தேவை "மணல் சேமிப்பு'த் திட்டம்!
மழை பெய்தால் வெள்ளம்! வெயிலடித்தால் வறட்சி! என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். இயற்கை தரும் கொடைகளை எப்படி நமது தேவைக்கேற்ப பயன்படுத்துவது என்பதை முழுமையாக அறிந்தும், அதன்படி நடக்காமல் நமக்கு நாமே தீ


மழை பெய்தால் வெள்ளம்! வெயிலடித்தால் வறட்சி! என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். இயற்கை தரும் கொடைகளை எப்படி நமது தேவைக்கேற்ப பயன்படுத்துவது என்பதை முழுமையாக அறிந்தும், அதன்படி நடக்காமல் நமக்கு நாமே தீமையை தருவித்துக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை.
மண்ணைக்கூட பெண்ணுக்கு உவமையாக்கிப் போற்றுவது நமது முன்னோர் மரபு. ஒரு குறிப்பிட்ட சத்துக் குறைந்தாலே உடல்நலம் பாதிக்கப்படும். அந்த வகையில் பெண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் மண்ணில் உள்ள பல தாதுக்களில் ஒன்று குறைந்தாலே மண்ணின் வளம் பாதிக்கப்படும். அத்துடன், மண்ணை நம்பி வாழும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படும்.
கடந்த 50 ஆண்டுகளில், நமது மண்ணின் வளம் பலவாறாகச் சுரண்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளாக அதிகளவில் மணல் சுரண்டப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது.
ஆறுகள் இல்லாத ஊர்களில் கூட, சிறுகுழந்தைகள் தெருவில் மணல் வீடு கட்டி விளையாடிய காட்சி எல்லாம் இப்போது பழங்கனவாகிவிட்டது.
மலை முகடுகளில் பெய்யும் மழை நீர் கீழ்நோக்கி ஓடிவரும்போது, கற்களின் மீதுபட்டு வரும். அப்படி ஓடிவரும் தண்ணீரின் வேகத்தில் கற்கள் சிறுசிறு துகள்களாகி மணல்களாக உருமாறி ஆறுகளில் படியும்.
இந்த மணல்களோ, நீரை உறிஞ்சும் பஞ்சுகள் போல தண்ணீரைத் தன்னகத்தே சேமிக்கும் தன்மையுடையன. மேலும், நீரில் இருக்கும் அசுத்தங்களை வடிகட்டி நிலத்தடி நீரைத் தூய்மைப்படுத்தும் வடிகட்டியாகவும் உள்ளன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு குறையவில்லை என்பதே ஆராய்ச்சியாளர் கருத்து. அப்படியிருக்க, நிலத்தடி நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறதே ஏன்?
பெய்யும் மழை நீரைச் சேமிக்கும் திட்டத்தில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. மழை நீரைச் சேமிக்க நமது முன்னோர் ஏற்படுத்தி வைத்திருந்த குளங்கள், குட்டைகள் எல்லாம் இப்போது குடியிருப்புகளாகிவிட்டன.
குடியிருப்புகளுக்காக அந்தந்தப் பகுதியில் உள்ள ஆறுகளில் இருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் எல்லாம் இப்போது கனவுசாட்சியங்களாகிவிட்டன. அந்தக் கால்வாய்கள் வழியாக வரும் ஆற்று நீருடன் மணலும் சேர்ந்து வந்து ஏரி, குளங்களில் நிறைத்தன. இதனால் அங்கு நீர் சேமிப்பு அதிகரித்தது.
அந்த ஏரிகளை வீட்டுமனைகளாக்கிய நாம், இப்போது எஞ்சிய நீர்நிலைகளையும் முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டோம். நீர்நிலைகளின் ரத்த நாளங்களான கால்வாய்களும் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மண்மூடி மறைந்துவிட்டன.
இத்தகைய நிலையில் நிலத்தடி நீரின் அவசியம் உணரப்பட்டது. அதையடுத்து கடந்த 2001 அதிமுக ஆட்சியில் மழைநீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பயனுள்ள இத்திட்டம், அடுத்து வந்த திமுக ஆட்சியில் மறக்கடிக்கப்பட்டது.
மழை நீரை நாமும் சேமிக்கவில்லை. சேமிக்கும் மணலையும் நாம் விட்டுவைக்கவில்லை. சிற்றோடையில் உள்ள மணல்கள்கூட கடந்த 5 ஆண்டுகளில் முழுவதுமாகச் சுரண்டப்பட்டுவிட்டன. பணத்துக்காக குக்கிராம மக்களின் உயிர் ஆதாரமான நீரோடைகளில் மணல்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மணல் வளம் எந்த அளவுக்கு உள்ளது? அதை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்? என்ற கணக்குகள்கூட அரசுத்துறைகளிடம் இல்லை. இப்படியே வரைமுறையின்றி மணல் எடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் மணல் என்பது தங்கத்தைவிட விலை உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஏஐடியூசி துணைத் தலைவர் கே.கே.ராஜன்.
தமிழகம் பூகோள ரீதியில் 73% கடினப்பாறைகளையும், 27% வண்டல் மண் நிறைந்தும் காணப்படுகிறது. இதில் பாறைகள் 8% நீரை மட்டுமே சேமிக்கும். வண்டல் மண் 30% நீரைச் சேமிக்கும். இதில் மணல்களின் பங்கே அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கண்மாய்களில் கோடைக்காலத்தில் பத்தடி தோண்டினாலே நீர் ஊறிய நிலை இருந்தது. ஆனால் இப்போது, பல நூறு அடி ஆழத்திலும் கூட நிலத்தடி நீரைக் காணமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குவாரிகள் எனும் பெயரில் நீரைச் சேமிக்கும் பாறைகளை உடைக்கிறோம். மணல்களைச் சுரண்டுகிறோம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நிலம் கூட நீரைச் சேமிக்கமுடியாத நிலை வந்துவிடும் என ஆய்வாளர்கள் அச்சப்படுகின்றனர்.
ஆகவே, மணல் சேமிப்புத் திட்டத்தை அரசு அறிவித்து, அதை ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்திட நடவடிக்கை தேவை.
ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருக்கும் மணல் அளவை அரசு ஆண்டுதோறும் வெளிப்படையாக அறிவித்து, அந்த மணல் வளம் காக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். மணல் வைத்து வீடு கட்டுவதைத் தவிர்க்க, மாற்றுப் பொருளையும் ஏற்படுத்துவது அவசியம்.
போர்க்கால அடிப்படையில், மணல் வளம் காக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படி நாம் செயல்படாவிட்டால், ""வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும்'' என்ற குறளுக்கு ஏற்ப நமது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை அமைந்துவிடும் என்பது எச்சரிக்கையல்ல. உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...