நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விந்தைய இந்தியா விந்திய மலைக்கு மேல்

காற்றலை மாளிகை, ஹவா மெஹல் ஜெய்ப்பூரில் உள்ளது. 17-ம் நூற்றாண்டில் செüஹான் என்ற மன்னரால் வடிவமைக்கப்பட்டது. உள்புறம் பளிங்கு இழைக்கப்பட்டு வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. "காற்றிடை வெளிக் கண்ணம்மா உந்தன்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:42 pm

ஆர். நட​ராஜ்

காற்றலை மாளிகை, ஹவா மெஹல் ஜெய்ப்பூரில் உள்ளது. 17-ம் நூற்றாண்டில் செüஹான் என்ற மன்னரால் வடிவமைக்கப்பட்டது. உள்புறம் பளிங்கு இழைக்கப்பட்டு வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. "காற்றிடை வெளிக் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்' என்ற பாடலை பாரதி இந்த மஹால் உள்ளேதான் புனைந்திருக்க வேண்டும்.

 ஜில்லென்ற காற்று புக உதவும் சுவரில் சிறு சல்லடை கற்கள். வெளியில் எவ்வளவு வெப்பம் இருந்தாலும் உள்ளே தெரியாது. ஜெய்ப்பூர், ஆஜ்மீர், ஜோத்பூர், உதய்ப்பூர், சித்தோட், ஜெய்சல்மார், பரத்பூர் என்று பல முக்கிய இடங்களில் உள்ள மகாராஜாக்களின் மாளிகைகள், கோட்டைகள் எல்லாம் சுற்றுலாத்தலங்களாகவும், அரசுக்கு வருவாய் ஈட்டும் மையங்களாகவும் உருவாகியுள்ளன.

 இந்தியா ஒரு விந்தை உலகம். வடநாட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகக் கருதப்படும் மாநிலங்கள் காஷ்மீர், ஹிமாசலப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி. இதுதவிர உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள சில இடங்கள் மட்டுமே. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த இடங்கள்தான் அதிகமாகப் பரிச்சயம். இவைதான் விந்தை இந்திய உலகம் என்ற அளவில் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன.

 விந்திய மலையின் தெற்கில் உள்ள மாநிலங்களில் கேரளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள சிறப்பான சரித்திரப்புகழ் மற்றும் இயற்கைச் சூழல் கொண்ட இடங்களுக்குப் பெரும் அளவில் வெளிநாட்டுப் பயணிகள் வருவதில்லை.

 ஒரு காரணம் நிச்சயமாகத் தெரிகிறது. வடஇந்தியச் சுற்றுலாத்தலங்களுக்குக் கொடுக்கப்படும் விளம்பரம், தென் மாநிலங்களுக்கு அதிலும் தமிழகத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது தெளிவு. வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்படும் கலை நிகழ்ச்சிகளிலும் வட இந்தியக் கலைஞர்கள் அதிகமாகச் சென்று விடுகிறார்கள். தில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால்தான் இந்த செüகரியம். அதிக அளவில் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது. தில்லியைப் பற்றிக் கூறும் முதுமொழி: "இந்தியா என்றால் தில்லி; ஏனைய இந்தியாதான் பாரதம்' எவ்வளவு உண்மை!

 சுற்றுலா பயணிகள் வருகை இரண்டு ஆண்டுகளாக சுமார் 20 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. 2011-ல் 62.9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். அதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டவர் அதிகமாக வந்துள்ளனர். 2016-ல் வெளிநாட்டவர் வருகை 1 கோடியே 12 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மாநிலங்களை எடுத்துக்கொண்டால் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தில்லி மாநிலங்களுக்கு அதிக அளவில் வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.

 வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு விசா வாங்கி வருபவர்கள் சுற்றுலா, மருத்துவச் சிகிச்சை, கல்வி கற்பதற்கு, வேலை நிமித்தமாக, வணிகத்துக்காக என்று பல காரணங்களுக்காக வரலாம். வெறும் சுற்றுலாவுக்காக வரும் பயணிகளைக் கவரும் விதத்தில் ஒவ்வொரு மாநிலமும் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

 சுற்றுலா வருவாய் ஈட்டும் வர்த்தகம் மட்டுமல்ல, முழுமையான தொழிலாகவும் கருதப்படுகிறது. எவ்வாறு ஒரு தொழிற்சாலை நிர்வகிக்கப்படுகிறதோ அந்தவகையில் எந்தப் பொருளைத் தயார் செய்வது, அதற்கு மூலப்பொருளைக் கொண்டு வருதல், உற்பத்தியை நுண்ணிய நூதன முறையில் பெருக்குதல், முடிவாக சிறப்பான வழியில் அறிவுபூர்வமாக விற்பனை செய்தல். இவை எல்லாம் சுற்றுலாவுக்கும் பொருந்தும்.

 மூலப்பொருளான சுற்றுலாத்தலங்களுக்குப் புராதனமான பொக்கிஷங்கள் நமது நாட்டில் குறைவில்லை. அதுவும் தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு இருக்கிறது.

 "இறைவனின் குடில்' என்று கேரளம் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறது. அந்தக் கொள்ளை இயற்கை அழகு, மேற்கு மலைத்தொடர்ச்சியை கேரளத்தோடு எல்லையாகக் கொண்ட தமிழகத்திலும் உள்ளது. அதுமட்டுமல்லாது, இறைவன் குடி இருக்கும் கவின்மிகு கோயில்கள் கணக்கிலடங்காது. தஞ்சை, நாகையில் உள்ள கோயில்கள், வழிபாட்டுத்தலங்களை வழிபடுவதற்கு ஆண்டவன் விரைவு ரயில் வண்டி விடப்படுகிறது. ஆனால், அந்தக் கோயில்களின் பராமரிப்பு இன்னும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 திருவண்ணாமலை, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், நாகூர், வேளாங்கண்ணி, காஞ்சிபுரம், சிதம்பரம் போன்ற பிரதான வழிபாட்டுத் தலங்களில் சுற்றுலா வசதியை பெருமளவுக்கு உயர்த்த வாய்ப்புள்ளது.

 தமிழ்நாட்டிலிருந்து அயல் பணிக்காகச் சென்றவர் மட்டுமல்லாது, பல அயல்நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவளியினர் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களைத் தரிசிக்க ஆவலாக இருப்பார்கள். அவர்களுக்கு கோயில் தரிசன சுற்றுலா ஏற்பாடு செய்தாலே சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 இளைஞர்கள்தான் சினிமா அரங்குகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இளமை துடிப்பான படம் தயாரிக்க வேண்டியிருக்கிறது என்று படத் தயாரிப்பாளர்களின் விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம்.

 அதேபோல் இளைஞர்களைக் கவரும் வண்ணம் சுற்றுலா விளையாட்டு மையங்கள், நூதன விளையாட்டுப் போட்டிகள், சாகச விளையாட்டுகள் போன்றவை தோற்றுவிப்பதற்கு உகந்த இடம் தமிழகம். நல்லவேளை ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு காப்பாற்றப்பட்டுவிட்டது. ஆயிரம் கிலோமீட்டர் நீளம் அழகான கடற்கரை கொண்ட நாடு தமிழகம். தண்ணீர் சறுக்கல், பாராக்ளைடிங், சொகுசுக் கப்பல் பயணம் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் அனுபவமுள்ள தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 மேலை நாடுகளில், ஏன் பல ஆசிய நாடுகளில் சிறு சிறு இடங்களையும் மெருகேற்றி, விளம்பரப்படுத்தி நுழைவுக் கட்டணம் வைத்து பிரபலமடையச் செய்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளும் புற்றீசல்போல குவிகிறார்கள்.

 நமது நாட்டில் பழைமையான, புராதனமான, சுவாரசியமான, சரித்திரப் புகழ் வாய்ந்த பல முக்கிய இடங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியாகப் பராமரித்து விளம்பரப்படுத்தினால் நிச்சயமாக அந்த இடங்களுக்குப் பயணிகள் வருவார்கள். உள்ளூர் மக்களின் சிறு தொழில்கள் முன்னேற்றமடையும். அவர்களது வருமானம் பொருளாதாரம் பெருகும்.

 சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. முக்கியமாக வழிபாட்டுத்தலங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், "ஜான் ஏறினால் முழம் சறுக்கல்' என்று மக்கள் மீண்டும் அசுத்தப்படுத்தி விடுகிறார்களே! அதற்கு முற்றுப்புள்ளி எப்போது வருமோ? சாக்பீஸôல் எழுதுவது, கரித்துண்டால் சுவர்களில் காதல் செய்திகளைப் பதிவு செய்வது போன்ற வக்கிரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

 சென்னைக்கு அருகில் இருக்கும் மாமல்லபுரம் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளைக் கவருகிறது. சுமார் 300 வெளிநாட்டவர் ஒவ்வோராண்டும் டிசம்பர், ஜனவரி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து கண்டு களிக்கின்றனர். ஆண்டில் சுமார் 32 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் கரையோர சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களைக் காண வருகின்றனர்.

 சிதம்பரம் நடராஜர் ஆலயம் பிரசித்தி பெற்றது. கோயில் என்றாலே அது சிதம்பரம் கனகசபையைத்தான் குறிக்கும். அங்கு ஆண்டுதோறும் சிறப்பாக நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகமும் தனிநபர் அறக்கட்டளையும் இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி சுமார் ஒரு வாரம் நடைபெறுகிறது. இதை மேலும் சிறப்பாக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஏற்பாடு செய்ய முடியும்.

 எவ்வாறு கர்நாடக சங்கீதத்துக்கு திருவையாற்றில் இசை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறதோ, அதேபோல் சிதம்பரத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற சுற்றுலாத்துறை முன்னின்று முயற்சி எடுக்க வேண்டும்.

 சுற்றுலாத்துறையின் தகவல்படி 2011-ல் 33.08 லட்சம் வெளிநாட்டுப்பயணிகள் தமிழகம் வந்தனர். 2010-ம் ஆண்டு 28.04 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்தனர். உள்நாட்டுப் பயணிகள் வருகை 2011-ல் 13.87 கோடி. 2010-ல் 10.30 கோடி. உள்நாட்டுப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகமாகியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலையைப்பற்றி வேடிக்கையாகக் கூறப்படுவது: வெப்பம், மிக வெப்பம், அதி வெப்பம். இதில் செüகரியம் என்னவென்றால், வருடத்தில் எல்லா நாள்களிலும் பயணிக்கலாம். கடும் குளிரோ, அடாத மழையோ குறுக்கிடாது. வரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் விபசாரம், குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் ஈடுபடுத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடக் கூடாது என்பதிலும் கவனம் தேவை.

 கோவா, மங்களூர் போன்ற கடற்கரைப் பகுதிகளில் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த கொடூரன் குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்துக்காக வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது.

 பாதுகாப்பு ஒருபுறம். சுற்றுலாத்தலங்களில் குற்றங்கள் நடவாமல் கண்காணிப்பது. இவற்றை நிறைவேற்ற சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர்களை அமர்த்த வேண்டும். சமீபத்தில் நார்வே நாட்டு ஆண்-பெண் இருவர் மாமல்லபுரத்தில் தங்கியிருக்கும்பொழுது சண்டைச் சச்சரவு செய்து பெண் கொல்லப்பட்டார் என்பது வருத்தத்துக்குரியது.

 இம்மாதிரி வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு உதவும் வகையில் சுற்றுலா போலீஸôர் ரோந்து சென்றால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். இராமேஸ்வரத்தில் சுற்றுலா போலீஸ் என்ற அமைப்பை அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. இத்தகைய முயற்சிகள் சுற்றுலாப்பயணிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமையும்.

 வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று விருந்தோம்பலை போற்றும் நாடு தமிழ்நாடு. காலப்போக்கில் சில மரபுகள் தேய்ந்து விடுகின்றன. பழக்கம் வழக்கமாகி வழக்கம் ஒழுக்கமானால்தான் அது கலாசாரமாகப் பரிமளிக்கும்.

 வணக்கம், மன்னிக்கவும், நன்றி என்ற சொல்லொழுக்கத்தையே மறந்து விட்டோம். அடாவடித்தனம் என்ற கலாசாரம் தழைத்தால் அது சமுதாயத்துக்கு நல்லதல்ல.

 "ஐயா, நீங்கள் முன்னே செல்லுங்கள்' என்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை பார்க்க முடிவதில்லை. மிதிக்கத் தயாராக இருக்கிறார்கள். விருந்தோம்பல் என்ற கலாசாரம் சுற்றுலா மேம்பாட்டுக்கு இன்றியமையாதது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.