எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அரசுக்குத் தனிச் சட்டமா?

சட்டம், ஒழுங்கைக் காக்க காவல் துறை உள்ளது. சட்டத்தை தனிநபர்கள் யாரும் கையில் எடுக்க முடியாது. ஆனால், ஓர் அரசு நினைத்தால் அந்தச் சட்டத்தையே யார் கையிலாவது துப்பாக்கியுடன் தூக்கிக் கொடுக்க முடியுமா? சத்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:10 pm

எஸ். ராஜாராம்

சட்டம், ஒழுங்கைக் காக்க காவல் துறை உள்ளது. சட்டத்தை தனிநபர்கள் யாரும் கையில் எடுக்க முடியாது. ஆனால், ஓர் அரசு நினைத்தால் அந்தச் சட்டத்தையே யார் கையிலாவது துப்பாக்கியுடன் தூக்கிக் கொடுக்க முடியுமா?

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுநாள்வரை அதுதான் நடந்தது. நக்ஸல் எதிர்ப்புப் போரில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தும் நோக்குடன் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்டு, "சல்வா ஜுடும்', "கோயா கமாண்டர்ஸ்' என்ற பெயரில் அமைப்புகளை ஆரம்பித்ததுடன், அவர்களது கையில் நவீன துப்பாக்கியையும் தூக்கிக் கொடுத்தது. சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என அழைக்கப்பட்ட இந்த இளைஞர்களுக்குக் குறைந்தபட்சத் தகுதி என்று எதுவுமே கிடையாது. வெறும் ஐந்தாம் வகுப்புப் படித்தவர்கள்கூட பணியில் நியமிக்கப்பட்டனர்.

மேலோட்டமாகப் பார்க்கையில் அந்த இளைஞர்களுக்கு அரசே வேலைவாய்ப்பு அளித்ததைப் போன்று தோன்றினாலும், உண்மையில் அவர்கள் போர்முனைக் கேடயங்களாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.

சிறப்பு போலீஸ் என்று பெயர் மட்டும்தான் பெரிதாகத் தோன்றும். குறைந்த ஊதியம், நக்ஸல்களுக்கு எதிரான களப்போரில் முன்வரிசையில் இறக்கிவிடப்படுதல் என பலிகடாவாகத்தான் இவர்கள் கையாளப்பட்டனர்.

சத்தீஸ்கர் அரசின் இந்த நடவடிக்கையை சட்டவிரோதம் எனக் கூறி, சல்வா ஜுடும் அமைப்பைக் கலைக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இருந்தும் இதை ஏற்க மனமில்லாமல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாநில அரசு தீர்மானித்துள்ளது.

சத்தீஸ்கர் மட்டுமன்றி, மேலும் சில மாநிலங்களில் இத்தகைய அமைப்பை அரசே ஆரம்பித்து அவற்றின் செயல்பாடுகள் தோல்வியில் முடிந்துள்ளன. இருந்தும் சத்தீஸ்கர் அரசு மட்டும் விடாப்பிடியாக இதைச் செயல்படுத்தி வந்தது. பாஜக ஆளும் மாநிலம் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பாஜக அதிருப்தியும், காங்கிரஸ் வரவேற்பும் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசியலை விடுங்கள், நியாயமாக நடுநிலையுடன் அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பயங்கரவாதத்தில் இருந்து மக்களைக் காக்க வேண்டிய அரசு, அந்தப் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அதே மக்களுக்கு ஆயுதங்களைக் கொடுப்பது என்பது ஏற்புடையதன்று.

இதனால், அரசு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் பல எதிர்வினைகளே நடந்துள்ளன. ஆயுதம் கிடைத்த அதிகாரத்தில் சல்வா ஜுடும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களே பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

மேலும், என்னதான் சல்வா ஜுடும் அமைப்பில் உள்ள இளைஞர்களுக்கு அரசு பயிற்சியளித்தாலும் போலீஸôருக்கு, துணை ராணுவத்தினருக்கு அளிக்கப்படுவதுபோன்ற பயிற்சிக்கு இணையாக அது இருக்க முடியாது. மேலும், நக்ஸல்களின் தாக்குதலுக்கு எதிராக நவீன பயிற்சி பெற்ற போலீஸôரே திணறும்போது, அப்பாவி இளைஞர்கள் என்னதான் செய்ய முடியும்?

காவல் துறைக்குச் சவால் விடும் சமூக விரோதிகளை "என்கவுண்டர்' என்ற பெயரில் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே நடக்கின்றன. சட்டத்தைக் காக்க வேண்டிய காவல் துறை சட்டத்தைக் கையிலெடுத்து மிகப்பெரும் மனித உரிமை மீறலான இச் செயலை நியாயப்படுத்துகிறது. அதேபோலத்தான் சல்வா ஜுடும் அமைப்பை ஏற்படுத்திய சத்தீஸ்கர் அரசின் செயலும்.

நக்ஸல்களுக்கு எதிரான போரில் நன்கு பயிற்சி பெற்ற போலீஸ் படையை ஈடுபடுத்துவதுதான் நியாயம். மேலும், நக்ஸல் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இளைஞர்கள் மேலும் நக்ஸல் பக்கம் திரும்பாமல் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, இப்படி ஆயுதத்தைத் தூக்கி கையில் கொடுத்தால், அவர்கள் ஆயுத வாசனையை முகந்த பழக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் அதே துப்பாக்கியை அரசுக்கு எதிராகத் திருப்பக் கூடும்.

இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரும் உள்நாட்டுப் பிரச்னை நக்ஸல்கள்தான். நக்ஸல்களை ஒடுக்குவதற்காக ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உள்ளது. அதற்காக அப்பாவி மக்களின் உயிருடன் ஒருபோதும் விளையாடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.