நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஏற்றம் தரும் மாற்றம்

ஒரு பாரம் இறங்கியதுபோல் இருக்கிறது''. ""மீண்டும் சுதந்திரம் அடைந்தது போன்ற புத்துயிரூட்டும் சுவாசத்தை அனுபவிக்கிறோம்'' என்ற பல சந்தோஷ உணர்வுகள் மே மாத மாற்றங்களால் எதிரொலித்தன.  இதற்கு முக்கிய காரணம்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:42 pm

ஆர். நட​ராஜ்

ஒரு பாரம் இறங்கியதுபோல் இருக்கிறது''. ""மீண்டும் சுதந்திரம் அடைந்தது போன்ற புத்துயிரூட்டும் சுவாசத்தை அனுபவிக்கிறோம்'' என்ற பல சந்தோஷ உணர்வுகள் மே மாத மாற்றங்களால் எதிரொலித்தன.

 இதற்கு முக்கிய காரணம் மக்களால் உணரப்பட்ட பாதுகாப்பின்மையால் தொற்றிக்கொண்ட பயம். என்ன நடக்குமோ என்ற அச்சம் ஒருபுறம்; நடந்தவைகளைப் பார்த்தால் எதுவும் நடக்கலாம் என்ற விரக்தி எல்லோரையும் பாதித்தது என்றால் மிகையில்லை. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. வேதனை என்னவென்றால் பொறுப்பில் உள்ளவர்கள் இதைப் போக்க முற்படவில்லை. ஆனால், உரிய நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் மக்கள்.

 சட்டம் ஒழுங்கு சரிவர இயங்கவில்லை என்றால் எந்த ஓர் அபிவிருத்தி தரக்கூடிய செயல்களும் நடைபெற வாய்ப்பில்லை. ஏன் இயல்பு வாழ்க்கையையும் இது பாதிக்கும். காவல்துறையின் முக்கிய பொறுப்பு இத்தகைய அச்சத்தை நீக்கி நம்பிக்கையூட்டும் விதத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது ஒன்றுதான்.

 சிறந்த காவல்துறைக்கு மூன்று குணாதிசயங்கள் அவசியமாகின்றன. ஒன்று - சட்டத்தை அமல்படுத்தும் திறன். இரண்டாவது - பணியில் பரிமளிக்கும் கடமையுணர்வு. மூன்றாவது - மனித உரிமைகள் மேவிய நடவடிக்கை.

 இத்தகைய காவல்துறையின் சிறந்த சட்ட அமலாக்கத்துக்கு சமூக விரோதிகள் பயப்பட வேண்டும். பணித்திறனுக்கு அந்தக் காவல் துறை போற்றப்பட வேண்டும். மனித உரிமைகளை மதிக்கும் அத்தகைய காவல்துறை வணக்கத்துக்கு உரியதாகிறது. இந்த உன்னத நிலையை அடைய காவல்துறை முற்பட வேண்டும்.

 கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, உலக நாடுகளில் எதிரொலித்தது. வீடுகள் வாங்குவதற்கு வங்கிகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடன் திருப்பிக் கொடுக்கப்படாததால் ஏற்பட்ட பொருள் இழப்பு, அமெரிக்கா தொடர்ந்த இராக் யுத்தம், ஆப்கானிஸ்தான் பிரச்னை போன்றவை பொருளாதாரச் சுமையைப் பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

 அமெரிக்க டாலரின் மதிப்பை வைத்துத்தான் உலக வர்த்தகமே நடைபெறுகிறது. அதன் பின்னடைவு சர்வதேச அளவில் தேக்க நிலையை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தால் வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்தன.

 மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும்போது குற்றங்கள் பெருகும் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு. தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகளிலும் சமூக விளைவுகளை எதிர்நோக்கிக் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன.

 அமெரிக்காவில் 1933-ம் ஆண்டு "கிரேட் டிப்ரஷன்' என்று சொல்லப்படும் அதீத பொருளாதாரச் சரிவால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய சமுதாயத்தில் நிலவிய சுயகட்டுப்பாட்டால் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டன.

 ஆனால், 1960-ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலை, அதைத் தொடர்ந்து 1970-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் விலையை ஏற்றியதில் ஏற்பட்ட உச்சகட்டப் பிரச்னை உலக நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது.

 இதன் விளைவாக, குற்றங்கள் அதிகரித்தன. இதன் அடிப்படையில் குற்றநிகழ்வு அந்தந்த இடங்களின் பொருளாதார நிலையோடு தொடர்புடையது என்ற முடிவை சமூகக் கண்ணோட்ட நிபுணர்கள் ஆதரித்தனர்.

 கஷ்ட ஜீவனத்தோடு குற்ற நிகழ்வுகள் பின்னிப்படருமா என்ற கேள்விக்கு உரிய பதில் பெறுவதற்கு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

 ஜேம்ஸ்வில்சன் என்ற குற்ற ஆய்வு நிபுணர் அமெரிக்காவில் நியூயார்க், சிகாகோ, கலிபோர்னியா போன்ற முக்கிய நகரங்களில் குற்றநிகழ்வுகள் பற்றியும், அவை குறைந்துள்ளதா, பெருகியுள்ளதா, அதற்கு உரிய காரணங்கள் என்ன என்பதைப்பற்றி முழுமையான ஆராய்ச்சி மேற்கொண்டார்.

 பொருளாதார நிலை அடிப்படையிலும், அந்தந்த இடங்களின் சமூகப் பிரச்னைகள், இனவாரியாக மக்கள் வாழும் இடங்களில் போதைப் பொருள்களின் நடமாட்டம், அதோடு இணைந்த குற்றங்கள் என்ற அடிப்படையில் பல்முனைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்பட்டன.

 2010-ம் ஆண்டு கொடுங்குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளது என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு அறிவித்தது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைவாக வன்முறைக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொள்ளை நிகழ்வுகள் 8 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், வாகனத் திருட்டு 17 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது பதியப்பட்ட குற்றங்களிலிருந்து தெரிய வருகிறது.

 நியூயார்க் நகரில் கன்னக்களவு 10 சதவிகிதம் குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், பொருளாதார நிலை சரியில்லாதபோது எவ்வாறு குற்றங்கள் குறைந்தன என்று நிபுணர்களைச் சிந்திக்க வைத்தது. நியாயமான வேலையில்லாதபோது சட்டவிரோதமான வேலைகள் நடைபெறுவது இயல்பு. வறுமையும் வேலையின்மையும் தானே மனிதனைக் குற்றங்களில் ஈடுபடத் தூண்டும்.

 அமெரிக்காவில் குற்றங்கள் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் அதிகமான அளவில் குற்றம் புரிந்தவர்கள் அதிக அளவில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது இங்கிலாந்து, கனடா மற்றும் மேலைநாடுகளைவிட அதிகம். குற்றம் புரியக்கூடியவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் குற்றநிகழ்வுகள் குறைந்துள்ளன.

 இன்னொரு காரணம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தில் பரவியுள்ளது.

 வீடுகளில் பாதுகாப்பு வளையங்கள், அபாய ஒலி எழுப்பக்கூடிய உபகரணங்கள் பொருத்தப்படுதல், தனியார் பாதுகாப்பாளர்களை நியமித்தல் போன்ற குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் அதிக அளவில் சொத்து சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறைந்ததற்குக் காரணமாக அமைந்துள்ளது. இது இன்னொரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்.

 மூன்றாவதாக, காவல் துறையின் செயல்பாடுகள் நெறிமுறைப்படுத்தப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குற்றம் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது குற்றங்கள் குறைவதற்கு வழிவகை செய்துள்ளது.

 மேற்கூறியவற்றுள் மூன்றாவது காரணமான காவல்துறையின் நவீன அணுகுமுறை நமது கவனத்தை ஈர்க்க வேண்டும். இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை சமூக ஏற்றத்தாழ்வுகளாலும், வறுமை சந்தர்ப்ப சூழ்நிலையாலும் குற்றங்கள் நிகழ்கின்றன.

 படிப்பறிவின்மை நல்லது, கெட்டது எது என்று உணரும் தன்மையை இழக்கச் செய்கிறது. அதை மனதில் கொண்டுதான் சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளுக்கு கல்வி கற்க ஊக்கம் கொடுத்து வசதி செய்து கொடுக்கப்பட்டது.

 ஆனால், மேலை நாடுகளில் நிலைமை வேறு. வசதி இருந்தும் குற்ற வாழ்க்கையை மரபுக் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். குற்றம் நிகழும் இடங்களை ஆராயும் "ஹாட் ஸ்பாட் போலிஸிங்' என்ற அணுகுமுறை அமெரிக்காவில் பல நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.

 நமது காவல்துறையிலும் கரும்புள்ளி இடங்கள் என்று வழக்கமாகக் குற்றங்கள் நிகழும் இடங்கள், பழம் குற்றவாளிகள் வாழும் இடங்கள் குறிக்கப்பட்டு அங்கு போலீஸ் ரோந்து முடுக்கிவிடப்படுகிறது. இது மிக முக்கியமான நடவடிக்கை. இதைத் தவறவிட்டால் நிச்சயமாகக் குற்றங்கள் பெருகும்.

 மேலும், குற்றம் நிகழும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். ஏனோதானோ என்று மேலெழுந்தவாரியாகக் குற்றம் நடந்த இடங்களை ஆராய்ந்தால் போதாது. பாதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுக்காவலைத் தீவிரமாக்கினால் குற்றங்கள் குறையும் என்பதை அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

 வட்டாரக் கலாசாரமும் சமூக மதிப்பீடுகளும் குற்ற நிகழ்வுகளை நிர்ணயிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போக்கிரிகளின் ஆதிக்கத்தை வளரவிட்டால் அது வட்டாரக் கலாசாரத்தைப் பாதிக்கும். இது குற்றநிகழ்வுகளுக்கு வித்திடும்.

 இதைத்தான் சமீபகாலத்தில் அனுபவித்தோம். இதை மனதில்கொண்டு காவல்துறை முனைப்பாகச் செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும். அது நிலைத்து நிற்கத் தொடர் முயற்சி எடுக்க வேண்டும்.

 பிகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் சர்வசாதாரணமாகத் துப்பாக்கி ஏந்திய தாதாக்கள் நடமாடுவதைத் தொலைக்காட்சியில் காண்கிறோம். உரிமங்கள் இல்லாத ஆயுதங்கள் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆயுதங்கள் கலாசாரம் மற்ற இடங்களிலிருந்து பரவும் வாய்ப்பு உள்ளது.

 குடும்பங்களில் நிலவும் கட்டுப்பாடு, தரமான கல்வி நிலையங்கள், நிலையான சமூக மதிப்பீடுகள் ஆகியவை ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.

 மற்றவர்கள் பொருளை அபகரிப்பது, அரசாங்கப் பணத்தைக் கையாடுவது, ஊழல் புரிவது இழிவான செயல் என்று வெட்கித் தலைகுனிய வேண்டும். தீயதை விட்டு ஒழித்தலே நிலையான செல்வம் போன்ற நற்சிந்தனைகள் வளர வேண்டும். சமூக மதிப்பீடுகளின் மதிப்பு, அதன் மதிப்பை மதித்தால்தான் நிலைக்கும்.

 எது வாழ்வதற்கு உகந்த நல்ல நகரம் என்று பார்க்கும்பொழுது, எந்த நகரத்தில் அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாதிக்கப்படாதவர்களும் இணைந்து அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிறார்களோ அதுவே சிறந்த நகரம் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கச் சிந்தனையாளர் úஸôலான் கூறியது இன்றும் பொருந்தும்.

 சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நேர்மையாக நடவடிக்கை எடுப்பதே இன்றைய நிலையில் காவல்துறையின் தலையாய பொறுப்பு. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. தமிழகம் மீண்டும் அமைதிப்பூங்காவாகக் காட்சியளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.