சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மின்சாரப் பற்றாக்குறை - ஏன் இல்லை விழிப்புணர்வு?

மின் சேமிப்புப் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சேமிப்புப் பற்றிய பட்டிமன்றம் ஒன்றில் பேசியுள்ளது பற்றிய

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:40 pm

ஜோதிர்லதா கிரிஜா

மின் சேமிப்புப் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சேமிப்புப் பற்றிய பட்டிமன்றம் ஒன்றில் பேசியுள்ளது பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.

 இந்த விழிப்புணர்வை மாணவர்களிடம் மட்டும் ஏற்படுத்திவிட்டால் ஆயிற்றா? மின்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் யாவருமே விழிப்புணர்வோடுதான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்களாமா? மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முன்னால், உடனடியாய்ச் செயல்படுத்தப்பட வேண்டிய பணி ஒன்று உள்ளது.

 மின்துறை அமைச்சர் உள்பட, அத்துறை சார்ந்த மேல்மட்ட அலுவலர்கள் காலை சுமார் 6 அல்லது 7 மணியளவிலும், மாலையில் சுமார் 6 மணியளவிலும் நகர்வலம் சென்று, மின்துறை வேலை செய்யும் லட்சணத்தைக் கவனித்ததோ, சோதித்துப் பார்த்ததோ உண்டா? உடனடியாய் இதைச் செய்தால் திடுக்கிட்டுப் போவார்கள்.

 கோடைகாலத்தில் அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கிழக்கு வெளுத்துத் தெருக்களில் நல்ல வெளிச்சம் வரத் தொடங்கி விடுகிறது. ஆனால், மின்துறை ஊழியர்கள் ஏழு மணிக்குப் பிறகும் நகரில் பல இடங்களில் தெருவிளக்குகளை அணைப்பதே கிடையாது. மற்றும் சில பகுதிகளில் அவை அணைக்கப்படுவதே இல்லை என்பதும், பட்டப்பகலிலும் அவை எரிந்தவண்ணம் இருக்கின்றன என்பதுமே உண்மை.

 தெரு ஓரங்களில் சிறுநீர் கழிப்பதையும், நடுத் தெருக்களிலும் கூடக் கோழையைத் துப்புவதையும், வாழைப்பழத் தோல்களை நடைபாதைகளில் வீசுவதையும் பொறுப்பின்றிச் செய்துவரும் நம் மக்களுக்குப் பொதுநல உணர்வு மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், பொழுது விடிந்த பிறகும் தெரு விளக்குகள் வீணாய் எரிந்துகொண்டிருப்பதையும், இதனால், நம் மின் சேமிப்புக் குறைவது பற்றியும் கவலை எங்கே வரப்போகிறது?

 எனினும், அவ்வாறு கவலைப்படும் ஒரு சிலர் மின்துறை அலுவலகத்தோடு தொலைபேசி வாயிலாய்த் தொடர்பு கொண்டால், எந்த ஊழியர் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொல்லுகிறார்? தொலைபேசிபாட்டுக்கு மணியடித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் அல்லது ஒலிவாங்கியை எடுத்து அருகே மல்லாத்திவிட்டு, அந்த ஊழியர் தாமும் மல்லாந்து நாற்காலியில் சாய்ந்து குறட்டை விட்டுக்கொண்டிருப்பார். மணியடித்தால் உறக்கம் கலைந்து விடுமே அதற்காகத்தான்.

 நாம் தொலைபேசியை இயக்கினால் அது பயன்பாட்டில் இருப்பதற்கான ஒலிதானே நம் காதைக் குடையும் (இவ்வாறு நாம் எழுதுவது மிகையன்று. தொடர்ந்து பயன்பாட்டு ஒலியே வந்து கொண்டிருந்ததால், எங்கள் உறவினர் ஒருவர் நேரில் சென்று கண்டறிந்த உண்மையாகும்.) அதற்காக, எல்லா மின்துறை ஊழியர்களுமே, எப்போதும் இவ்வாறு செய்வார்கள் என்று சொல்ல வரவில்லை.

 பல நாள்களுக்கு முன்னர் ஒரு நாளில், எங்கள் பகுதியில் பகல் 11 மணிக்குத் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததைக் காண நேர்ந்த நாங்கள் மின்துறை அலுவலகத்தோடு தொடர்புகொண்டு பேசினால், "அது எங்கள் வேலையல்ல. அது சென்னை மாநகராட்சியின் வேலை. அங்கே பேசுங்கள்' என்று பதில் சொன்னார்கள்.

 "ஏன் நீங்களும் மின் துறை ஊழியர்தானே? இவ்வாறு புகார் வந்துள்ளதை நீங்களே அவர்களுக்குத் தெரிவிக்கக் கூடாதா?' என்று கேட்டால், "அது எங்கள் வேலையல்ல' என்று பதில் வந்தது.

 "சரி, அவர்களது தொலைபேசி இலக்கத்தையாவது கொடுங்கள்', என்றபோது, "தொலைபேசி வழிகாட்டியைப் பாருங்கள்' என்கிற பதிலுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 தெருவிளக்குகளை ஏற்றும் நேரம், அவற்றை அணைக்கும் நேரம் ஆகியவை குளிர்காலத்துக்கு ஒன்றாகவும், கோடைகாலத்துக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாமா?

 இந்த அற்ப விஷயம் கூடவா மின் துறை அலுவலர்களுக்குத் தெரியாதா? அப்படி ஒரு விதி இருந்தும் அந்த இலாகாவின் ஊழியர்களின் பொறுப்பின்மையாலோ அல்லது மெத்தனத்தாலோ காலங்காலமாக இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு வேதனையான விஷயம்.

 அடுத்து, அரசு அலுவலகங்களில், மின்சாரத்தைச் சிக்கனமாய்ப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை.

 ஓர் அலுவலகம் தொடங்குவதற்கு முன் அதைக் கூட்டிப் பெருக்கும் துடைக்கும் ஊழியர்கள் காலை ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் வந்து அத்தனை விளக்குகளையும் ஏற்றி மின்விசிறிகளையும் சுழலவிட்டு விடுவார்கள்.

 தங்கள் வேலை முடிந்ததும் அவற்றை அணைக்க வேண்டும் என்கிற ஞாபகம் மட்டும் இவர்களுக்கு வருவதே இல்லை. அலுவலகம் தொடங்கும் வரையில் அவை வீணாய் இயங்கிக் கொண்டிருக்கும். எவ்வளவு விரயம்?

 தமது அறையை விட்டு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று தம் மேலதிகாரிகளைப் பார்க்கவோ அல்லது கலந்தாலோசித்தலுக்கோ செல்லும் அலுவலர்களும்கூடப் பொறுப்பற்றவர்களே.

 அவர்கள் தங்கள் அறைகளுக்குத் திரும்பி வரும் வரையில் அவை இயங்கிக் கொண்டிருக்கும். (முதலமைச்சரைக் காணச் செல்லும் அமைச்சர்களே கூட இவ்வாறு செய்துகொண்டிருக்கக்கூடும்)

 சாப்பாட்டு இடைவேளையின்போது, கிட்டத்தட்ட காலியாகிவிடும் அத்தனை அறைகளிலும், பிரிவுகளிலும் மின்விசிறிகள் சுழன்று கொண்டிருக்கும். ஆனால், தனியார்துறை அலுவலகங்களில் இந்த அளவுக்கு மெத்தனம் இருக்காதென்றே தோன்றுகிறது.

 அடுத்து, பொதுமக்களாகிய நம் வீடுகளை எடுத்துக் கொண்டால், நாம் மட்டும் என்ன வாழ்ந்தோம் என்றுதான் கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.

 ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குப் போகும் முன்போ அல்லது கழிவறைக்குப் போகும் முன்போ, நம்மில் பலர் மின்விசிறியையோ விளக்கையோ நிறுத்துவதில்லை. இதோதான் வந்துவிடப்போகிறோமே என்கிற சோம்பேறித்தனமும் மெத்தனமுமே இதற்குக் காரணங்கள்.

 இப்படி ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வீட்டிலும் நாள்தோறும் செய்துகொண்டிருப்பதால், எவ்வளவு மின்சாரம் வீணாகிறது?

 கடைசியாக, அரசு விழாக்கள், கூட்டங்கள் இவற்றின் போதெல்லாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வீணடிக்கப்படுகிறது?

 இனி இரவுக் கூட்டங்கள் கூடாவென்று அரசு ஓர் ஆணை பிறப்பித்தால் என்ன? இத்தகைய கூட்டங்கள் விடுமுறை நாள்களில் மாலை ஆறு மணிக்குள் முடியுமாறு நடத்தப்பட்டால்தான் என்ன?

 இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோமே தவிர, ஒரு சுதந்திர நாட்டின் பிரஜைகளுக்கு சில கடமைகள் உண்டு என்பதை உணர்வதே இல்லை.

 மின்சாரத்தைச் சேமிப்பதாக இருந்தாலும், தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்வதாக இருந்தாலும், பெட்ரோல், டீசலில் சிக்கனமாக இருந்தாலும் அதை நாம் தனிநபர் தொடர்புடையதாகக் கருதுகிறோமே தவிர, தேசிய சேமிப்பாகக் கருதும் உணர்வு நம்மில் யாருக்குமே ஏற்படுவதில்லை. உணவை வீணாக்குவதும்கூட, வறுமைக் கோட்டுக்குக் கீழே பெருவாரியான மக்கள் வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாட்டில் எவ்வளவு பெரிய தவறு? இதை உணர்ந்து நடக்க நமக்குச் சொல்லித்தரப்படவே இல்லையே...

 மின் பற்றாக்குறைக்கு நாம் அனைவருமே காரணம் என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உண்மை மட்டும் நமது மனசாட்சியைச் சுடுவதில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.