வயதாகிவிட்டால் பெற்ற தந்தையையும், தாயையும்கூட கவனிக்காமல், நடுத்தெருவில் நிறுத்தும் பிள்ளைகள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில், முதியவர்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டம் முதுமையில் தள்ளாடும் பெரியவர்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகள் குளிர்சாதன அறைகளில், பெற்றோர்களோ திண்ணையோரத்தில் என பெரும்பாலான குடும்பங்களில் முதியவர்கள் கவனிக்கப்படாதவர்களாகவும், வேண்டாதவர்களாகவும் ஒதுக்கப்பட்டு வரும் நிலை இன்று காணப்படுகிறது.
தன்னைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்து, தான் பட்டினி கிடந்தாலும், தங்கள் பிள்ளைகள் கண்கலங்கக் கூடாது என வாழ்ந்த அத்தகைய பெற்றோர்கள் இன்றோ உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடி வதங்கி வருகின்றனர்.
இப்படி வயிற்றுக்கும் உணவு கிடைக்காமல், உடல் நலத்துக்கும் வழியில்லாமல், பார்ப்பதற்கும் கதியில்லாமல், விரக்தியில் வாழ்ந்து வரும் இத்தகைய முதியவர்களில், பலருக்கும், தங்களுக்கு எமனிடமிருந்து எப்போது அழைப்பு வரும் என்ற சிந்தனை ஓட்டம்தான் இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்படிப்பட்டவர்களின் நலனுக்காக, அத்தகைய முதியவர்கள், வறுமையால், பசியால் வாடி வருவதைப் பொறுக்க முடியாத அரசு, அவர்களுக்கு மாத உதவித்தொகையை அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக, ஏராளமான முதியவர்கள் பலன் பெற்று வருகின்றனர்.
இருப்பினும், இந்த முதியோர் உதவித்தொகை அஞ்சல்துறை மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
மணியார்டர் மூலம் இந்தப் பணம் உரிய நபர்களுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் பல சிக்கல்களை அவர்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
சில சமயங்களில் நேரடியாகக் கிளை அஞ்சலகங்களுக்குச் சென்றுதான் சம்பந்தப்பட்ட முதியவர் அந்த உதவித்தொகையைப் பெற வேண்டிய நிலையும் இருந்து வருவதாக முதியவர்கள் பலரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் தாண்டி, சில நபர்கள் மணியார்டர் பணத்தைக் கொடுப்பதற்காக, அந்த முதியவரிடமிருந்து கொஞ்சம் பணமும் பெறுவார்கள் எனவும் உதவித்தொகை பெறும் நபர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
இப்படி முதியவர்களின் வாழ்க்கைக்காக அரசு கொடுக்கும் பணத்தில் சிறிய பங்கு தேவையின்றிச் செலவாகி வந்த நிலையில், தமிழக அரசின் புதிய அறிவிப்பு முதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியோர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புதான் அவர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு'ம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அட்டையின் மூலமாகப் பயனாளிகள் முழுத்தொகையையோ அல்லது பகுதித் தொகையையோ பெற்றுக் கொள்ளலாம். அதுவும் அந்த முதியவர் வங்கிக்குக் கஷ்டப்பட்டுச் செல்லக்கூடாது என்று கருதிய தமிழக அரசு அந்தத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வீடு தேடிச் சென்று கொடுக்கவும் அறிவித்துள்ளது.
இதற்காக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 2-ம் தேதி தமிழக முதல்வர் இத்திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
முதற்கட்டமாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆகிய மூன்று இடங்களில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
முதுமையின் வலியை உணர்ந்து, தமிழக அரசு செயல்படுத்தியுள்ள இத்திட்டத்தால் பெரியவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும், இத்திட்டம் தங்கள் பகுதிக்கு விரைவாக வர வேண்டும் எனத் தெரிவிக்கும் முதியவர்கள் அந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

