சிறைச்சாலை என்ன செய்யும்?
ஆசியாவிலேயே மிகப்பெரியதும் இப்போது நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்படுவதுமான திகார் சிறைச்சாலை மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. இப்போது அரசியல் பிரபலங்களின் வருகையா


ஆசியாவிலேயே மிகப்பெரியதும் இப்போது நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்படுவதுமான திகார் சிறைச்சாலை மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
இப்போது அரசியல் பிரபலங்களின் வருகையால் இந்தச் சிறை உல்லாசபுரியாக மாறிவிட்டிருப்பது விசாரணை நீதிமன்ற நீதிபதி திடீர் சோதனை மேற்கொண்டபோது தெரியவந்துள்ளது.
இப்போது நாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் மற்றும் ரவுடிக் கைதிகள் திகார் சிறையில் சுதந்திரமாகவும், தங்கள் விருப்பம்போலவும் மற்ற கைதிகளைச் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.
சிறை விதிமுறைகளுக்கு மாறாக தேநீர், பிஸ்கட், கார வகைகள் விற்பனை நடைபெறுகிறது. சிறைக்கொட்டடிகளின் அறைகள் பூட்டப்படுவது இல்லை; பிரபலங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வருவது போன்றவை அதிரடிச் சோதனையில் தெரிய வந்துள்ளது.
2ஜி ஊழலில் சிக்கியுள்ள பிரபலங்கள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிக்கியுள்ள பிரபலங்கள் மற்றும் நால்கோ முறைகேடு வழக்கில் சிக்கியுள்ளவர்களின் சிறைக்கதவுகள் பூட்டப்படாமல் இருப்பதும், அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கான சலுகைகளை சிறை அதிகாரிகள் கொடுத்திருப்பதை நீதிபதி நேரில் பார்த்திருக்கிறார். அதிகாரம் மிக்க சில ஆயுள் தண்டனைக் கைதிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகும் அறையில் இல்லாமல் தோட்டத்தில் இருப்பதும் தெரியவந்தது.
காமன்வெல்த் விளையாட்டு முறைகேட்டில் கைதாகி திகார் சிறையில் உள்ள சுரேஷ் கல்மாடி, திகார் சிறைக் கண்காணிப்பாளர் அறையில் சிற்றுண்டி, பிஸ்கட், கார வகைகள் போன்றவைகளைச் சாப்பிடும்போது நீதிபதியிடம் கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
இவ்வாறு சிறையில் தான் கண்ட காட்சிகளை நீதிபதி அறிக்கையாகத் தாக்கல் செய்திருப்பதன் மூலம் இது தெரிய வந்துள்ளது. ஊழல் எல்லாத்துறைகளிலும் ஊடுருவி இருப்பதுபோலவே சிறைத்துறையிலும் கோலோச்சி வருகிறது. சிறை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் உள்ள தொடர்பு அரசியல் தலையீடு காரணமாகவே ஏற்படுகிறது.
அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும் பணிந்து சலுகை தரும் போக்கு, அளவுக்கு மீறும்போது நடவடிக்கை என்ற பெயரில் செய்திகள் வரும்; பின்னர் அது மறந்துபோகும்.
இதற்கு ஆளும் கட்சியினரின் செல்வாக்கும், கறுப்புப்பண முதலைகளின் தலையீடும் கிரிமினல் குற்றவாளிகளைச் சிறைக்குள்ளேயே வளர்த்துக்கொண்டு வருகிறது. பல கொலை, கொள்ளைச் சம்பவங்களும் சிறைக்குள்ளேயே திட்டமிடப்படுகின்றன.
இவர்களைத் தவிர, அப்பாவிகள் சிலர் எப்படியோ காவல்துறையின் கவனமின்மையாலும், அவசரக் கோலத்தாலும், பழிவாங்கும் நோக்குடனும் விசாரணைக் கைதிகளாகச் சிறைக்கு வந்து படும்பாடு எழுத்தில் வடிக்க இயலாதவை; முறையான சட்ட உதவி கிடைக்காத நிலையில் ஏழ்மையிலும், அறியாமையிலும் சிக்கிக் கொண்டவர்கள் - குறிப்பாக அபலைப் பெண்களும், அறியாத இளைஞர்களும் இதிலிருந்து கரையேற முடியாமல் வாழ்விழந்து போனவர்கள் ஏராளம்.
இந்தச் சிறைகளில் நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள், தண்டனைக் கைதிகளோடு பழக நேர்வதால் அவர்களை அறியாமலேயே குற்ற உலகத்துக்குள் நுழைந்து விடுகின்றனர். புதிதாகச் சிறைக்கு வருபவர்கள் சிறிது காலத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இந்தியாவில் மொத்தம் 1,356 சிறைச்சாலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள 3 லட்சம் கைதிகளில் 70 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள். காவல்துறையின் அலட்சிப்போக்காலும், நீதிமன்றங்களின் தாமதங்களாலும் இது ஒரு முடிவுக்கு வராமல் வளர்ந்து கொண்டிருக்கிறது.
கைதிகளில் பலர் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்ற விவரங்களை அறியாத அப்பாவிகள். எந்தக் குற்றத்துக்கும் எந்தத் தீர்ப்பும் அளிக்கப்படாத நிலையில் வாழ்வோர் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் சட்டமும், நீதியும், காவல்துறையும் தூங்குகின்றன. குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் தண்டனை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்?
மனித உரிமைச் செயல்பாட்டாளரும், மருத்துவருமான பினாயக் சென், தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியில் உச்ச நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்ட அவர், 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளிவந்துள்ளார். அவர் இந்தச் சிறை வாழ்க்கையை, ""எனது வாழ்வின் இருண்ட நாள்கள்'' என்று கூறியுள்ளார்.
""ஏழைகளுக்கு நீதியோ, உருப்படியான சட்ட உதவியோ கிடைக்கப் போவதில்லை. இந்த அமைப்பு அவர்களுடைய விஷயத்தில் நேர்மையுடனோ, ஊக்கத்துடனோ நடந்துகொள்ளப் போவதில்லை...'' என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மத்திய சிறைகள், மகளிர் சிறைகள், கிளைச் சிறைகள் என மொத்தம் 134 சிறைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இவற்றில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் 18 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளின் நடவடிக்கை மற்றும் கைதிகளைச் சந்திப்பவர் யார், எவர் என்பது பற்றி அரசுக்குத் தகவல் தெரிவிக்கவே உளவுத்துறை செயல்பட்டு வருகிறது.
சிறைச்சாலைகளில் பாதுகாப்பில் ஈடுபடும் ஜெயிலர்கள், வார்டன்கள், சிறைக் கண்காணிப்பாளர்கள் என இவர்களில் சிலர் கைதிகளுக்குச் சாதகமாக நடந்து வருவது தெரிய வந்துள்ளது. சிறைக் கட்டுப்பாடுகளை மீறி செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விநியோகம் செய்வதும், விற்பனை செய்வதும் தெரிந்த உண்மைதான்.
ஆனால், இவற்றை முற்றிலும் தடுக்க முடியாமல் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்படிப்பட்ட சிறைகளிலிருந்து வெளிவருபவர்களால் சட்டம்-ஒழுங்கு மேலும் கெடும் என்று உளவுத்துறை அதிகாரிகளே கவலைப்படுகின்றனர்.
சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்செயல்பாடுகளில் திருச்சி சிறை முதலிடம் பிடிக்கிறது. அதற்கடுத்து பாளையங்கோட்டை சிறையும், மூன்றாவது இடத்தை சென்னை புழல் சிறையும் பெற்றிருப்பதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் சிறைத்துறையில் மலிந்துவிட்ட ஊழல்களே. இன்று நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பு பற்றிய பேச்சாகவே இருக்கிறது. சட்டம் வந்தால் மட்டும் போதுமா? செயல்படுத்த வேண்டாமா?
"காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்துவிட்டு இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரிக்கிறது' என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். ரகுபதி "கனத்த இதயத்தோடு' இதைத் தெரிவிப்பதாகவும், நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
""தண்டனைக்குரிய குற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டால் அந்தப் புகாரைப் பெற்ற உடனே வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்வது போலீஸ் அதிகாரியின் தலையாய கடமை'' எனப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. செயல்படுத்த வேண்டிய காவல்துறை நீண்ட உறக்கத்தில் நிம்மதியாக இருக்கிறது.
"அந்தமான்' சிறை சொல்லும் கதையை நாம் மறக்க முடியுமா? அந்தக் காலத்தில் சிறைச்சாலைகள் அரசியல் கைதிகளால் நிரம்பி வழிந்தன.
காந்திஜி, நேதாஜி, நேரு, ராஜாஜி, பெரியார், காமராஜ் போன்றவர்கள் நாட்டுக்காகச் சிறை சென்றனர். பொதுவுடைமையாளர்கள் சிறையிலேயே வாழ்ந்தனர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிறையில் செக்கிழுத்த கொடுமை எங்கே? தொழுநோயாளியாக வெளிவந்த சுப்பிரமணிய சிவா எங்கே?
இந்தக் காலத்தில் அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு சிறைகளில் உல்லாச வாழ்வு நடத்துகின்றனர். சிறைச்சாலைகள் சீர்திருத்தச் சாலைகளாக இருக்க வேண்டும்.
குற்றவாளிகளாக வரும் அவர்கள் திருந்திய மனிதர்களாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நீதித் துறையினரும், மனித உரிமை ஆர்வலர்களும் பல காலமாகக் கூறி வருகின்றனர். ஆனால், அரசாங்கம் பொருள்படுத்துவது இல்லை.
சிறைத் துறைச் சீர்திருத்தங்களுக்காக 1980-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த "முல்லா குழு' அளித்த பரிந்துரையை வெளிப்படுத்தவே இல்லை. தேசிய மனித உரிமை ஆணையம் 1996-ம் ஆண்டு அளித்த ஆய்வறிக்கையும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
"கல்விச் சாலைகள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்பது சிந்தனையாளர்களின் கருத்து. ஆனால், இப்போது நாட்டில் கல்விச்சாலைகளும் மாணவர்களால் நிரம்பி வழிகின்றன. சிறைச்சாலைகளும் குற்றவாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் குற்றவாளிகள் தாங்களாகவே திருந்தாவிட்டால் சிறைச்சாலைகள் என்ன செய்யும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...