ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இங்கு ஆள்கள் கிடைக்கும்!

இங்கும் ஆள்கள் வேலை செய்கிறார்கள்', "வேலைக்கு ஆள்கள் தேவை' என்ற விளம்பரங்களைப் பல இடங்களில் பலரும் பார்த்திருக்கிறோம். அடுத்த சில தேர்தல்களுக்குள் "இங்கு ஆள்கள் கிடைக்கும்' என்ற விளம்பரம் தொங்கவிடப்பட

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:59 pm

சா. ஜெயப்பிரகாஷ்

இங்கும் ஆள்கள் வேலை செய்கிறார்கள்', "வேலைக்கு ஆள்கள் தேவை' என்ற விளம்பரங்களைப் பல இடங்களில் பலரும் பார்த்திருக்கிறோம். அடுத்த சில தேர்தல்களுக்குள் "இங்கு ஆள்கள் கிடைக்கும்' என்ற விளம்பரம் தொங்கவிடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

 "கிடைப்பார்கள்' என்றல்லவா சொல்லப்பட வேண்டும் என்று இலக்கண சுத்தம் தேட வேண்டாம். இதற்குப் பதில் கடைசியில்.

 நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைவிடவும் விழாக்கோலம் பூண்டு இருப்பது உள்ளாட்சித் தேர்தல்கள். "போடுங்கம்மா ஓட்டு' என்ற குரல் மெல்ல மருவி "ஓடுங்கம்மா ஓட்டு' எனச் சரியாக - ஆனால் தெரியாமல் கத்திக்கொண்டு செல்லும் சிறார்கள் இருந்தது ஒரு காலம்.

 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கொடி பிடித்து, வாக்கு கேட்டுச் செல்ல மக்களை வாடகைக்குப் பிடித்த காட்சியைக் காண முடிந்தது. தேர்தலில் நிற்பவர் தனது ஆதரவாளர்களுடன் அல்லது கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பதுதான் இப்படி மாறியிருக்கிறது.

 வேறொன்றும் இல்லை. முன்பெல்லாம் ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதானால், கட்சிக்காரர் ஊர் முழுக்கச் சென்று சுவரில் எழுதுவார். கொடி கட்டுவார், தோரணம் கட்டுவார், பந்தல் போடுவார், முழக்கமும் இடுவார். ஒருவர் ஒலிபெருக்கி கட்டுவார். ஒருவர் நாற்காலிகள் மட்டும் போடுவார். விடியவிடிய உழைப்பார்கள். பலருக்கும் வருமானம் கிடைத்தது, தொண்டர்களுக்கும் வருமானம் கிடைத்தது.

 இப்போது அப்படியல்ல. ஓர் ஒப்பந்தக்காரர். பந்தல், ஒலிபெருக்கி, விளக்கு வசதிகள் செய்து தரும் அவரே, குறிப்பிட்ட தொலைவுக்கு கொடிகளும், தோரணங்களும் கட்டுகிறார். முக்கிய பிரமுகர் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப் போனால் போதும். காலையில் எல்லாம் பளிச்சிடும்.

 அடுத்த சில ஆண்டுகளில் இதுவும் மாறலாம். அவரே சில நூறு பேரை வாகனங்களில் கூட்டிக் கொண்டும் வரலாம்!

 அதேபோலத்தான் தேர்தல் பிரசாரமும். இந்தத் தேர்தலில் ஒவ்வொரு நாளும் நூறு பேர் வரை வாடகைக்கு எடுக்கப்பட்டார்கள். இதிலே பெண்களுக்குத்தான் முன்னுரிமை. காலையில் ஒரு "ஷிப்ட்', மாலையில் ஒரு "ஷிப்ட்'. தனித்தனியே நூறு ரூபாய். சில இடங்களில் மதிய உணவும் உண்டு, கட்சி வண்ணத்தில் சேலையும் இலவசம்.

 இன்னும் சில இடங்களில் தலைவர்கள் வருகையின்போது (கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்) சாலையோரங்களில் வரிசையாக நிற்க வேண்டும். இதற்குத் தனியாக ஒரு எவர்சில்வர் குடம். அதன்மேல் ஒரு தேங்காய்! கூடவே சேலை, செலவுக்கு ரூ. 150.

 ஆயிரக்கணக்கான குடங்கள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தல் அலுவலர்களின் கண்களில் இவை படவே இல்லை என்பது பரிதாபம்.

 ஊரக வேலை உறுதித் திட்டத்தில்கூட இத்தனை சுத்தமாக ஊதியம் தரப்படவில்லை. காலையில் ஒரு "ஷிப்ட்' அதிமுகவுக்கும், மாலையில் ஒரு "ஷிப்ட்' திமுகவுக்கும் வேலை பார்த்தவர்களும் உண்டு. கையில் கொடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தால் போதுமே.

 சில இடங்களில் தொப்பி, டி} ஷர்ட் போன்றவையும் கிடைத்தன. பெண்களுக்கு சேலை, குடம் கொடுத்தார்களல்லவா? ஆண்களுக்குக் குடிக்க மதுவும், சாப்பிடப் பிரியாணியும். முதல் நாளே மதுக்கடைகளை மூடினாலும், தெருக்கள்தோறும் ஏராளமான சிறு கடைகள் உருவாயின. அந்தக் கடைசி நாளின் விற்பனையை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் இது உண்மையா? பொய்யா? என்று.

 இன்னும் சில இடங்களில் அரசு விடுதிகளிலேயே இவையெல்லாம் (சேலை, குடங்கள், மதுபாட்டில்கள்) பதுக்கிவைக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

 இதன் நீட்சியாகத்தான், அடுத்த தேர்தல்களில் சில பல ஒப்பந்ததாரர்கள் உருவாகலாம். ஏதோவொரு திரைப்படத்தில் கூட்டங்களுக்கு, பேரணிகளுக்கு, சோடா பாட்டில் வீசுவதற்கு- சூர்யா ஆள் அனுப்புவார் அல்லவா? அதுபோல.

 நூறு பேர் வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். அவர்களுக்கான சீருடை, உணவு, போக்குவரத்து, கூலி(!) எல்லாவற்றையும் ஒப்பந்ததாரர் கவனித்துக் கொள்வார். கொடி, துண்டுப் பிரசுரமும் அவரே அச்சிட்டுக்கொண்டு வந்துவிட்டாரென்றால் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது என்று பொருள். அங்கும் உழைப்புச் சுரண்டல் இருக்கும் என்பது தனிக்கதை.

 எந்தக் கூட்டங்களுக்கும் மக்களாகத் திரள்வதில்லை. கட்சியினரையும்கூட திரட்டித்தான் வருகிறார்கள். முக்கிய தலைவர் பேசும்போது கூட்டம் கலைவது இதனால்தான். மூலைக்கு மூலை பிரியாணி பொட்டலங்கள் விநியோகமும் உண்டு.

 நமக்கான பிரதிநிதியைத் தேர்வு செய்து மாநகராட்சிக்கும், நகராட்சிக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் அனுப்ப இத்தனை மெனக்கெடுகளையும், வருமானங்களையும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறோம். கிடைக்கவில்லையானால், உரிமை பறிபோனதைப்போல சண்டையிடுகிறோம்.

 இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோமல்லவா? அதனால் நம்மை (ஆள்கள்) கிடைப்பார்கள் என்று ஏன் போட வேண்டும்? "கிடைக்கும்' என்று சொல்வதுதானே சரியாக இருக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.