நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின் உற்பத்தியில் கவனம் தேவை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட பல காரணங்கள் கூறப்பட்டாலும், மின்வெட்டுதான் பிரதான இடத்தைப் பிடித்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.  இதைக் கருத்தில் கொண்டுதான், தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்ததும்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:36 pm

தி. இன்பராஜ்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட பல காரணங்கள் கூறப்பட்டாலும், மின்வெட்டுதான் பிரதான இடத்தைப் பிடித்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

 இதைக் கருத்தில் கொண்டுதான், தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்ததும் முதல்வர் ஜெயலலிதா தனது பேட்டியின்போது "தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை உருவாக்கப்படும்' என உறுதியளித்தார்.

 மின்வெட்டு என்பது அனைத்துத் தரப்பினரையும் மிகவும் பாதித்த விஷயம். இதனால், மின்வெட்டு இல்லாத நிலை எப்பொழுது வரும் என்ற ஏக்கம் மக்களிடையே இருந்து கொண்டே இருக்கிறது.

 என்ன செய்தால் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழாமல் இல்லை. இதே கேள்வியை மின்வாரிய உயர் அதிகாரிகளிடமும், ஓய்வுபெற்ற பொறியாளர்களிடமும் கேட்டபோது கிடைத்த பதில்கள் சற்று சங்கடமானவை, இருப்பினும் சாத்தியமானவை.

 தமிழகத்தின் மின்சாரத் தேவை ஏறத்தாழ 12,700 மெகா வாட். ஆனால், இப்போது 8,500 முதல் 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நம்மால் உற்பத்தி செய்யப்படுகிறது.

 ஏறத்தாழ 3,000 மெகாவாட் அளவு மின்சாரம் பற்றாக்குறையாகவே இருந்துகொண்டு இருக்கிறது.

 மின்உற்பத்தியைப் பொறுத்தவரை 4 அனல் மின் நிலையங்கள் மூலம் ஏறத்தாழ 2,970 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, மொத்த உற்பத்தியில் 29.1 சதம்.

 அனல் மின்நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் அனைத்துமே போதிய பராமரிப்பு இல்லாமலும், முறையாக இயக்கப் போதிய பொறியாளர்கள் இல்லாததும் மின் உற்பத்தி குறைவதற்கு ஒரு காரணம் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

 அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி பெருமளவில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

 இந்த நிலக்கரிகள் அனைத்தும் தரம் குறைந்தவைகளாக இருப்பதால் எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தியை எட்ட முடியவில்லை.

 அதிமுக அரசு இந்தப் பிரச்னையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

 புனல் (நீர்நிலைகள்) மின்நிலையங்களில் மின் உற்பத்தியை உறுதியாகக் கூறிவிட முடியாது. தண்ணீர்வரத்தைப் பொறுத்து 2,186 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

 இருப்பினும், தமிழகத்தில் உள்ள 36 புனல் மின் நிலையங்களில் மொத்த உற்பத்தித் திறனைவிட, பாதியளவு மின்சாரமே இப்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் கவனம் செலுத்தினால் மின்உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 அனல் மற்றும் புனல் மின்நிலையங்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட "பயோ கியாஸ்' என்று அழைக்கப்படும் இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தி என்பது எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை.

 டெல்டா மாவட்டப் பகுதிகளான கோவில்களப்பால், குத்தாலம், வழுதூர் போன்ற இடங்களில் மின் உற்பத்தியில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களில் இப்போது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். பயோ கியாஸ் மூலம் மின் உற்பத்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 இவற்றுக்கெல்லாம் மேல், தமிழகத்தின் மின்சாரத் தேவையில் பாதியளவை பூர்த்தி செய்வது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம்தான். ஏறத்தாழ 5,690 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகளில் சில சமயம் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். காற்று குறைந்தால் 1,500 மெகாவாட் வரைதான் மின்சாரம் கிடைக்கும்.

 காற்றாலைகள் அனைத்தும் இப்போது தனியார் வசமே உள்ளன. இதில், வேடிக்கை என்னவென்றால் தனியாரிடம் உள்ள காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கும் அரசாங்கம், காற்றாலைகளை நிறுவியுள்ளவர்களின் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை வழங்கும்போது குறைந்த விலையையே நிர்ணயம் செய்துள்ளது. இதனால், அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

 ஒரு காற்றாலை அமைக்க ரூ. 2 கோடி வரை செலவாகும் என்ற நிலையில், அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு, அதிக அளவில் காற்றாலைகளை அமைக்க முன்வந்தால் மின்உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 18 சதம் இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், சில தனியார் தொழில்சாலைகளில் திருடப்படும் மின்சாரமும் இழப்பு கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

 மின்திருட்டைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையினர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட்டால் மின்திருட்டைத் தடுக்க முடியும். இதனால், ஏறத்தாழ 500 மெகாவாட் வரை மின்சாரம் மிச்சமாகும்.

 தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை வகுப்பதற்கு முன், இப்போது நடைபெற்று வரும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டியது அதிமுக அரசின் தலையாய கடமையாகும்.

 வடசென்னை, மேட்டூர், வேலூர், தூத்துக்குடி, உடன்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி நிலையப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

 விரைவில் இந்தப் பணிகளை முடித்தால் ஏறத்தாழ 1,000 மெகாவாட் வரை கூடுதலாக மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து இப்போதைக்கு மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர் விவரம் அறிந்த மின்வாரிய அதிகாரிகள்.

 இதில், பல சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் அரசு உடனடியாகத் தலையிட்டு மின் உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே இப்போதைய மின் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.