பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

"அணு' இன்றி "அணுவும்' அசையும்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடலோரக் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இடிந்தகரையில் சுமார் 120 பேர் காலவரையறையற

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:33 pm

எஸ். ராஜாராம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடலோரக் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இடிந்தகரையில் சுமார் 120 பேர் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த அணுமின் நிலையத்தில் முதல்கட்டமாக தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 2 அணுஉலைகள் வடிவமைக்கப்படுகின்றன.

 இதில் முதல் அணுஉலை மூலம், வரும் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி உற்பத்தி தொடங்கும்பட்சத்தில், அணுமின் நிலையத்தைச் சுற்றி கடலுக்குள் குறிப்பிட்ட தொலைவு மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்படும்; குடியிருப்புகளைக் காலிசெய்ய நேர்ந்து தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படக்கூடும் என்பதே இந்தக் கடலோரக் கிராம மக்களின் முதல் அச்சம். அத்துடன் ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் சுனாமியால் ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தைப்போல கூடங்குளத்திலும் ஏற்படக்கூடும் என்ற அச்சம்.

 போராட்டம் நடத்தி வரும் மக்களுடன் மாநில அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், முதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

 "கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் இருப்பதால், சுனாமியால் பாதிப்பு ஏற்படாது என்றும், அணுஉலைகளைக் குளிர்விக்க அமைக்கப்பட்டுள்ள 4 ஜெனரேட்டர்களும் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆதலால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை' என முதல்வர் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.

 இயற்கையின் சீற்றம் இத்தனை மீட்டர் உயரத்துக்குமேல் போகாது என்று யாரால் உறுதியளிக்க முடியும் என்பதே போராட்டம் நடத்தும் மக்களின் கேள்வி.

 இந்நிலையில், இப் பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் குழு அனுப்பப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 இப் பிரச்னையிலும் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் செயல்படாமல், அனைத்துக் கட்சிக் குழுவில் இணைந்து திருநெல்வேலி மாவட்டக் கடலோரக் கிராம மக்களின் எதிர்ப்பை ஒற்றுமையுடன் மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

 மக்களின் உண்ணாவிரதம் 9 நாள்களாக நீடிக்கும் வேளையில், மத்திய அரசு போராட்டத்தைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதி என்று இதுவரை யாரும் போராட்டக் குழுவினரைச் சந்திக்கவில்லை. 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய விவகாரங்களில் எல்லாம் மௌனம் காத்ததைப்போல, இந்த விவகாரத்திலும் பிரதமர் மௌனம் காக்கிறாரா அல்லது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில், தமிழர்கள் இந்தியர்களே அல்லர் என்ற மனோபாவத்தில் சும்மா இருந்ததைப்போல இப்போதும் வாளாவிருக்கிறாரா?

 தங்களின் வாழ்வாதாரமே அழிந்துபோகக்கூடும் என்று பல்லாயிரக்கணக்கானோர் நடத்தும் போராட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் அமைச்சரோ, அதிகாரிகளோ பதில் சொல்வதற்குப் பதில் பிரதமரே விளக்கம் அளித்தால்தான் என்ன?

 மக்களின் போராட்டத்துக்குப் பணிந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால், இதுபோல இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள மற்ற இடங்களிலும் போராட்டம் பரவக்கூடும் என மத்திய அரசு கவலைப்படலாம். அப்படிக் கவலைப்பட்டால், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையைப் போராட்டம் நடத்தும் மக்களிடம் ஏற்படுத்தவும் வேண்டும் அல்லவா?

 ஜப்பானில் சுனாமியால் புகுஷிமா அணுஉலைகள் அடியோடு அழிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தங்கள் நாட்டில் உள்ள 8 அணுஉலைகள் உடனடியாக மூடப்படும் என அறிவித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், மீதி 9 அணுஉலைகளும் 2022-ம் ஆண்டுக்குள் மூடப்படும் எனவும் உறுதி அளித்தார்.

 அணுசக்திக்கு எதிரான அந்த நாட்டு மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, மின்சக்தியை மாற்று ஆதாரங்கள் மூலம் தேடிக்கொள்வோம் என்ற நம்பிக்கையுடன் ஜெர்மனி எடுத்த முடிவு அது.

 "அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை'- அதே புகுஷிமா அணுஉலை விபத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது இது.

 "அணுசக்தி இல்லையேல் இந்தியாவுக்கு எதிர்காலமே இல்லை' என்பதுபோன்ற மாயத் தோற்றத்தை பிரதமரின் பதில் ஏற்படுத்துகிறது. யுரேனியத்துக்கு மாற்றாக, இந்தியாவில் நிறைந்துள்ள தோரிய வளத்தைப் பயன்படுத்தலாம். இன்னும் எத்தனையோ மாற்று வழிகளும் உள்ளன.

 மேலும், அணுசக்தி தேவையா, தேவையில்லையா என்ற விவகாரம் இருக்கட்டும். மக்களின் கேள்விகளுக்கு முதலில் மத்திய அரசு பதில் சொல்லட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.