கிராமமே கண்ணாக
இந்தியாவின் ஜீவன் அதன் கிராமங்களில் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள். அரசியல் ஆடுகளமாகவும் அரசு நிர்வாக மையமாகவும் உள்ளது தில்லி. அதனாலேயே ""இந்தியா என்றால் தில்லி மற்றவை பாரதம்'' என்பது எவ்வளவு உண்


இந்தியாவின் ஜீவன் அதன் கிராமங்களில் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள். அரசியல் ஆடுகளமாகவும் அரசு நிர்வாக மையமாகவும் உள்ளது தில்லி. அதனாலேயே ""இந்தியா என்றால் தில்லி மற்றவை பாரதம்'' என்பது எவ்வளவு உண்மையான கூற்று.
அண்மையில் நடந்த மக்கள் கணக்கெடுப்புப்படி இந்தியாவின் 68.8 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்தபோது 80 சதவிகிதத்துக்கும் மேலாக கிராமத்தில் வசித்த மக்கள் படிப்படியாக நகரத்துக்குக் குடிபெயர்ந்ததாலும் பல புதிய நகரங்கள் உருவாவதாலும் இந்த மாற்றம்.
""கிராமங்கள் தேய்ந்துவருவதும் பண ஆதிக்கம் ஒங்குவதும் மனித நற்பண்புகள் மங்குவதும் அழிவுப் பாதையைத்தான் வகுக்கும், புதுப் பணக்காரர்கள் தோன்றலாம் ஆனால், நிலத்தை நேசிக்கும் விசுவாசியான விவசாயி நொடித்துப் போனால் அது சமுதாயத்துக்கு நிரந்தர இழப்பு'' என்று நயம்படக் கவிதை இயற்றியுள்ளார் ஆங்கிலக் கவிஞர் கோல்ட்ஸ்மித்.
முதல் அடி வைத்தல்தான் தொலைதூரப் பயணத்தின் முதல் துவக்கம். நாடளாவிய வளர்ச்சிக்குக் கிராமங்களின் வளர்ச்சிதான் துவக்கமாக அமைய வேண்டும்.
கிராம வளர்ச்சிப்பணியில் கிராம நிர்வாக அலுவலர் முக்கியப் பங்கு வகிக்கிறார். கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவி பரம்பரைப் பொறுப்பாக, கிராமத்தில் ஒரு குடும்பத்தின் சந்ததியரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில் கர்ணம் என்றும் வடமாநிலங்களில் பட்வாரி, படேல், குல்கர்னி என்று பல பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தது.
1980-ல் தமிழ்நாட்டில் பரம்பரைப் பதவிமுறை ஒழிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பதவியாக மாற்றப்பட்டு மற்ற அரசுப்பணிகளுக்குத் தேர்வு செய்வதுபோல் தேர்ந்தெடுக்கும்முறை அமல்படுத்தப்பட்டது. இது மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எனலாம்.
பரம்பரை நிர்வாக முறையில் நிறை குறை பல இருந்தன. கர்ணத்துக்கு கிராமத்தில் உள்ள எல்லோரையும் தெரியும். அவர்களது குடும்ப நிலவரம், பூர்வீகம், அவர்களது இப்போதைய நடவடிக்கை எல்லாம் அத்துப்படி.
கிராமத்தில் எவ்வளவு நிலங்கள் இருக்கின்றன? எது யாருக்குச் சொந்தம்? நிர்வாகம், பயிர் சாகுபடி, வேறு சமுதாய ஜாதிப்பிரச்னை எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து வைத்திருப்பார்.
பிறப்பு, இறப்பு, ஜாதிவாரியான கணக்கு, மழையளவு, பொதுச்சொத்து, உள்ளூர் கோவில் நிலங்கள், நில வரிக்கான கணக்கு என்று கிராம சரித்திரம், நடப்புகள் எல்லாம் பதிவு செய்து வைத்திருப்பார்.
மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்கையில் கிராம கர்ணத்தின் அனுபவப்பூர்வமான தகவல்கள் பல முடிவுகளுக்கு ஆதாரமாக அமையும்.
""என்ன கணக்கு நான் சொல்றது சரியா?'' என்று கிராமத்தில் பலம்படைத்தவன் தனது அராஜகச் செயலுக்கு ஆமாம் சாமி போட வைக்கும் காட்சி சினிமாவில் வரும். பரம்பரை கர்ணம் முறையில் இதுதான் பிரச்னை.
சுயநலம், பலம் படைத்தவர்களிடம் பணிந்து போவது, கிராமக் கணக்குகளை நிர்வாகம் செய்வதில் குறைபாடுகள் போன்றவற்றுக்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதபடிக்கு பல சிக்கல்கள்.
எனவேதான் வளர்ந்துவரும் ஜனநாயகத்தில் இத்தகைய பரம்பரை நியமனம் காலத்துக்கு ஒவ்வாது என்ற அடிப்படையில் அரசுப் பணியாளர்களாக கிராம நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வருவாய்த்துறையானது அரசு நிர்வாக அமைப்பில் மிகப்பழமையானதும் பெருமை வாய்ந்ததுமாகும். வருவாய்த்துறை, நில நிர்வாகம், நிலச் சீர்திருத்தம், போக்குவரத்து, வர்த்தகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போன்ற பல துறைகளை உள்ளடக்கிய வருவாய் வாரியம் (ரெவின்யூ போர்டு) நிர்வாக ஆளுமைக்கு உயர்ந்த உதாரணமாகத் திகழ்ந்தது. இப்போது பல்வேறு தனித் துறைகளாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இந்த நிர்வாக அமைப்பில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
முப்பத்திரண்டு மாவட்டங்களில், 76 கோட்டங்களும், 220 வட்டங்களும், 1,127 பிர்கா மற்றும் 16,564 வருவாய் கிராமங்களும் உள்ளன. வளர்ச்சிப்பணியில் கிராம நிர்வாக அலுவலருக்கு மிக முக்கியப் பொறுப்பு உண்டு.
குஜராத்தில் தன்னிறைவு மட்டுமல்ல, நகரங்களை விஞ்சும் வகையில் வளர்ந்துள்ள கிராமத்தைப்பற்றி செய்தி வந்தது. ஹிம்மத் நகர் என்ற பகுதியில் உள்ள அன்சாரி என்ற கிராமத்தில் வறுமையில்லை, வெறுமையில்லை, எங்கும் பசுமையும் வியக்கவைக்கும் வகையில் வளமையும் காணப்படுகின்றன. குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பள்ளிக்கூட அறைகள், சுத்தமான தெருக்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல மினிவேன், தெருக்களில் குப்பை சேராமல் இருப்பதைக் கண்காணிக்க கேமராக்கள் என்று அடுக்கடுக்காக நவீன வசதிகள். அந்த கிராமத்தில் இருந்து வெளிநாடு சென்றவர் யாருமில்லை.
வெளிநாட்டிலிருந்து பணம் பெறவில்லை. பணக்காரர் பொருள் உதவி செய்யவில்லை. எல்லாம் அந்தக் கிராம மக்களின் சுயமுயற்சி, சீரிய பஞ்சாயத்து நிர்வாகம். சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் வழங்கப்படுகிறது. அதற்கு ரூபாய் நான்கு மட்டுமே கட்டணம்.
கிராமப் பஞ்சாயத்திடம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ரூ. 25,000 மட்டுமே வைப்பு நிதியாக இருந்தது. இப்போது ரூ. 75 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் மக்களின் கூட்டுறவு மூலம் தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகள், பஞ்சாயத்து அமைப்பின் ஒற்றுமை. எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், வளர்ச்சியின் பங்களிப்பு 15 சதவிகிதம் மக்களையே சென்றடைந்திருக்கிறது. பலகோடி மக்களின் பின்தங்கிய நிலை மாறவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. அது ஒருவிதத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது.
தமிழகத்தில் சுமார் 51.5 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். வருவாய் கிராமங்களுடன் ஒட்டிய குக்கிராமங்கள் உண்டு. வருவாய் கிராமங்கள் தாய் என்றால் குக்கிராமங்கள் அதன் குழந்தைகள். தாய் கிராமங்களை முன்வைத்தே நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், சிறு கிராமங்களை மையமாக வைத்து ""தாய்'' என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது.
சிறு கிராமங்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் குடும்பநலம், கல்வி என்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் அமையும். தமிழகத்தில் மொத்த கிராமப் பஞ்சாயத்துகள் 12,524. இதில் குடியிருப்புகள் உள்ள குக்கிராமங்கள் 79,394. சராசரி ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் 7 குடியிருப்புகள் உள்ளன. ""தாய்'' திட்டத்தில் இத்தகைய குக்கிராமங்களைக் கணக்கிட்டு கிராமப் பஞ்சாயத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. குக்கிராமங்கள் எண்ணிக்கையை வைத்து கிராமப் பஞ்சாயத்துகளில் ஐந்துக்கும் கீழ் குடியிருப்புகள், 5-லிருந்து 15, 16-லிருந்து 25, 25-க்கு மேல் என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு அதற்கேற்றபடி நிதி ஒதுக்கப்படுகிறது.
இதற்கான தேவை ரூ. 3,400 கோடி. ஒவ்வோராண்டும் ரூ. 680 கோடி என்ற அளவில் இத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படவுள்ளது. எந்த மாநிலத்திலும் இத்தகைய மக்களுக்கு அனுகூலமான அணுகுமுறை நடைமுறையில் இல்லை. இந்தத் திட்ட அமலாக்கத்தில் கிராம நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது. வளர்ச்சியின் பயனளிப்பு எல்லோருக்கும் சென்றடைய இது உறுதி செய்யும். ""தாய்'' திட்டம் நாட்டுக்கே முன்னோடியாக அமையும்.
நிலப்பட்டா என்பது நில உரிமையாளர் முக்கியமாகக் கருதும் ஆவணம். நிலப்பட்டா மாற்றம் செய்வதில் தாமதத்தைத் தவிர்க்கவும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு திங்கள்கிழமையும் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றுதலுக்கான மனுக்களைப் பெற வேண்டும். அதைப் பரிசீலித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். குறித்த கால கட்டத்துக்குள் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை துணை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு, தவிர்க்கப்பட வேண்டிய ""கைமாற்றம்'' தகர்க்கப்படுவதில் மக்களுக்கு நிச்சயமாக நிம்மதி தரும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. சமீபத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது. நாட்டின் ஜிடிபி குறைந்த நிலையில் இருந்தாலும் தமிழகத்தில் ஜிடிபி உயர்ந்து வருகிறது என்பது நிறைவைத்தருகிறது.
ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபொழுது தமிழகத்தில் 2011-12-க்கான பொருளாதார வளர்ச்சி 12.5 சதவிகிதம் என்றும் இந்தியாவின் சராசரி வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தைப்போல இரண்டு மடங்கு என்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தமது மாவட்டம், கிராமங்களின் மொத்த உற்பத்தி மதிப்பை (ஜிடிபி) கணக்கிட்டு அது பெருக முனைப்பாகச் செயல்பட்டால் தமிழ்நாடு மேலும் உன்னத நிலையை அடையும்.
தொழில் உற்பத்தி, சேவைத் தொழில்கள் அபிவிருத்தியடைந்து வருவது இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இது வளர்ச்சி பெறுக வித்திடும் என்பது உறுதி. தனியார் முதலீடும் அதிகரித்துள்ளது. அதில் 48 சதவிகித தொழில் ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 42 சதவிகித திட்டங்கள் ஒப்பந்த அளவில் உள்ளன. அதன் பயனளிப்பை துரிதப்படுத்துவதோடு, தொழில் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்க சம்பந்தப்பட்ட துறைகள் முனைப்பாகச் செயல்பட வேண்டும்.
சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்கள் வளம் பெற முயற்சிக்கின்றனர். தமது நிலை உயர வேண்டும். தமது குழந்தைகள் வசதியோடு வாழ வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு நியாயமானது. பூமியைப் பிளந்து நெற்பயிர் மேல் நோக்கி வளர்வதுபோல் கிராமங்கள் மேன்மையுற ""தாய்'' திட்டம் வழிவகுக்கும். இந்தியாவின் ஜீவன் பாதுகாக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...