"தரை தட்டாத' தேசக் கப்பல்!
நம்மையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்திய "நிலம்' புயல் கடந்த அக்டோபர் 31 ஆம் நாள் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று சுற்றிச் சுழன்று வீசியது.


நம்மையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்திய "நிலம்' புயல் கடந்த அக்டோபர் 31 ஆம் நாள் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று சுற்றிச் சுழன்று வீசியது.
கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைத் துறைமுகத்தில் நின்ற 23 சரக்குக் கப்பல்கள் அவசரம் அவசரமாக நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன.
சென்னைத் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் இறக்குவதற்காக மும்பையில் இருந்து "பிரதிபா காவேரி' என்ற சரக்குக் கப்பல் வந்தது. சரக்குகளை இறக்கிவிட்டு எரிபொருள் இல்லாமையால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தது.
புயல் மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாக அந்தக் கப்பலின் நங்கூரம் அறுந்தது. கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து கப்பல் கரையை நோக்கி படிப்படியாக இழுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டி நின்றது. இக் கப்பலை மீட்கும் பணி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த "ஸ்மிட்' என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடுமையான முயற்சிக்குப் பிறகு இக்கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டு நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரதிபா காவேரி கப்பல் பற்றி மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரி கெüதம் சட்டர்ஜி தலைமையில் குழு விசாரணை நடத்தியது. இதில் கப்பலுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் அக்டோபர் முதல் நாளுடன் காலாவதியாகிவிட்டது என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தக் கப்பல் பயணத்துக்குத் தகுதியற்றதாக இருந்துள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அவ்வப்போது செய்தியாளர்களை நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று, புயலில் சிக்கியவர்களை மீட்பதுபற்றி செயல்விளக்கம் செய்து காட்டுவது வழக்கம். ஆனால் கண்ணெதிரில் நடந்த கோர நிகழ்வில் 6 பேர் பலியானபோது, செயல்விளக்கத்தின்போது காட்டப்பட்ட ஆர்வம் உண்மையில் இல்லாமல் போனது எப்படி?
மும்பையில் உள்ள கடல்சார் வாணிபத் துறை உயர் அதிகாரி கூறுகையில், "விபத்தில் சிக்கிய இக்கப்பலின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து வந்தோம், ஆனால் கப்பல் நிறுவனத்தினர் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி காலம் கடத்தி வந்தனர். அதனால் ஆய்வு செய்ய முடியவில்லை' என்று கூறியுள்ளார்.
இதற்கு என்ன காரணம்? கப்பல் நிறுவனத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாலேயே ஆய்வு செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த "பிரதிபா ஷிப்பிங் கம்பெனி லிட்.' என்ற நிறுவனத்துக்கு இப்போது 8 எண்ணெய்க் கப்பல்கள் இருக்கின்றன. தரை தட்டிய "எம்.டி. பிரதிபா காவேரி' என்ற கப்பலில் பணியாற்றியவர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. மற்றொரு கப்பலான "பிரதிபா வருணா' என்ற எண்ணெய்க் கப்பல், ஊழியர்களின் ஊதிய பாக்கிக்காக சென்னைத் துறைமுகம் அருகே கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என ஊழியர்கள் சார்பாக புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இங்கு பணியாற்றும் 29 ஊழியர்களுக்கு கடந்த ஜூலை முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையில் அக்டோபர் 13 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும்வரை கப்பலைச் சென்னையை விட்டு கொண்டு செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தனியார் கப்பல் கம்பெனிகள்தாம் இவ்வாறு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமலும், உரிமம் இல்லாமலும் ஊழலின் மொத்த உருவமாக இருப்பதாக எண்ண வேண்டாம். தனியார் விமான நிறுவனங்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு கிங்ஃபிஷர் விமான நிறுவனம் மறக்க முடியாத ஒரு சான்றாகும்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்குக் கடன் சுமை ரூ.7,524 கோடியாகும். இந் நிறுவனத்துக்குச் சொந்தமாக 10 விமானங்கள் இருக்கின்றன. ஓர் ஆண்டுக்கு முன் 66 விமானங்களை இந்த நிறுவனம் இயக்கி வந்தது.
விமான பைலட், பொறியாளர் மற்றும் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் நாளிலிருந்து விமான நிறுவனம் கதவடைப்பு அறிவித்துள்ளது.
நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக உரிய திட்டங்கள் மற்றும் நிதிநிலையை மேம்படுத்துவது பற்றி எவ்வித அறிக்கையையும் நிறுவனம் அளிக்கவில்லை. இதனால் கிங்ஃபிஷர் விமானங்கள் பறப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்நிறுவனம் அனைத்து விமானங்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது.
"பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே விமானங்கள் பறப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத்சிங் கூறியுள்ளார். அக்டோபர் முதல் நாளிலிருந்து நிர்வாகம் கதவடைப்பு அறிவித்துள்ளதால் அந்நிறுவன விமானங்கள் பராமரிக்கப்படவில்லை என்றும், விமானத்தைப் பராமரிக்கும் பொறியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்களின் பறக்கும் திறன் பற்றிய ஐயம் எழுவது இயற்கை என்றும் உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
இந்த விமான சேவையை நம்பி முன்பதிவு செய்துவிட்டுத் தவிக்கும் பயணிகளைப் பற்றி விமான நிறுவனமோ, மத்திய அரசாங்கமோ கவலைப்படவில்லை. பல மாதங்களாக ஊதியம் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் விமானப் பணியாளர்களைப் பற்றியும் யாரும் வாயைத் திறக்கவில்லை.
விமானப் போக்குவரத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் மத்திய அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப் போகிறது? உலகமயம் என்ற பெயரால் தனியார் மயமே நாட்டை உயர்த்தும் என்றும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் என்றும் கூறி வருகிறவர்கள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைக்கும், ஊதியத்துக்கும், உயிர்களுக்கும் உத்தரவாதம் தர வேண்டாமா?
"தரை தட்டிய கப்பலை' மீட்கும் பணியில் சென்னைத் துறைமுக நிர்வாகம், கடல்சார் வாணிபத் துறை, பிரதிபா கப்பல் நிறுவனம், கடலோரக் காவல் படை உள்ளிட்டவைகளின் உயர் அதிகாரிகள் கடுமையாக ஈடுபட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் புயல் அடிக்கும்போது, அலைகளில் சிக்கிக் கொண்டு கப்பல் கேப்டன் அபயக்குரல் எழுப்பியபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில் உயிர் காக்கும் படகு மூலம் தப்பிக்க முயன்ற 22 பேரில் 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் மற்றும் இந்தியக் கடற்படையின் அலுவலகமான ஐ.என்.எஸ். அடையாறும் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே இந் நிகழ்வு நடந்துள்ளது என்பதை அறியும்போது அதிர்ச்சியாகவே இருக்கிறது. மீட்கப்பட்ட 16 பேரில் 5 பேர் மட்டும் தானாகவே நீந்திக் கரையை அடைந்துள்ளனர். மீதி 11 பேரை மனிதநேயமிக்க மீனவர்கள்தாம் காப்பாற்றியுள்ளனர்.
இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் கண்டுகொள்ளாத கடலோரக் காவல் படை இப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்பது வேதனைக்குரியது. நாட்டின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கடற்படையும், கடலோரக் காவல்படையும் ஆபத்துக் காலத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டாமா? சில குறிப்பிட்ட நாள்களில் கடலில் சாகச நிகழ்ச்சிகளை நடத்துவது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்குத்தானா?
இப்போது தரைதட்டி மீட்கப்பட்ட கப்பல், கடலில் பயணம் செய்வதற்கான தகுதியில்லாதது. எனினும் அந்தக் கப்பல் சரக்கை ஏற்றி வர அனுமதிக்கப்பட்டது ஏன்? "பயணத்துக்குத் தகுதியில்லாத கப்பலை இயக்க அனுமதித்து, இப்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் அந்தக் கப்பலை இங்கிருந்து இழுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது' என உயர்நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.
இந்த நாட்டில் முறைகேடுகளே முறையாக இருக்கின்றன. முறைகளை மீறுவதும் "ஒரு முறையாகவே' இருக்கிறது. இதனை மாற்றியமைப்பதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் அடிக்கடி அமைச்சரவையை மாற்றியமைப்பதால் என்ன பயன் ஏற்படும்?
அமைச்சரவையை மாற்றியமைத்த பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பது நமக்கும் கவலையளிப்பதாக இருக்கிறது. அவர் பேசியது என்ன தெரியுமா? ""குறிப்பாக நமது நிதிப் பற்றாக்குறை பெருகி வருவது கவலையளிப்பதாக அமைந்துள்ளது'' என்பதே அது.
கவலையளிக்கக் கூடிய காரியங்களைச் செய்துவிட்டு கவலைப்படுவதால் பயன் என்ன? கவலைப்படுவதால் கவலைகள் தீர்ந்து விடுமானால் கவலைப்படலாம். கவலைகளே தேசத்தை முன்னேற்றி விடுமா? நிதிப் பற்றாக்குறையைப் போக்கி விடுமா?
தேசத்தின் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்தும் அதனை மீட்டுவர அக்கறையில்லை; இந்திய வங்கிகளில் உள்ள "வாராக் கடனை' வசூலிக்கத் திட்டமில்லை; அரசாங்கக் கருவூலத்துக்கு வரவேண்டிய பணமெல்லாம் ஊழலின் காரணமாக ஓடி ஒளிவதைத் தடுக்க மனமில்லை; பிறகு நிதிப் பற்றாக்குறை பற்றிக் கவலைப்படுவதாகக் கூறுவது அரசியல் நாடகம்தானே! வாக்களித்த மக்களின் மானியங்களை வெட்டுவதற்கு மட்டும் திட்டங்கள் தாமதமின்றித் தீட்டப்படுகின்றன.
"தரை தட்டிய' கப்பலை நினைக்கும் போதெல்லாம் "தரை தட்டாத' (நிர்வாகக்) கப்பலான தேசத்தின் நிலைதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கப்பல் ஊழல் புயலில் சிக்கி தரை தட்டாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை ஏற்படுகிறது. தரைதட்டினால் அந்தக் கப்பலை மீட்டு விடலாம்; இந்தக் கப்பலை மீட்க முடியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...