அரைப் பணியாகலாமா ஆசிரியர் பணி?
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற புதுமொழிக்கு உரியவர் ஆசிரியர் ஆவார். இவரை இறைவனுக்கும் முதன்மையானவராகக் கருதுவதால்தான் மாதா, பிதா, குரு (ஆசிரியர்), தெய்வம் என்று மக்கள் அழைக்கின்றனர். அறிவுக்கண்


எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற புதுமொழிக்கு உரியவர் ஆசிரியர் ஆவார்.
இவரை இறைவனுக்கும் முதன்மையானவராகக் கருதுவதால்தான் மாதா, பிதா, குரு (ஆசிரியர்), தெய்வம் என்று மக்கள் அழைக்கின்றனர்.
அறிவுக்கண் திறந்து, மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு, பண்பாட்டைக் கற்பித்து ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவது உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்டது ஆசிரியர்களின் பங்களிப்பு. அதனால்தான், சமூகத்தில் காலம் காலமாக மற்றவர்களைவிடவும் ஆசிரியர்கள் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், ஆசிரியர் சமூகத்தின்மீது உள்ள இந்த நம்பிக்கை எதிர்காலத்தில் மெல்ல, மெல்ல குறைந்துவிடுமோ என்ற கவலை நமக்குள் எழுகிறது.
இந்த அச்சத்துக்குக் காரணம் ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அண்மைக்காலமாக வரம்பு மீறி செய்யும் தவறுகளே.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வேதாரண்யம் பகுதியில் நடைபெற்ற பள்ளி ஆசிரியர்கள் தொடர்புடைய இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகிறது.
தன்னிடம் படித்து வந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய பள்ளி ஆசிரியருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் செய்தி மறுநாள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வெளியானபோது, ஆசிரியர் சமூகம் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரிடையே எழுந்த விமர்சனம் முகம் சுளிக்கச் செய்தது.
இந்தத் தீர்ப்பு வெளியான ஒரு மாத கால இடைவெளியில் நடந்த மற்றொரு சம்பவம் மற்றுமொரு ஆசிரியர் தொடர்புடையது.
பாங்கல் என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 19 பேர், தங்களது கைகளில் எரியும் சூடத்தை ஏந்தியவாறு அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.
பல மாணவர்கள் சூடு தாங்க முடியாமல், துடிதுடித்துப் போனார்கள். அதேநேரத்தில், மாணவர்கள் செய்த நேர்த்திக் கடனுக்கான காரணம்தான் என்ன?
அந்தப் பள்ளியில் அப்போதைய தலைமையாசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்திக்குப் பணி உயர்வில் இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டது.
தங்களோடு அன்புக்கும், மரியாதைக்கும் உரிய ஆசிரியர் தங்களைவிட்டுப் பிரிந்துபோகக் கூடாது என்பதுதான் பிரார்த்தனைக்கான காரணம்.
இதை அறிந்த தொடர்புடைய ஆசிரியர் மட்டுமல்ல, பெற்றோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். அதைத்தொடர்ந்து, மாணவர்களின் எண்ணமும் நிறைவேறியது. இந்தச் செய்தியும் பத்திரிகைகளில் கட்டம்கட்டி வெளியானது.
பொதுவாக, பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம், சலுகைத் திட்டங்களில் முன்பு இருந்து வந்த தேக்க நிலை மாறிவிட்டது.
தற்போது இடைநிலை ஆசிரியர் தொடங்கி அனைத்து நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு போதிய அளவு ஊதியத்தை அளிக்கிறது. விருப்பமான இடங்களில் பணி வாய்ப்பு போன்ற பல சலுகைகளும் கிடைக்கின்றன.
மகிழ்ச்சியோடு பணியைத் தொடர வேண்டிய ஆசிரியர்கள் அனைவருமே அந்த தொழிலுக்கான தர்மத்தை கடைப்பிடிக்கிறார்களா என்ற பரிசீலனையை ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திடமே விட்டுவிடலாம்.
முந்திரிக்கொட்டை வியாபாரம் தொடங்கி வட்டிக்குப் பணம் கொடுத்து வசூலிப்பது போன்ற தொழில்களில் ஈடுபடுவது, பணியாற்றும் இடத்தில் ஆசிரியர்களுக்குள்ளேயே சாதியப் பாகுபாட்டுடன் குழுக்களாகச் செயல்படுவது போன்ற சம்பவங்களில் சிலர் ஈடுபடுவதாக பொதுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதுதான் வேதனை அளிப்பதாக உள்ளன.
இதுபோன்ற சம்பவங்களில் சிலர் ஈடுபடுவது ஆசிரியர் சமூகத்துக்கே இழுக்கு என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்.
சமுதாயம் என்ற உள்கட்டமைப்பை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சிந்தனையுடைய மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால், திறமையும் பொறுப்பும் இல்லாதவர் உருவாக்கிய கட்டடத்தைப்போல சிதைந்து போக நேரிடும்.
ஆசிரியர் பணி அறப்பணி. இது அரைப் பணியாகி விடக்கூடாது. இதை குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்களாக உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...