ஐக்கிய அணுவின் ஆதாயத் தாண்டவம்
நூற்றுக்கு வெறும் 5 பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தாம் நம் ஜனநாயகப் "பிரதிநிதிகள்' என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இந்தப் பிரமாத உறுப்பினர்களால் நாட்டின் முதல் குடிமகன் (குடியரசுத் தலைவர்) தேர்ந்தெடு


நூற்றுக்கு வெறும் 5 பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தாம் நம் ஜனநாயகப் "பிரதிநிதிகள்' என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்தப் பிரமாத உறுப்பினர்களால் நாட்டின் முதல் குடிமகன் (குடியரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அதுவும் ஏனைய தேர்தல் மாதிரி இல்லை.
உள்ளபடியே, சட்டமன்றமோ நாடாளுமன்றமோ, நாட்டின் மூன்றில் இருவர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள். கணக்குப் பெருக்கிப் பாருங்களேன், அவர்களில் வாக்கு அளித்தவர்கள் சற்றே பாதிப்பேர். அதிலும் பாதி வாக்குகள்பெற்ற ஒவ்வொரு வெற்றிக் கூட்டணியிலும் பாதிக்குக் குறைந்த வாக்குகளே ஒரு கட்சிபெறும் என்று வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலோ மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகள் ஆகியவற்றின் உறுப்பினர் "எண்ணிக்கை' (4891) அடிப்படையிலும் அல்ல. அதுதான் நம் மரபு வேடிக்கை.
""ஆட்சிமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு'' (சொத்து அல்ல!) என்றொரு வினோத முறையால் கணிக்கப்படுகிறது. எல்லாம் தேசியக் கணித ஆண்டில் அறிந்து கொள்வோமே.
பொத்தாம் பொதுவாக, மாநில ஜனத்தொகையைச் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். அந்த எண்ணினை வழக்கம்போலக் கண்ணை மூடிக்கொண்டு ஆயிரத்தால் வகுக்க வேண்டுமாம். அதுவே சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பாம். என்ன ஜனமாயக் கணக்கோ?
இதில் இன்னொரு கூத்து. பல்வேறு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பும் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும். உத்தரப் பிரதேச உறுப்பினர் மதிப்பு உச்சம் (208). சிக்கிம் உறுப்பினர் துச்சம் (7).
இத்துடன் இரட்டைத் தாழ்ப்பாள் கொடுக்கு வேறு. மாநிலங்கள் வாரியாக சட்டமன்றப் பிரதிநிதிகள்தாம் அதிபர் தேர்தலில் நேரடி வாக்கு அளிக்கிறார்களே? மீண்டும் அதே சட்டமன்றப் பிரதிநிதிகள் தேர்வு செய்த "மாநிலங்கள் அவை'ப் பிரதிநிதிகளுக்கும் அதே மாநில மக்களால் தேர்தலில் எடுக்கப்பட்ட "மக்கள் அவை'ப் பிரதிநிதிகளுக்கும், குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தகுதி வழங்கப்படுகிறது. என்ன கோளாறோ?
அதிலும் புள்ளிவிவரப்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கின் சராசரி மதிப்போ 702. சராசரி மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினரைக் காட்டிலும் ஐந்து அல்லது ஆறு மடங்கு பாரபட்சம். விக்கிரமாதித்தியன் கதை மாதிரி இருக்கிறதா? விடை தெரிந்தும் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்.
ஆங்கிலோ - இந்தியர்க்கும் பிரதிநிதித்துவம் கோரும் வெள்ளைக்கார சாசனத்தையே மறுவடிவில் தந்த அம்பேத்கர் குழுவில் ஆரியபட்டா, ராமானுஜம் போன்றோரும் இடம்பெற்று இருக்க வேண்டும்.
இதற்கு மத்தியில் புள்ளிவிவர இயல் கழகத்தின் பெயரால் சர்ச்சை நடக்கிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் முன்னரேயே இங்கு இப்பொழுது இருந்தே அவர் பெயரில் அவசரப் போலிக் கையெழுத்துச் சேட்டை ஆரம்பமாம். ஐன்ஸ்டீனுக்கே புள்ளி விவரவியல் அறிவு ஊட்டிய மேதை நம் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் கூட அதே மாநிலத்தவர்தான்.
அரசியலிலும், அணு இயற்பியலிலும் ஒரே மாதிரி துகள்கள் அதன் இடத்தில் அமைவது குறித்த புள்ளிவிவரமே விஞ்ஞானி போஸ் கண்டுபிடிப்பு. ஒரே துறைக் குற்றம் செய்த ஒரே கூட்டணியின் இரு கட்சிப் புள்ளிகள் - க, சி என்று இருக்கட்டும்.
இரண்டு சிறைகளில் அவ்விருவரை எத்தனை விதங்களில் அடைக்கலாம் என்று சிந்திப்போம். நடைமுறையில்தான் எதிர்பார்த்த நன்மைகள் நடப்பது இல்லையே!
அவர்களை ஒரு சிறையில் காணச் செல்பவர்க்கு நான்கு சம்பவங்கள் நிகழலாம். ஒன்று, அந்தச் சிறையில் இருவரையும் சந்திக்கலாம். இரண்டு, சிறை காலியாக இருக்கலாம். மூன்றாவது, அங்கு "க' மட்டும் தனித்து இருக்கலாம். நான்காவதாக, "சி' மட்டும் இருக்கலாம். அதாவது ஒரு சிறையில் நாலில் மூன்று முறை ஏதேனும் கைதி இருக்கக் கூடும். நிகழ்தகவு 75 சதவிகித வாய்ப்பு. ஆனால், ஒரே கட்சிக்காரர் என்றால், ஏதேனும் ஒரு சிறையில் அடைக்கப்படுவதால் அவரைச் சந்திக்க 50 சதவிகித வாய்ப்பு என்று குறைகிறது.
இதை மொட்டையாகச் சொல்வதானால், ஒரே இனக் குற்றவாளிகள் எண்ணிக்கை அல்லது வேற்றுமை குறையுந்தோறும் சிறை வாய்ப்பு குறையும் என்பதுதான். "ஐன்ஸ்டீன் - போஸ் புள்ளி விவரவியல்' ஆதாரமே இதுதான். ஒளித்துகளும் மின்னணுவும் வேறுபாடு அற்றவை.
அதனால் உலோகத்தின் மீது ஒளி விழுந்தால் மின்சாரம் உண்டாகும் என்ற ஒளிமின் விளைவுக்கு உரிய நிரூபணம் கிடைத்தது. ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வாங்கித் தந்த இந்திய அறிஞரின் சித்தாந்தம் எத்தனை எளிது பாருங்கள்.
எப்படியோ, இன்றைக்கு போஸ் நினைவாக அணுத் துகள்களுக்கு இடையிலான இயற்பியல் விசைக்கு "போசோன்' என்று பெயர். சூட்டியவர் நம் அரசியல் தலைவர்கள் அல்ல, பால் டிராக் என்ற ஆங்கில விஞ்ஞானி. மின்காந்த விசைக்கான ஃபோட்டோன் (ஆற்றல் கட்டுத் துகள்), நிறையீர்ப்பு விசைக்கு உரிய கிராவிட்டோன், நிறை ஊட்டும் விசை ஆகிய ஹிக்ஸ் - போசோன் துகள் - எல்லாம் போசோன்களே.
""அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்கள் எல்லாம்/அண்டங்கள் ஆகப் பெரிதாச் சிறிதாயினானும்'' என்னும் பரஞ்சோதியார் ஆகட்டும். ""இல்நுழை கதிரின் நுண்அணு'' எனப் பாடும் மாணிக்கவாசகர் கருத்தோட்டம் ஆகட்டும்.
இன்றைக்கு அறிவிப்பான இந்த ஹிக்ஸ் - மெசான் மகா பெரும் பரிசோதனை என்பது பிரபஞ்சப் பெருவெடிப்புக் கொள்கைக்கான ஆதாரம் அல்ல, அடிப்படையோ அல்ல. ஆனாலும் அத்தகைய மகா வெடிப்பின் சக்திப் பிரளயத்தில் அணுவினுள் அணுவும், துகள்களும் பிறக்கும். அணுக்கரு இம்மிகளின் ஆனந்த விசைக் கூத்தாட்டம்.
"பெரும் ஹேட்ரான் மோது கருவி'யில் செறிந்த மியுவான் குறுங்கோண மின்குழாய் இயக்குவிக்கப்பட்டது. அங்கு இரண்டு புரோட்டான் உற்பத்தித் தூண்கள்.
அவற்றின் இடையே புரோட்டான்கள் வந்து முட்டி மோதுவதற்கு வசதியாக நான்கு சந்திப்பு மூலைகள். அங்கு அரசியல் கட்சி மோதல் மாதிரி, அதி ஆற்றல் புரோட்டான்களின் மோதல் என்றால் சும்மாவா? குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியைக் காட்டிலும் அதிதீவிரம்.
இது 7 டன் யுரேனியம் அணுசக்திக்குச் சமம். 400 கிலோ ஹைடிரஜன் குண்டு வெடிப்பு அளவு என்றும் சொல்லலாம். அதுசரி, ஒரே வகை நேர் மின்னேற்றம் கொண்ட புரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்குவதாக அல்லவா இயற்பியல் கூறுகிறது? அதனால்தான் மோதலில் இத்தனை அபார ஆற்றல் வெளிப்படுகிறது.
அப்படியானால், ஓர் அணுக்கருவினுள் குடியிருக்கும் ஒரே இனப் புரோட்டான்கள் மட்டும் விதி விலக்கா? அவை தங்களுக்குள் சண்டை போடாமல் விலகித் தெறிக்காமல் ஒற்றுமையாக இருக்கின்றனவே? நியாயமான சந்தேகம்.
இதற்காகத் தண்டோரா கேட்டதும் எந்தத் தருமியும் மதுரை சொக்கநாதரிடம் புலம்பி விடை வாங்க வேண்டாம். ஏற்கெனவே அங்கே ஆதீனப் பிரச்னை வேறு அமெரிக்கா வரை பரவிக் கிடக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம். ஓர் அணுக்கருவினுள் புரோட்டான்கள், கட்சி உறுப்பினர்கள் மாதிரி. அத்துடன் நடுநிலைத் தொண்டர்கள் போன்று நியூட்ரான்களும் அடங்கி உள்ளன. கட்சி அரசியலிலோ உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே பணப் போர்வைதான் பாசப் பிணைப்பு.
ஆனால், புரோட்டான்களை அணு மையத்தில் பிணைக்கும் திறன் எது? அங்கே புரோட்டான்கள் தமது நேர் மின்னேற்ற "மெசான்' என்னும் ஆற்றல் போர்வையைக் கழற்றி நியூட்ரானுக்குக் கொடுக்கின்றன. ஆடை அற்ற "தொண்டர்' நியூட்ரான்களோ கிடைத்த மெசான் கரை வேட்டியால் புரோட்டான்கள் ("உறுப்பினர்கள்') ஆகிவிடுகிறார்கள்.
அதே தருணத்தில் நியூட்ரான்களும் பதிலுக்குத் தங்கள் எதிர்மின் மெசான் ஆகிய மேல்தோலினை உரித்து வழங்குகிறார்கள்.
இத்தகைய ஆற்றல் பரிமாற்றத்தால் கூட்டு அணுவினுள் துகள்களைப் பிணைக்கும் "வலு விசை' உண்டாகிறது. பிறகு என்ன, புரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கப் போவதும் இல்லை. போதிய அவகாசமும் இல்லை. அணுக்கரு சிதையாமல் பிழைத்தது.
பொதுவாக, சிறிய கட்சி அல்லது குடும்பம் என்றால் கருத்து ஒருமித்த அண்ணன் தம்பிமார் பிரியமுடன் இருப்பார்கள். வசதி பெருகினாலோ பிரியத்தான் செய்வார்கள்.
அதிலும், வெளிநாட்டு வேலை என்றாலோ, வீட்டுமனை வாங்கினாலோ தந்தை சொல் மந்திரம் இல்லை என்பார் சிலர். தலையணை மந்திரம் வெல்லும் என்பார் சிலர். குடும்பத்திலும் கூட்டணியிலும் பிளவு. இது ஆரூடம் அல்ல. அணுக்கரு இயற்பியல் அடிப்படைத் தத்துவம்.
குறைந்தது 10 புரோட்டான்களுக்கு 16 நியூட்ரான்கள் என்ற விகிதத்தில் அமைந்தாலே அணுக்கரு நிலைக்கும். கன யுரேனியம் மாதிரி நியூட்ரான்கள் (தொண்டர்கள்) எண்ணிக்கை கூடினால் புரோட்டான்கள் (உறுப்பினர்கள்) கழற்றித் தரும் வேட்டியை வாங்கத் தொண்டர்கள் இடையே போட்டி நிலவும். சிலர் புதுக்கட்சிகூடத் தொடங்குவார்கள். இல்லை என்றாலும் சிறிய மறுமலர்ச்சி அல்லது முற்போக்கு புரோட்டான் துகள் வந்து மோதினாலும் கட்சியோ அணுக்கருவோ பிளவுபடும். அணுசக்தியின் பிறப்பும் இப்படித்தான் நிகழ்கிறது.
சேதி தெரியுமா? சுனாமி தாக்கிய புகுஷிமா, சுறுசுறுப்புடன் ஒரே ஆண்டில் கும்பாபிஷேகமும் நடத்திவிட்டது. நம் தக்காண வீரர்கள் எங்கே அதன் திறப்பு விழாவுக்குப் பாத யாத்திரை போக இருக்கிறார்களோ, என்னவோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...