ஒருவர் பொறை... இருவர் நட்பு!
யாதும் ஊரே; யாவரும் கேளிர்'' என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. இம்மண்ணில் வாழும் உயிர்களனைத்தும் நேசத்துக்குரியவை என்பதை உணர்ந்துதான் வள்ளலாரும் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என வழிமொழிந்த


யாதும் ஊரே; யாவரும் கேளிர்'' என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு.
இம்மண்ணில் வாழும் உயிர்களனைத்தும் நேசத்துக்குரியவை என்பதை உணர்ந்துதான் வள்ளலாரும் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என வழிமொழிந்துள்ளார்.
தமிழர்களின் நேச உணர்வு ஜாதி, மதம், இனம் எல்லைகளைக் கடந்தது என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையில்லை.
மானுடம் தழைக்க இன்றியமையாதது மனிதநேயம் என்பதை உலகுக்கு உணர்த்தியதில், தமிழர்கள் எவருக்கும் சளைத்தவருமில்லை என்பதுதான் இதுவரையில் நமக்குள்ள மிகப் பெரும் பெருமை.
ஆனால், சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழர்கள் தமது தனித்த அடையாளத்தை இழந்து வருகின்றனரோ என்ற அச்சம் மேலிடுகிறது.
ஒவ்வொரு பிரச்னையையும் தமது பண்பாடு, நாகரிகம் என்ற தளங்களில் இருந்தே தமிழர்கள் அணுகி வந்துள்ளனர். ஆனால், அவற்றை மறந்த நிலையிலேயே இப்போதைய இளந்தலைமுறையினரின் அணுகுமுறையும், செயல்பாடும் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
ஆக, எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும், தன் பண்பாட்டு நிலையிலிருந்து மாறாமலே அப்பிரச்னைகளை நம் முன்னோர் அணுகியிருக்கிறார்கள் என்பதே உண்மை.
உணர்ச்சிக்கு ஆட்படாமல் தர்மத்தின் வழி நின்று, தவறுக்குக் காரணம் தாம்தான் எனத் தெரிய வந்ததால், தமக்குத்தாமே கூட தண்டனை கொடுத்துக்கொண்ட மன்னர் கலாசாரத்துக்குச் சொந்தமானவர்கள் நாம்.
ஆனால், இப்போது நடப்பது என்ன? எந்தப் பிரச்னை என்றாலும் அதை தமிழர்கள் அறிவுப்பூர்வமாக அணுகுவதை விட்டுவிட்டு உணர்ச்சிப்பூர்வமாகவே அணுகும்போக்கு அதிகரித்து வருகிறது.
கட்சிப் பிரச்னை முதல் கடல் தாண்டிய பிரச்னை வரையில் எதற்கெடுத்தாலும், தீக்குளித்து தற்கொலை செய்யும் வழக்கம் வீரம், தியாகம் எனும் பெயரில் ஊக்குவிக்கப்படுகிறது. இது இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழருக்கான புதிய தனிக்கலாசாரமாகி விட்டது துரதிருஷ்டவசமானதே!
அடுத்ததாக, சிறிய பிரச்னை என்றாலும், அதைப் பூதாகரமாக்குவது, அதன் மூலம் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது என்ற நிலையிலே நம்மில் பெரும்பாலானோர் நடந்துகொள்கின்றனர்.
வீடு எரிகிற போது, அதை அணைக்கும் வழியைப் பார்ப்பதை விடுத்து, அத்தீயில் எண்ணெய் வார்ப்பது போல நடப்பது எந்தவகையில் நியாயம்?
தமிழரின் வீரத்தையும், போரையும் எடுத்துக்காட்டி பேசும் தலைவர்கள், அந்த வீரத்துக்கும், போருக்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் கொடுத்த விலையைப் பற்றி சிந்திக்காதது ஏனோ?
ஜனநாயக அமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்குவதுபோலவும், சட்டத்தையே தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவது போலவும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றியதாகக் கூறப்படும் மூத்த தமிழ்க்குடிகள் நடந்துகொள்ளலாமா?
ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு பிரச்னையும் ஏற்படும்போது, அதில் தங்களது பங்களிப்பைப் பதிவு செய்யும் போக்கிலேயே அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடந்துகொள்கின்றன.
உள்ளூர் பிரச்னை முதல் உலகப் பிரச்னைகள் வரையில் இப்போதெல்லாம், ஊடகங்கள் முன்னிலையிலேயே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது சிலர், வன்முறையில் ஈடுபட்டு தங்களது வீரபிரதாபங்களை ஊடகக் காட்சியாக்குகின்றனர். இந்தக் காட்சிகள் எதிர்த்தரப்பினரை எந்த அளவுக்குப் பாதிக்கும், அதனால், எதிர்ப்பகுதியில் இருக்கும் நமது அப்பாவிகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
"திரைகடலோடியும் திரவியம் தேடு' எனக் கூறிவிட்டு, அவர்களுக்கு சங்கடம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வது நியாயமா? ஆம்! இப்போது தனிமனிதரின் வீட்டுப் பிரச்னை முதல் வீதிப் பிரச்னைகள் வரை எல்லாமே அரசியல் மயமாகிவிட்டது. அதில் அப்பாவிகள் பலியிடப்படுகின்றனர். இப்போக்கு கேரளமாகட்டும், மகாராஷ்டிரமாகட்டும், தமிழகமாகட்டும்... ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
அரசியல் தாண்டிய சிந்தனை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல உண்டு.
மதுரை மாவட்டம், உத்தபுரம், கீரிப்பட்டி, பாப்பாபட்டி என பல ஊர்களில் சிறிய அளவிலான ஜாதிப் பிரச்னைகள் கடந்த பல ஆண்டுகளாக பெரிதாகப் பேசப்பட்டன. தேசிய அரசியல் கட்சித் தலைவர்களே பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் வகையில் பிரச்னை பெரிதாக்கப்பட்டது. பல அரசியல் கட்சியினரும் இப்பிரச்னையைத் தீர்க்க குரல் கொடுத்துவந்தனர்.
ஆனால், இப்போது அந்த ஊர் மக்கள் அரசியல் கலவாத பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்குள்ளேயே அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆன்மிகவாதி, போலீஸ் அதிகாரி என சிலரும், அந்த அமைதிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என கிராமத்தில் கூறப்படும் பழமொழி போலவே, பரிதாபத்தில் இருந்த அந்த ஊர் மக்கள், இப்போது அரசியல் இல்லாத தீர்வால் அமைதியாக வாழ்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதை அம்மக்கள் நிரூபித்தும் உள்ளனர். "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போலவே இம்மக்களது அமைதி ஒப்பந்த வழியை அனைத்து மாநில மக்களும் பாடமாக எடுத்துக்கொள்வது அவசியம்.
ஆம்... "விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போக நினைப்பவர் எப்போதும் விட்டுக்கொடுப்பதில்லை' என்பதையே இந்த ஊர் மக்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இதில் யார் விட்டுக்கொடுக்க வேண்டும், யார் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தலைவர்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் இப்போது இல்லை என்பதே நாட்டின் துரதிருஷ்டம். தலைவர்கள் இல்லாவிட்டால் என்ன? மக்கள் மனது வைத்தால் மாறாதது உண்டோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...