காடு விளைஞ்சென்ன மச்சான்...
தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாடல்களும் இசையும் தமிழ் மக்கள் இதயத்தில் தனி இடம் பெற்றுள்ளன என்றால் மிகையில்லை. 'காடு விளைஞ்சென்ன மச்சான்; நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்' என்று நம்மை நெகிழவைக்கும்


தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாடல்களும் இசையும் தமிழ் மக்கள் இதயத்தில் தனி இடம் பெற்றுள்ளன என்றால் மிகையில்லை. "காடு விளைஞ்சென்ன மச்சான்; நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்' என்று நம்மை நெகிழவைக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடலை மறக்க முடியாது.
ஏழை விவசாயி, எத்தனைதான் உழைத்தாலும் அவரது குடும்பத்துக்கு மிஞ்சுவது ஒன்றுமில்லை என்பதை நெஞ்சில் அடித்தால்போல் உணர்த்துகிறது. காலந்தவறாமல் ஏற்றப்படும் பெட்ரோல், டீசல் விலையால் விவசாயத்துக்குத் தேவையான மூலப்பொருள்களும் விலை உயர்கின்றன.
விவசாயிகள் உழைப்பால் உற்பத்தியாகும் பொருள்கள் அறுவடைக்கு வரும் முன்னாலேயே பங்குச் சந்தையில் விற்கப்படுகிறது. அந்தப் பொருள்களின் உரிய விலை அவர்களுக்குக் கிடைப்பதில்லை, காடு விளைந்து பயன் கிட்டுவதில்லை.
"வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே' என்ற நிலை இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் தொடர்கிறது.
பல ஆண்டுகளாக 3 சதவிகிதமாக இருந்த நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு உற்பத்தி இப்போது 8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இது அரசின் தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாலும், உலகமயமாக்கலின் தாக்கத்தாலும் சாத்தியமாகிறது என்று சொல்லப்படுகிறது.
வளர்ச்சி முழுமையாக எல்லோருக்கும் சென்று அடைந்ததா என்பதைப் பார்க்கையில் டெண்டுல்கர் கமிட்டி அறிக்கைப்படி 37 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உழன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், அதிகமான உலக அளவு பணக்காரர்களைக் குறுகிய காலத்தில் தோன்றுவித்த நாடு நமது நாடு, சுமார் 23 உலக அளவு பணக்காரர்கள் நம் நாட்டில் உள்ளனர். அவர்களது மொத்தச் சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர். இது ஜப்பான் நாட்டுப்பணக்காரர்களின் சொத்தைவிட பலமடங்கு அதிகம். இதை நாம் பெருமையாகக் கொள்வதா அல்லது வளர்ச்சியின் பலன் எல்லோரையும் சென்று அடையவில்லை என்று பொருமுவதா?
உச்ச நீதிமன்றத்தில் தனி நபர் தொடர்ந்த உணவுப் பாதுகாப்பு பற்றிய பொதுநல வழக்கில் திட்டக்கமிஷன் நாள் ஒன்றுக்கு ரூ.32 வரை சம்பாதிப்பவர் ஏழை என்ற வரம்புக்குள் வரமாட்டார் என்ற தலை சுற்றவைக்கும் ஒரு கணக்குக் கொடுத்திருக்கிறது. நகரங்களில் எவ்வாறு ஒருவர் நாள் ஒன்றுக்கு ரூ.32-ல் வாழ்க்கை நடத்த முடியும்? இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகிறது என்று சமீபத்திய மக்கள்தொகைக் கணக்குத் தெரிவித்திருக்கிறது. ஆனால், 5 வயதுக்குள்பட்ட 45 சதவிகிதக் குழந்தைகளுக்குப் போதுமான ஊட்டச்சத்து சென்றடைவதில்லை.
நமது நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்தான் உள்ளது. அவர்களை நாம் சரியாகப் பராமரிக்க வேண்டாமா? வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 23 சதவிகித ஏழைக் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது.
எல்லா மாநிலங்களிலும் நகரங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. பல விவசாய நிலங்கள் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
பணப்புழக்கத்தையே அறியாத பாமர மக்கள், இடைத்தரகர்களின் ஆசைவார்த்தைகளில் மயங்கித் தம்முடைய ஒரே வாழ்வாதாரமான நிலத்தை விற்றுவிட்டு, கிடைத்த பணமும் விரயமாக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர். இவர்களது சோகக்கதை அரசு ஆணையின்பேரில் காவல்துறை பதிவு செய்த நிலமோசடி வழக்குகளின் மூலம் வெளிவந்துள்ளது.
நிலச் சொந்தக்காரர்கள் மனமுவந்து விற்றனர் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு சென்ட் நிலம்கூட பலவந்தமாக வாங்கவில்லையென்று எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும், உண்மை தாமரை இலை தண்ணீர்போல மிதப்பதைப் பார்க்காமல்விட முடியுமா?
எந்தெந்த இடங்கள் வளர்ச்சியடையப் போகின்றன என்பது பொறுப்பில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே தெரியும். அந்தத் தகவலை வைத்து அக்கம்பக்கத்தில் உள்ள நிலத்தை வளைத்துப்போட வேண்டியது. நிலச் சொந்தக்காரர்களும் ஏதோ அப்போதைக்கு தான் கணக்குப்போட்ட விலையைவிட அதிகமாகக் கிடைக்கிறது என்று விற்று விடுகின்றனர். ஆனால், சில மாதங்களில் அதே இடம் பன்மடங்கு, சில இடங்களில் 1,000 சதவிகிதம் தாண்டி உயர்ந்திருக்கிறது, நிலம் விற்றவருக்கு இது பெரிய இடி. அவருக்குக் கிடைத்த பணத்தை வைத்து எந்த இடத்திலும் ஒரு சென்ட் நிலத்தைக்கூட வாங்க முடியாது.
இத்தகைய மோசடி பல இடங்களில் நடந்துள்ளது.
இவ்வாறு ஏழைகள் நிலத்தைப் பறித்துவிட்டு எவ்வாறு இவர்கள் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. மனசாட்சியே இல்லாதவர்களால்தான் இது சாத்தியம்.
இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். இந்த யுகத்தில்தான் தீமைகள் தழைக்கும். நல்லது சாதாரணமாக நடக்காது. போராட்டத்துக்குப் பிறகுதான் நியாயம் கொஞ்சமாவது நிலைபெறும் என்று முற்றும் உணர்ந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஒருவனிடம் நற்குணமும் தீயகுணமும் மாறிமாறி வருவதைப் பார்க்கிறோம். தீயகுணத்தை அடக்கி நற்குணத்தை மேலோங்கச் செய்வதுதான் தனிமனிதனின் கடமை. ஏழைகள் நிலத்தை அபகரிப்பவர்கள், அரசு புறம்போக்கு நிலத்தை வளைப்பவர்கள், மற்றவர்களுக்கு இன்னல் விளைவிப்பவர்கள் மற்றும் எக்கேடு கெட்டுப்போனாலும் தாம் செல்வத்தில் கொழிக்க வேண்டும், தமது குடும்பம், சொந்தம் தான் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் சமூக விரோதிகள்.
பர்கூர் வனப்பகுதியில் நிர்வாகத்துக்குச் சவாலாக அழிச்சாட்டியத்தில் ஈடுபட்டிருந்த வீரப்பன் கும்பலைப் பிடிக்க பல யுக்திகள் கையாளப்பட்டன, அதில் ஒன்று வீரப்பனிடம் நயமாகப் பேசி சரணடையச் செய்ய வேண்டும் என்பதும் ஒன்று. அதைப்பற்றிப் பேச வீரப்பனுக்கு வேண்டிய சில தூதர்கள் அனுப்பப்பட்டனர். அப்போதிருந்த அரசு ஏதோ தனி ராஜ்யத்தின் தலைவனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல வீரப்பனிடம் பேசுவதை ஒரு கலையாகவே கொண்டிருந்தது. வீரப்பன் அந்த அளவுக்கு வளர்ந்ததற்கு இந்தத் தவறான அணுகுமுறையும் ஒரு காரணம். ஆனால், நயவஞ்சக நாயகன் வீரப்பன் பேச்சுக்கு இசைவதுபோல இசைந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டு, நிர்வாகத்துக்குப் போட்டதோ பட்டை நாமம்தான். ஆனால், அப்போது தனக்கு வேண்டியவர்களிடம் வீரப்பன் கூறியது, ""ஆண்டவன் என்னைக் கெட்டவனாகப் படைத்துவிட்டான். நான் இப்படியே இருந்து விடுகிறேன், திருந்தி ஊருக்கு வந்தால் என்னை வாழவிட மாட்டார்கள்'' என்று.
வீரப்பனிடம் இருந்த துர்க்குணம் உடம்பு முழுக்க நிறைந்திருந்து, நல்லது தலைதூக்கினாலும் அவன் அதை அடக்கினான். முடிவில் "வன்முறையை அணைத்துக் கொண்டவன் வன்முறையாலேயே அணைக்கப்படுவான்' என்பது உண்மையானது.
ஊழல் என்பது நம் சமுதாயத்தில் பீடித்திருக்கும் மிகக்கொடிய நோய். ஊழலுக்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் எந்த அளவுக்கு எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது என்பதைப் பார்க்கும்பொழுது தீய சக்திகளின் பலத்தை உணர முடிகிறது. அரசை அசர வைத்த ஹசாரே அப்படி என்ன சொல்லிவிட்டார்? பொறுப்பில் உள்ளவர்கள் இவ்வளவு கோபப்படுவதற்கு?
"ஆம் ஆத்மி' என்று சொல்லப்படும் சாதாரண மனிதன் தனது அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே அரசு இயந்திரத்தோடு மோத வேண்டியிருக்கிறது. அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது, கையூட்டுக் கொடுத்தால்தான் கொஞ்சமாவது கிடைக்கிறது என்பது மிக மோசமான நிலை. இது மாற வேண்டும் என்று ஹசாரே போராடுகிறார்.
ஊழலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இதை வரவேற்கின்றனர். இது ஏதோ நடுத்தர வர்க்கத்தினரின் போராட்டம் என்றோ, நடைமுறைக்கு ஒவ்வாத வழிமுறையை முன்மொழியும் சிலரின் தர்க்கம் என்றோ, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று பகற்கனவு காணும் இளைஞர்களின் பாணி என்றோ ஒதுக்கிவிட முடியாது,
சமுதாய எதிரிகள் நம்மிடையே உள்ளனர், எதிர்மறை உணர்வுகள் நம்மிடமே உள்ளன, அதைக்களைய வேண்டிய பொறுப்பு நம்முடையது. நமது மக்கள், நமது சமுதாயம், நமது நாடு என்ற உயர்ந்த பார்வை வேண்டும். நமது மக்களை நாம் நேசித்தால் தவறு இழைப்போமா?
உணவில் கலப்படம் செய்பவர், அரசு வேலை செய்வதற்குக் கையூட்டுப் பெறுபவர், கள்ளக்கடத்தல் செய்பவர், அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்து பன்மடங்கு அதிக விலைக்கு விற்பவர், தம்மைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் தவறான செய்கையில் ஈடுபடுவாரா? பொதுநலம், பரிவு, பரோபகாரம் போன்ற நற்குணங்கள் மங்குவதால் மாட்சிமை அடைய முடிவதில்லை, இருந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கே இத்தனை ஓட்டம் ஓட வேண்டியிருக்கிறது, எப்போது உண்மையான ஏற்றம் பெறுவது? விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொள்வது பல மாநிலங்களில் சர்வசாதாரணமாக நிகழ்கிறது.
2009-ம் ஆண்டு 17,368 ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், தேசிய குற்ற ஆவணங்கள் ஆணையத்தின் புள்ளிவிவரத்தில் 2006-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் 4,453 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது விவசாயிகள் மொத்த தற்கொலையின் எண்ணிக்கை 17,060-ல் 25 சதவிகிதம். 1997-ல் இருந்து 2008 வரை 1,99,132 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்றுவரை கணக்கிட்டால் அது இரண்டு லட்சத்தையும் தாண்டிவிடும்.
தற்கொலை அதிகமாக உள்ள மாநிலங்கள் மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் கர்நாடகம். மற்ற மாநிலங்களில் குறைவாக இருந்தாலும் பிரச்னை இருப்பதால் பலர் விவசாயத்தை விட்டுவிடும் நிலை வந்துள்ளது.
இயற்கை விவசாயம் பற்றியும், எவ்வாறு இயற்கையோடு ஒன்றி விளைநிலங்களைப் பராமரிக்க வேண்டும் என்று உணர்த்தி வரும் நம்மாழ்வார் போன்றோரின் நற்பணிகளை நிர்வாகம் பயன்படுத்த வேண்டும்,
உழவின்றி உழலாது உலகம் என்பதை உணர்ந்து உழைக்கும் வர்க்கத்தினரைப் போற்றி, அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்து, நேர்மையாகச் செயல்பட்டால்தான் முழுமையான வளர்ச்சி சமுதாயத்தில் நிலை பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...