ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

துதிபாடிகளுக்கு இடம் அளிக்காதீர்!

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மீது இருந்த தீராத கோபத்துக்குத் தேர்தல் மூலம் மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டார்கள். புதிதாய்ப் பொறுப்பேற்ற அதிமுக அரசின் ஆரம்பக் காலச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும்,

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:44 pm

தி. இன்பராஜ்

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மீது இருந்த தீராத கோபத்துக்குத் தேர்தல் மூலம் மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டார்கள்.

புதிதாய்ப் பொறுப்பேற்ற அதிமுக அரசின் ஆரம்பக் காலச் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், புதிய பாதையை நோக்கித் தமிழகம் பயணிப்பதாகவும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

தெளிவான அமைச்சரவை, எளிமையான அரசு விழாக்கள், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்டும் ஆர்வம் என பல நல்ல விஷயங்களை அதிமுக அரசின் தொடக்ககாலச் செயல்பாடுகளில் இருந்து கண்டறிய முடிகிறது.

மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அரசு தீட்டினாலும், அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் பணி அனைத்துத் துறை அதிகாரிகளின் கையில்தான் உள்ளது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால் மட்டுமே சிறப்பான ஆட்சி என்ற பெயரை மக்களிடத்தில் இருந்து பெற முடியும்.

ஆட்சியாளர்களின் கருத்துகளுக்கு "தலையாட்டும் பொம்மை'களாக இருந்துவிடாமல், தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தும் விதங்கள் குறித்தும், அதிலுள்ள நடைமுறை சிக்கல்களையும் தக்க சமயத்தில் எடுத்துக்கூற வேண்டியது உயர் அதிகாரிகளின் பொறுப்பு.

அனைத்துத் தரப்பு மக்களிடமும் "சிறந்த அரசு' என்ற பெயரைப் பெற மாவட்ட நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது. மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும் பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் பணியாகும்.

இதற்காகவே, புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவர்களில், 7 பேர் பெண்கள்.

ஆட்சிகள் மாறும்போது ஆட்சியர்களும் மாறுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், 29 மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல சவால்கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை. "ஒளிவுமறைவற்ற நேர்மையான நிர்வாகம்' என்ற தாரக மந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியர்களிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளாராம்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு என்பது மிகவும் சவாலானது. மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு, நீதி, நிர்வாகம் அனைத்தும் ஆட்சியரின் கீழ் வரும். மேலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதும் ஆட்சியரின் கடமை.

ஆட்சியர் நினைத்தால் எந்த நேரத்திலும், எந்தத் துறை அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளலாம். மாவட்டத்தின் எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டாலும், அந்தப் பிரச்னையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, பிரச்னையை சுமுகமாக முடிப்பது ஆட்சியரின் தலையாய பணி.

மாவட்டத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆட்சியர்கள் தங்களது பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்தாலும் அல்லது தவறு செய்யத் தொடங்கினாலும் கெட்ட பெயர் ஏற்படுவது அரசுக்குத்தான்.

ஒரு குடும்பத் தலைவர் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டு தனது குடும்பத்தை உயர்த்துகிறாரோ, அதுபோல, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட மக்களைத் தனது குடும்ப உறுப்பினர்களாகப் பாவித்து, மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது அவசியமாகும்.

ஆனால், அரசியல்வாதிகளில் சிலரும், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வலம் வரும் சுயநலவாதிகள் சிலரும் புதிதாய் வரும் ஆட்சியரைத் தங்களது வளையத்துக்குள் வைத்துக்கொள்ள முயலுவது அனைத்து மாவட்டங்களிலும் வாடிக்கையாகிவிட்டது.

புதிதாய் ஓர் ஆட்சியர் பொறுப்பேற்றுவிட்டால், அவரைச் சந்தித்து அறிமுகமாகிக் கொள்ளுவதற்கென்றே மாவட்டந்தோறும் "துதிபாடி' கூட்டங்கள் ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி வரும். இதற்கு, சில "தொடர்பு' அலுவலர்களும் உடந்தையாக இருப்பதுதான் வேடிக்கை.

இந்த துதிபாடிகளின் ஒரே நோக்கம். தன்னை ஆட்சியருடன் நெருக்கமானவர் என்பதை மக்களிடம் காட்டிக்கொள்வதுதான் என்பதை ஆட்சியர்கள் உணர வேண்டும்.

துதிபாடிகள் கொண்டுவரும் கோரிக்கைகளில் இருக்கும் நியாயமானதை மட்டும் எடுத்துக்கொண்டு, தேவையில்லாத கோரிக்கைகளை உடனடியாகத் தவிர்த்துவிடுவது நல்லது.

மேலும், பாராட்டு விழா நடத்துகிறோம் என அணுகும்போது, அன்போடு தவிர்த்துவிடுவது ஆட்சியர்களுக்கு நல்லது. தங்களை மக்களின் சேவகன் என்று கூறும் துதிபாடிகளின் பின்னணியை சக "நல்ல' அதிகாரிகள் மூலம் ஆட்சியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.