நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஒபாமா பதிலளித்தாலும், அது எடுபடவில்லை என்பது இந்த நேரடி விவாதம் தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. விவாதத்தில் ரோம்னி சிறப்பாகச் செயல்பட்டதாகவே பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
விவாதத்தில் ஒபாமாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு அவரது பிரசார யுக்தியும் ஒரு காரணம். ஒபாமாவின் கொள்கைகள் அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து விட்டன. எனவே ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்பதை மையமாக வைத்து அமைந்துள்ளது ரோம்னியின் பிரசார முறை.
அதே நேரத்தில், அதிபராக ரோம்னிக்கு தகுதி உள்ளதா? அவருக்கான மதிப்பு என்ன? என்பதை மையமாகக் கொண்டு தனிப்பட்ட விமர்சனத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது ஒபாமாவின் பிரசாரம்.
லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒபாமாவுக்குப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
"ஒபாமா அதிபரான பின் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும், பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. எனவே, அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வெளியுறவுக் கொள்கையை மாற்ற தனக்கு ஆதரவு தரவேண்டும்' என்று ரோம்னி கூறியுள்ளது அமெரிக்க மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரண்டாவது நேரடி விவாதத்தில் வரிச் சீர்திருத்தம், குடியுரிமை, வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான ரோம்னியின் கொள்கைகளை ஒபாமா கடுமையாக விமர்சித்தார்.
ரோம்னியின் வெளிப்பணி ஒப்படைப்பு திட்டத்தில் இந்தியர்களும், சீனர்களும்தான் பயனடைவார்கள் என்ற ஒபாமாவின் குற்றச்சாட்டு எடுபட்டு, அவரது கை ஓங்கியுள்ளது.
அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைந்திருப்பது, முன்பு இருந்ததைவிட பொருளாதாரம் சற்று மேம்பட்டிருப்பது ஆகியவை ஒபாமாவுக்குச் சாதகமான அம்சம்.
கடந்த முறை, அமெரிக்க அதிபராகும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையுடன் ஒபாமா பதவியேற்றபோது அமெரிக்க மக்களிடம் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவை நிறைவேற்றப்படவில்லை என்பதே பொதுவான கருத்து.
இந்தத் தேர்தலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஆதரவையும் பெற்றுள்ளார் ரோம்னி. இந்தியாவுக்கும், தங்களுக்கும் ஆதரவாக ரோம்னி இருப்பார் என்பது அவர்களது நம்பிக்கை.
அயல்பணி ஒப்படைப்பு போன்ற விஷயங்களில், ஒபாமா இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் என்பதே இந்திய வம்சாவளியினரின் ஆதரவை அவர் இழக்கக் காரணம்.
அதே நேரத்தில் ஒபாமா மிகத்தீவிர ஆதரவாளர்களைப் பெற்றுள்ளார். பல்வேறு பிரச்னைகளைச் சமாளிப்பதில் ஒபாமா தோல்வியடைந்துவிட்டார் என்று குறை கூறப்பட்டாலும், அவ்வாறு குறை கூறுபவர்களே, ஒபாமா மீது தங்களுக்கு தனிப்பட்ட அபிமானம் உண்டு என்று கூறுவது அவரது பலம்.
அரசியல்வாதி என்பதைத் தவிர வெற்றிகரமான தொழிலதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் ரோம்னி. கடந்த முறை குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரோம்னி இழந்தார்.
எனினும் அவரை அதிர்ஷ்டக்கார அரசியல்வாதி என்று வர்ணிக்கும் அவரது ஆதரவாளர்கள், இந்த முறை வெற்றிபெற வேண்டும் என்பதால்தான் அவருக்குக் கடந்தமுறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
மொத்தம் 538 வாக்காளர் குழு வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார். கடந்த முறை ஒபாமா 365 வாக்காளர் குழு வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை வெற்றிக்காக அவர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
இப்போதைய சூழ்நி லையில் ரோம்னி, ஒபாமாவைவிட ஒரு படி பின்தங்கியிருந்தாலும், தேர்தலுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் இருப்பதால், முடிவு எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...