

கம்யூனிஸ்ட் தலைவர்களில் தனக்கென தனிக் கொள்கையை வகுத்தவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ். தனது உறுதியான அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையாலும், தடாலடி பேச்சுகளாலும் சர்வதேச அளவில் பிரபலமானவர்.
ஜெர்மானிய சோஷலிசவாதியான ஹெய்ன்ஸ் டெட்ரிச் அறிமுகப்படுத்திய 21-ம் நூற்றாண்டுக்கான சோஷலிஸக் கொள்கையைப் பின்பற்றி, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெனிசூலா அதிபராக 13 ஆண்டுகளாகத் தொடர்கிறார்.
சோஷலிஸவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், முதலாளித்துவத்தில் உள்ள பலனளிக்கும் விஷயங்களையும் அவர் தனது நிர்வாகத்தில் பின்பற்றுகிறார்.
சமமான வருமானப் பகிர்வு, பொருளாதாரச் சுதந்திரம், அரசியலில் ஊழல் ஒழிப்பு, பெரும் தொழில் நிறுவனங்களை தேசியமயமாக்கியது போன்ற நடவடிக்கைகள் மூலம் வெனிசூலாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, "வீழ்ந்தார் சாவேஸ்' என்று அவரை வெறுக்கும் ஏகாதிபத்திய நாடுகள் எண்ணியிருந்தன. ஆனால், கியூபா சென்று சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் பழைய உத்வேகத்தோடு நாடு திரும்பினார். இப்போது மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
வெனிசூலாவில் அக்டோபர் 7-ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவரே அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபராகத் தொடர்வார். சாவேஸýக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்றாலும், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் அவருக்கு நெருக்கடி உள்ளது.
வெனிசூலா ஐக்கிய சோஷலிஸக் கட்சி சார்பில் போட்டியிடும் சாவேûஸ எதிர்த்து மொத்தம் 6 பேர் களமிறங்கியுள்ளனர். இதில் ஐனநாயகக் கூட்டமைப்பு கூட்டணி வேட்பாளர் ஹென்றிக் கேபிரியல் முக்கியப் போட்டியாளர் ஆவார். மேயர், மாகாண ஆளுநர் பொறுப்புகளை வகித்தவர். வயதில் இளையவர், துடிப்பு மிக்கவர்.
தேர்தல் பிரசாரம் ஜூலை மாதமே தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் உச்ச நிலையில் உள்ளது. வழக்கமாக தேர்தலின்போது நடைபெறும் கட்சியினரின் மோதல்கள், தீ வைப்பு, போலீஸாரின் தடியடி போன்றவற்றுக்கும் குறைவில்லை.
ஹென்றிக் கேபிரியலின் பிரசார முறையால் முன்பு போன்ற அமோக வெற்றி தங்களுக்குக் கிடைக்காது என்ற அச்சத்தை சாவேஸ் ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வெனிசூலாவில், அதன் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் குறைத்து பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளார் சாவேஸ் என்று புள்ளிவிவரத்தோடு பிரசாரத்தில் இறங்கியுள்ளார் ஹென்றிக்.
சாவேஸின் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முடிவால் அன்னிய முதலீட்டாளர்கள் வெனிசூலாவுக்கு வர அச்சமடைகின்றனர் என்று குற்றம்சாட்டுகிறார் கேபிரியல். அதே நேரத்தில், சாவேஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களின் மீது கைவைக்க மாட்டேன் என்றும் உறுதி கூறி வருகிறார். இந்த வித்தியாசமான அணுகுமுறையால் மக்களைக் கவர்ந்துள்ளார்.
அரசு அதிகாரிகள் மீது அவர் வாசிக்கும் ஊழல் பட்டியலும், அவருக்குக் கூட்டத்தைச் சேர்த்து வருகிறது. இது சாவேஸ் கட்சியினரைத் திகைக்க வைத்துள்ளது.
தங்கள் தலைவரை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் சில நாடுகள் கேபிரியலின் பிரசாரத்துக்குப் பணம் கொடுக்கின்றன என்று சாவேஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டும் அதே நேரத்தில், நாட்டின் எண்ணெய் வளத்தில் கொள்ளையடித்த பணத்தில்தான் சாவேஸ் தேர்தல் செலவுகளைச் செய்கிறார் என்பது கேபிரியல் தரப்புக் குற்றச்சாட்டாக உள்ளது.
1998-ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் சாவேஸ் போட்டியிட்டபோது 56.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து அவரது செல்வாக்கு அதிகரித்தது. இதனால் 2000-ல் நடைபெற்ற தேர்தலில் 59.76 சதவீத வாக்குகளையும், 2006 தேர்தலில் 62.87 சதவீத வாக்குகளையும் பெற்று மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தலைவராக வலம் வந்தார்.
இப்போது நடைபெறும் தேர்தலில் இதைவிட அதிக வாக்குகளைப் பெற்று தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
புற்றுநோய்க்காக கியூபா சென்று கீமோதெரபி, லேசர் சிகிச்சை போன்றவற்றை மேற்கொண்ட சாவேஸ், இப்போதும் சில மாத இடைவெளியில் சிகிச்சை பெற்றுத்தான் வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டபோதிலும் தேர்தலில் அவர் போட்டியிடுவது மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார் சாவேஸ் என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு எந்த வகையான புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்பதை சாவேஸ் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அவரது நோய் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதும் இதுவரை மர்மமாகவே உள்ளது.
அவரது பிரசாரப் பயணமும் இதுவரை சூடுபிடிக்கவில்லை. அரசியல் பேச்சு என்றாலும், நடுவே பாடல்கள், நடனம் என்று அமர்க்களப்படுத்துவார். சில மணி நேரங்கள் அவரது பேச்சு நீடிக்கும். ஆனால், இப்போது டாக்டர்களின் ஆலோசனைப்படி சாவேஸ் தனது பிரசார நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் சாவேஸ் முன்னிலை வகித்தாலும், தேர்தல் நெருங்க நெருங்க அவருக்கான ஆதரவு குறைந்துதான் வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சாவேஸôல் இனி நாட்டைத் திறம்பட வழிநடத்த முடியாது என்ற எண்ணமும், தனக்கு அடுத்ததாக நாட்டையும், கட்சியையும் வழி நடத்த பெரிய அளவில் யாரையும் அவர் தயார்படுத்தவில்லை அல்லது தயார்படுத்த விரும்பவில்லை என்ற சிறிய அளவிலான அவநம்பிக்கையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டதே இதற்குக் காரணம்.
எகிப்து, லிபியா, டுனீசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து அவர்களை அகற்றி வரும் வேளையில், 13 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும் வெனிசூலாவில் இப்போதும் மக்கள் தலைவராக சாவேஸ் வலம் வருவதற்கு, நாட்டு நலனுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
பொதுவாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தாலே ஆட்சியாளர்கள் மீது பொதுவான எதிர்ப்பு ஏற்படுவது இயற்கை. இதில் 13 ஆண்டுகளாக அதிபராகத் தொடரும்போது மக்களில் சிலருக்கு அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான்.
இப்போதைய நிலையில் சாவேஸ் எதிர்த்துப் போராட வேண்டிய முக்கிய எதிரி அவரது உடலிலேயே ஒட்டியிருக்கும் புற்று நோய்தான். எதிர்க்கட்சியினரை மக்களே பார்த்துக் கொள்வார்கள் என்பது அவரது தீவிர ஆதரவாளர்களின் கோஷமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

