நாணல்போல வளைவதுதான் சட்டமா?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று அனைத்து சட்டப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் நிலைமை அப்படியா உள்ளது? டான்சி நில வழக்க


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று அனைத்து சட்டப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் நிலைமை அப்படியா உள்ளது?
டான்சி நில வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததால் அந்த நிலத்தைத் திருப்பித் தருவதாக ஜெயலலிதா கூறியவுடன், அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு நிலத்தைத் தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் ஒதுக்கியது தவறு என்றவுடன் நிலத்தைத் திரும்பத் தருவதாக அறிவித்துவிட்டார்.
கார்கில் போரில் இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காகக் கட்டப்பட்ட வீடுகளை முறைகேடாகப் பெற்றதால் பதவி இழந்த பல அரசியல்வாதிகள் அவற்றைத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளனர். இதேபோல, ஒரு திருட்டு வழக்கில் பிடிபட்டவர் திருடிய பொருள்களை உடனே திருப்பித் தருவதாகத் தெரிவித்தால், எந்த நீதிமன்றமாவது ஏற்றுக் கொள்ளுமா?
இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள்தான். இவர்களாவது நாக்கில் நரம்பில்லாத, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப எப்போதும் மாறும் குணம் கொண்ட அரசியல் வியாபாரிகள். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளை மீறுவார்கள் போலிருக்கிறது.
நாட்டிலுள்ள உயர்ந்த பதவிகளுள் ஒன்றான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் உள்ள சி.ஜே. தாமஸ், தன் மீது புகார் எழுந்துள்ள நிலையிலும், தான் பதவியிலிருந்து விலக முடியாது என அறிவிக்கிறார். அரசியல்வாதிகளின் பிரச்னையில்தான் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அவரைக் காப்பாற்ற மத்திய அரசும் அவருடைய நியமனத்தை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்கிறது.
ஆட்சி அதிகாரத்தை விரும்பாமலும் கூட்டணிக்குப் பயப்படாமலும் இருந்திருந்தால் உலகின் மிகப்பெரிய ஊழலான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்தபோது சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கும்.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் பதவியில் இருந்த அதிகாரி ஒருவரிடம் இருந்து பல கிலோ தங்கம், பல கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதைப்பார்த்து, அரசியல்வாதிகளே ஆச்சரியப்பட்டனர். அதிகாரியிடமே இவ்வளவு என்றால் அனுமதி தந்த அமைச்சரிடம் எவ்வளவு இருக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கே விட்டுவிட வேண்டியதுதான்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ராசா, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்காவிட்டால் மக்களுக்கு பிராட்பேண்ட் விலை குறைந்திருக்காது என்கிறார் முதல்வர் கருணாநிதி. எதுவுமே முதலில் வரும்போது விலை அதிகமாக இருக்கும். போட்டி என வரும்போதுதான் விலை குறையும் என்ற அரிச்சுவடிப் பாடம் தெரியாதவரா முதல்வர் கருணாநிதி?
விருப்புரிமை ஒதுக்கீட்டில் தனக்குத் தலைவணங்கும் அதிகாரிகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றால், மக்கள் மன்றத்தில் இலவசத்தை அள்ளிவிட்டு வாக்குகளை வாங்கி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரலாம் என்ற ஆசைதானே தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தக் காரணம்? 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததை ராசா ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டால் நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றம் விட்டுவிடுமா?
ஜெயலலிதா, எடியூரப்பா, அசோக் சவாண், சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட அரசியல்வாதிகளும், சிறந்தவர் என தனக்குத்தானே சான்றிதழ் வழங்கி வீட்டுமனை பெற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகளின் நம்பிக்கை பெற்ற அதிகாரிகளும் தாங்கள் பெற்றது தவறென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் பெற்றதைத் திரும்பக் கொடுத்துவிட்டால், நீதிமன்றமும் அரசும் அவர்களுக்குத் தண்டனை வழங்காமல் விட்டுவிடுமா?
சட்டத்தின் முன்பு அனைவரும் சமமென்றால் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகளுக்கும், அவர்களுக்குத் துணை புரியும் அதிகாரிகளுக்கும் யார் தண்டனை வழங்குவது?
சட்டங்கள் கடுமையாக உள்ள அரபு நாடுகளிலோ இதுபோல முறைகேடுகள் நடந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிப்பார்கள் அல்லது கல்லால் அடித்துக் கொல்வார்கள். சீனாவிலோ குறைந்தபட்சம் மரண தண்டனை கிடைக்கும். ஆனால், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி முறைகேடுகளைத் தொடர்கின்றனர்.
இதனால்தான் நாட்டின் மிக உயரிய அமைப்பான நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தியவர்களும் தண்டிக்கப்படவில்லை. மும்பையில் தாக்குதல் நடத்தி பிடிபட்ட பயங்கரவாதி கசாப் கூட, தான் ஓர் அப்பாவி என்கிறார்.
சாதாரணமாக அரசுக்கோ, வங்கிக்கோ சில ஆயிரம் பாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், பல கோடி பாக்கி வைத்துள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அவர்களின் பின்புலத்தில் செயல்படுபவர்களின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே, ஏன்?
சமீபகாலமாக ரூ. 500, ரூ. 1,000 லஞ்சம் பெறுபவர்களைக் கைது செய்ய மறைந்திருந்து நடவடிக்கை எடுக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை. அதேசமயம், பல கோடி முறைகேடு செய்ததை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்திய பின்னும் அரசு பூசி மெழுகுவது ஏன்?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வெறும் வாசகமாக இல்லாமல், குற்றத்துக்கான தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும். இல்லாவிட்டால் எகிப்துபோல மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் இந்தியாவிலும் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...